அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!

த்ரில்லர் படங்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினாலும், அந்த அலையைப் பின்தொடர்ந்து பெருமளவில் திரைப்படங்கள் வெளியாகச் சாத்தியம் கிடையாது.

ஏனென்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ‘த்ரில்’ குறையாமல் கதை சொல்வது மிக அரிதாகவே நிகழும் அல்லது அதற்காகக் கடுமையாகப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

சமீபத்திய ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில், மலையாளத்தில் ‘அஞ்சாம் பதிரா’, தமிழில் ‘போர்தொழில்’ போன்ற மிகச்சிலவே அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கின்றன.

இவை இரண்டுமே தொடர் கொலைகள் குறித்த காவல் துறையினரின் புலனாய்வை மையப்படுத்தியவை.

அந்த வரிசையில் இடம்பெறத்தக்கது எனும் எதிர்பார்ப்பினை உண்டுபண்ணியது ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ ட்ரெய்லர்.

டொவினோ தாமஸ், சித்திக், ஷாதிக், பாபுராஜ், இந்திரன்ஸ், வி.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தைப் புதுமுகமான டார்வின் குரியகோஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.

சரி, வழக்கமான த்ரில்லர் படங்களில் ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ எவ்வகையில் வேறுபடுகிறது? இப்படம் நமக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறதா?

இரு வேறு வழக்குகள்!

‘அன்வேஷிப்பின் கண்டதும்’ திரைப்படமானது இரு வேறு இளம்பெண்களின் கொலைகள் குறித்த புலனாய்வு குறித்துப் பேசுகிறது.

திருவாங்கூரின் மத்தியப் பகுதியில், கோட்டயம் வட்டாரத்தில் லவ்லி என்ற கல்லூரிப் பெண் காணாமல் போகிறார்.

அவரது தந்தை மாதன் இது குறித்து போலீசில் புகார் செய்கிறார்.

புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாராயணன் (டொவினோ தாமஸ்) அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார்.

அந்த விசாரணையில், அப்பெண் கல்லூரியில் ‘ஹால் டிக்கெட்’ வாங்கிவிட்டு ஊர் திரும்பியதும், வீட்டுக்குச் செல்லும் வழியில் பாதிரியார் இல்லத்திற்குச் சென்றதும் தெரிய வருகிறது.

ஆனால், பாதிரியாரை போலீசார் விசாரிக்கக் கூடாது என்று உள்ளூரில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இரு வேறு சாதியினர் அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

அதனை மீறி அவரைச் சந்திக்கச் செல்கிறார் ஆனந்த். ஊர் மக்கள் சிலர் அவரைத் தடுக்கின்றனர். அப்போது ஏற்படும் களேபரத்தைத் தொடர்ந்து, அந்த வழக்கு சிறப்பு படை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த நிலையில், அப்பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் இருந்து லவ்லியின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அது தொடர்பாக, முன்னாள் ரவுடி ஒருவரையும் கைது செய்கின்றனர் போலீசார்.

ஆனாலும், அந்த பாதிரியாரின் வீட்டுக்குள் சென்று சில தடயங்களைக் கைப்பற்றி, உண்மையான குற்றவாளிகள் குறித்த தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (சித்திக்) சமர்ப்பிக்கிறார் ஆனந்த்.

அதன்பிறகு நடக்கும் சில நிகழ்வுகளால், அவரும் அவரைச் சார்ந்து செயல்பட்ட மூன்று காவலர்களும் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர்களைப் பணியில் அமர்த்துகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

இம்முறை, ஆறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஸ்ரீதேவி எனும் இளம்பெண் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடுகிறார்.

மூன்று காவலர்களுக்கு அந்த வழக்கை விசாரிப்பதில் சம்மதம் இல்லை. இருந்தாலும், ஆனந்துடன் கிளம்பி அந்த கிராமத்திற்குச் செல்கின்றனர்.

தடயங்கள், சாட்சிகள் இருந்தும் விசாரணை நிறைவு பெறாத கொலை வழக்குகளுக்கு மத்தியில், ஆறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு குற்றத்தில் ஆனந்த் அண்ட் கோவினால் துப்பு துலக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘அன்வேஷிப்பின் கண்டதும்’.

தொண்ணூறுகளில் நிகழ்வது போன்று இக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதும், இப்போதிருப்பது போன்று தொழில்நுட்பங்கள் வளராத அக்காலகட்டத்தில் காவல் துறையினரின் விசாரணை எவவாறு இருந்தது என்று சொல்லப்பட்டிருப்பதும் இப்படத்தின் சிறப்பம்சங்கள்.

செறிவான உள்ளடக்கம்!

காவல் துறையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் விசாரணை நடைமுறைகள் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருக்கும்.

அந்த வகையில், மூத்த அதிகாரிகளோடு புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆனந்துக்கு உள்ள முரண் இத்திரைக்கதையின் தொடக்கத்திலேயே தெளிவாகச் சொல்லப்படுகிறது.

புத்தகங்கள், திரைப்படங்கள் வாயிலாகப் பெற்ற அறிவோடு ஒரு கொலை வழக்கு விசாரணையை அணுகுவதற்கும், வெறுமனே துறை சார்ந்த அனுபவங்களை மட்டுமே கொண்டு விசாரிப்பதற்கும் வேறுபாடு உண்டு.

‘போர்த்தொழில்’ படத்திலே காட்டப்பட்ட அந்த விஷயத்தை இதிலும் கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் டார்வின் குரியகோஸ்.

இத்திரைக்கதையின் முன்பாதியும் பின்பாதியும் இரு வேறு ‘எபிசோடு’களாக தெரியும். ஆனால், இரண்டிலுமே அடிப்படையான அம்சங்கள் சில உண்டு.

பாதிப்புக்குள்ளான பெண்களின் சமூக, பொருளாதாரப் பின்னணி வலுவாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் திரைக்கதையாசிரியர் ஜினு ஆபிரகாம் – இயக்குனர் டார்வின் குரியகோஸ் இணையின் ‘பக்குவமான அணுகுமுறை’ திரையில் பளிச்சிடுகிறது.

அதேபோல, இரு கதைகளிலும் முக்கியக் கதாபாத்திரங்களின் முடிவு சிலருக்கு உவப்பில்லாததாக அமையலாம். அதனை உற்றுக் கவனித்தால், அடுத்த பாகத்திற்கான தொடக்கம் மறைந்திருப்பதைக் காணலாம்.

மிக யதார்த்தமாகக் கதை நிகழும் களங்களையும் கதாபாத்திரங்களையும் காட்டியதன் வழியாக, காவல் துறை விசாரணை செயல்முறைகளை நேரில் காணும் உணர்வைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

அதற்கு கௌதம் சங்கரின் ஒளிப்பதிவு உதவியாக அமைந்துள்ளது. அந்தந்த இடங்களில் இருக்கும் இயற்கை ஒளியில் படம்பிடிக்கப்பட்டது போன்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன பெரும்பாலான காட்சிகள்.

சைஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பு, ஆங்காங்கே முன்பின்னாகச் சொல்லப்படும் காட்சிகளைத் தாண்டி கதையைக் கோர்வையாக நாம் உணர வகை செய்திருக்கிறது.

போலவே தயாரிப்பு வடிவமைப்பாளர் திலீப் நாத்தின் பணி நேர்த்தி, முப்பதாண்டுகளுக்கு முன்பு கதை நிகழும் இடங்களுக்குச் சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆள் அரவமற்ற வனப்பகுதிகள், ஆங்காங்கே இருக்கும் வீடுகள் என்பதனை உணர்த்தும் வகையில் அழகாகப் பின்னணி இசையோடு ஒன்றிணைந்திருக்கிறது நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு.

சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கும் பின்னணி இசை, காட்சியாக்கத்தை மீறி நம்மைத் திரையோடு பிணைக்கிறது. அதுவே, திரைக்கதையுடன் நாம் இறுக்கமாக ஒன்ற வழி வகுக்கிறது.

இது போக தொண்ணூறுகளில் வாழ்ந்தவர்களைப் பிரதிபலிக்கும் வகையிலான ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, பேச்சு வழக்கைக் கையாண்டிருப்பது இப்படத்தின் உள்ளடக்கத்தினைச் செறிவானதாக மாற்றுகிறது.

நடிப்பைப் பொறுத்தவரை, இதில் வரும் அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றனர். குறிப்பாக, தனது இயலாமையை நினைத்துப் பொருமும் இடங்களில் டொவினோ தாமஸ் மிளிர்கிறார்.

அவருடன் வரும் போலீசாராக வினீத் தட்டில் டேவிட் உள்ளிட்டோர் சிறப்பாகப் பங்களிப்பைத் தந்துள்ளனர்.

‘சார், விசாரணை முடிஞ்சதா, இருக்குதான்னு சொன்னா அதுக்கேத்தபடி மளிகை சாமான்களை வாங்குவேன்’ என்று டொவினோவிடம் கேட்கும் நபர், இறுக்கமான திரைக்கதையையும் மீறி நம்மைச் சிரிக்க வைக்கிறார்.

இவர்கள் தவிர்த்து பாபுராஜ், சித்திக், சாதிக், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், பிரகாஷ் என்று மூத்த நடிகர்கள் அரை டஜன் பேர் தலைகாட்டியிருக்கின்றனர்.

இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நம்மூரிலும் இதனைப் பின்பற்றத் தொடங்கினால், தொண்ணூறுகளில் கோலோச்சிய பல கலைஞர்களை வேறு பரிமாணங்களில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

இதில் அர்த்தனா பினு உட்பட நான்கைந்து பெண் பாத்திரங்களே திரையில் முகம் காட்டியிருக்கின்றன.

அந்த வகையில், ஒரு ‘சேவல் பண்ணை’க்குள் நுழைந்த அனுபவத்தையே தருகிறது ‘அன்வேஷிப்பின் கண்டதும்’.

இயக்குனர் டார்வினுக்கு இது முதல் படம். ஆனால், அது துளியும் தெரியாமல் பார்த்துக்கொண்டதே அவரது சாமர்த்தியம்.

தனது சகாக்களைப் போல வெவ்வேறு வகைமை படங்களில் அவர் பணியாற்றும்போது அவரது திறமை கொண்டாடப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதற்கான தொடக்கம் என்று இதனை நிச்சயமாகக் கூறலாம்.

அரிதான விஷயங்கள்!

சாதீயத்தின் வேர் எந்தளவுக்குச் சமூகத்தை ஆட்டுவிக்கிறது என்பது இக்கதையில் அடிநாதமாக உள்ளது. அதேபோல, காவல் துறையில் தோல்வி அடைந்தவர்களாகக் கருதப்படுபவர்களை வெளிச்சத்தில் காட்டுகிறது இப்படம்.

குறிப்பிட்ட வட்டாரத்தில் நிகழும் குற்றமொன்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாதியினர், மதத்தினர் சம்பந்தப்படும்போது, அது தொடர்பான காவல் துறை விசாரணைக் குழுவில் அந்தந்த சாதியினரும் மதத்தினரும் ஈடுபடுத்தப்படுவதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறது இப்படம்.

அதன் பின்னிருக்கும் அரசியல் அழுத்தத்தையும் கூடத் தொட்டுச் செல்கிறது.

இந்த கதையில் வரும் இரண்டு கொலைகளிலும் குற்றவாளிகள் மிகச்சாதாரண மனிதர்களாகப் பொதுவெளியில் நடமாடுபவர்கள்.

அவர்கள்தான் என்று நாம் முன்னரே கண்டறிவது கடினம். அது போன்ற அரிதான சில விஷயங்கள் ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ படத்தில் உண்டு.

‘த்ரில்லர்’ வகைமை தாண்டி நல்லதொரு பொழுதுபோக்கு படத்திற்கான உள்ளடக்கத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் உவப்பானதல்ல; ‘பரபரப்பான திரைக்கதையோட, ஒரு கிளாசிக் படம் பார்க்கணும்’ என்பவர்களுக்கு ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ திருப்தி தரக்கூடும்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment