பருப்பு உணவுகளைக் கொண்டாடும் இந்தியச் சமையல்!

‘பருப்பில்லா கல்யாணம் உண்டா’, ‘சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பருப்பை விடாதே’ என்பது போன்ற பழமொழிகளைச் சொல்ல நம்மவர்களுக்குத்தான் தகுதி உண்டு.

காரணம், பருப்பு இல்லாமல் ஒருநாள் கூடச் சமையல் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதன் பயன்பாடு நம் வாழ்க்கை முறையோடு கலந்திருக்கிறது.

கார உணவுகள் என்றில்லாமல் இனிப்பு வகைகளிலும் கூடப் பருப்புகளைப் பயன்படுத்துவதே நமது வழக்கம்.

அதனால், நாம் பருப்பின் சிறப்பை உரக்கச் சொல்லிக் கொண்டாடுவதுதான் பொருத்தமானது.

சரி, அப்படிக் கொண்டாடும் அளவுக்கு என்ன பயன்களை விதைக்கின்றன பருப்புகள்?

உணவில் பருப்புகள்!

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை, பட்டாணி, பச்சைப்பயறு, கொள்ளு, மைசூர் பருப்பு, காராமணி உட்படப் பல்வேறு பருப்பு வகைகளைத் தினசரிச் சமையலில் நாம் பயன்படுத்துகிறோம்.

இதுபோக மொச்சை, நரிப் பயறு, வேர்கடலை, எள்ளு என்று அவ்வப்போது பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஏராளம்.

பருப்புகளில் அதிகளவு புரதச் சத்து உள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, நார்ச்சத்துகள் என்று அமைந்துள்ள பருப்பு வகைகளின் உள்ளடக்கம் ஊட்டத்தை வழங்குகிறது.

செரிமானம் சீராக, உடல் எடை கட்டுக்குள் இருக்க, கொழுப்புச்சத்து கரைய, இதய நோய் பாதிப்புகள் குறைய, உடல் திறன் அதிகரிக்கப் பருப்புகளை உணவில் சேர்க்க வேண்டும்.

ரத்த சோகையைத் தடுப்பது, கருப்பையை வலுப்படுத்துவது உட்படப் பலவிதமான பயன்கள் இவற்றினால் கிடைக்கின்றன.

வீட்டில் சிறுமிகள் பூப்பெய்தியவுடன், அவர்களுக்கு உளுந்தம்பருப்பு சோறும் உளுந்தங்களியும் கொடுக்கும் வழக்கத்தில் இருந்து நம் முன்னோர்கள் இது பற்றிய புரிதலைக் கொண்டிருந்தது தெரிய வருகிறது.

கடலை மிட்டாய், பொரிகடலை துவையல், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் செய்யப்பட்ட வடை என்று பலவிதமாகப் பருப்புகள் உணவில் பயன்படுத்தப்படுகின்றன.

பருப்பு வகைகளோடு வெல்லம், கருப்பட்டி மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சூயம், மோதகம், கொத்துருண்டை போன்ற இனிப்பு வகைகளையும் செய்யலாம். இவை உடனடிச் சக்திக்கு வழி வகுக்கும்.

அது எப்படி என்பவர்கள் புரதத்துடன் குளுக்கோஸ், சுக்ரோஸ் உள்ளிட்ட சர்க்கரை வகைகள் கலப்பதால் நிகழும் வேதி மாற்றங்கள் பற்றித் தனியே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே பருப்புகளை உணவில் பயன்படுத்துவது பழங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.

சொல்லப் போனால், ஆசியக் கண்டத்தில் இவற்றின் பயன்பாடு அதிகம். இங்கு அவை அதிகம் விளைகின்றன என்பது அதற்கான முக்கியக் காரணம்.

பருப்பின் பயன்கள்!

பருப்பு சாப்பிட்டால் ஆரோக்கியம். அது உண்மை என்பதைப் பல்லாண்டு காலப் பயன்பாட்டினால் நாம் உணரலாம். இவற்றைப் பயிரிடுவதன் மூலமாக மண்வளம் பெருகுகிறது என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

இன்றும் சில கிராமங்களில் இரண்டு போகம் நெற்பயிர் அறுவடை செய்தபிறகு கடலை, மொச்சை உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பதைக் காண முடியும்.

பயறு வகைகளால் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணில் அச்சத்து பொதியும் என்பது வேளாண் கண்டுபிடிப்பில் வெளிப்பட்ட உண்மை.

ஆனால், மண் வளம் காக்கப் பருப்பு வகைகள் விதைப்பது எனும் நடைமுறையை எப்போதோ பின்பற்றத் தொடங்கிவிட்டனர் நம் முன்னோர்கள்.

பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலைக் கொண்டிருப்பது, பயிரிடுதலின்போது பசுமைக்கூட வயுக்களை வெளியேற்றுவது, மண் வளம் பெருக்குவது, உணவு வீணாதல் மற்றும் கழிவுகளைக் குறைப்பது, நிலையான உணவு அமைப்புக்குப் பங்களிப்பது, ஆரோக்கியமான உணவுமுறையை அடைய உதவுவது என்று பலவிதங்களில் பருப்பு பலனளிக்கிறது.

பருப்பின் இருப்பு குறையாமல் பார்த்துக்கொள்வதன் மூலமாக, ஒரு வீட்டின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்பது நம்மில் பலரது நம்பிக்கை.

பருப்பின் சிறப்பு!

கடந்த 2016ஆம் ஆண்டானது, ஐநாவின் அங்கமாகத் திகழும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலமாக ‘சர்வதேச பருப்பு ஆண்டாக’க் கொண்டாடப்பட்டது.

2030ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சியை அடையும் இலக்கில் பருப்பு வகைகளுக்கு இடமளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

உணவு உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் சிறப்பான வாழ்க்கை முறை, சுற்றுச் சூழலுக்கு வகை செய்யும் பருப்புகளின் முக்கியத்துவத்தை, அவை குறித்த விழிப்புணர்வை அறியாதோர்க்கு ஊட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று ‘சர்வதேச பருப்புகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

வேளாண்மையில் மண் வளத்தையும் சூழலமைப்பையும் காக்கப் பருப்பு வகைகளைப் பயிரிடுவது அவசியம் என்ற நோக்கத்தையும் இது வலியுறுத்த உதவுகிறது.

குழந்தைகளுக்கு உணர்த்துவோம்!

இன்றைய தினம் பல பள்ளிகளில் நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக பயறு வகைகளைத் தின்னக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது.

பெற்றோர்கள் மரபு சார்ந்த உணவுகளையே கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள் அனைவருக்குமே பயறு வகைகள் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.

சுண்டல், மோதகம், களி போன்ற உணவு வகைகள் பழமையானது என்று சொல்லி மறுப்பதும் சில வீடுகளில் நிகழும். அப்படிப்பட்ட சூழலில் அக்குழந்தைகளுக்குப் பயறு வகைகளின் முக்கியத்துவத்தை அனுபவரீதியாகப் புரிய வைக்கலாம்.

வீட்டின் கொல்லைப்புறத்தில் பயறுகளைப் புதைத்து வைத்து, அவை வளர்வதைச் சுட்டிக்காட்டி, அதன் வழியே அவற்றின் இன்றியமையாத்தன்மையை உணர்த்தலாம்.

ஒரு பாலீத்தீன் அல்லது கண்ணாடி பாட்டிலில் புதைத்த பயறு முளைத்துப் பெரிதாவதைக் காட்டும் ‘டைம் லூஃப் வீடியோ’ இன்னும் சுருக்கமாக அதனைப் புரிய வைக்கும்.

காய்கறிச் சந்தை அல்லது கடைகளுக்கு அழைத்துச் சென்று விதவிதமான பயறு வகைகளைக் காட்டி விளக்கம் தரலாம்.

உதாரணமாக, மளிகைக்கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் காண்பதைவிட, பச்சைப் பட்டாணியை மொத்தமாக வாங்கி அவற்றைத் தனியே பிரித்தெடுப்பதைச் சொல்லித் தருவது அவர்களது புரிதலை இன்னும் இலகுவாக்கும்.

இனிப்பு வகைகளில் பருப்புகளைப் பயன்படுத்துவதும், குழந்தைகளுக்குப் பிடித்தமான சூப், சாஸ் மற்றும் பர்கர் போன்ற உணவுகளில் பயறுகளைச் சேர்ப்பதும், பயறு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் குழந்தைகளுக்குப் பிடித்தமான வடிவங்களைச் செய்து காட்டுவதோ, இன்னும் கூடுதலாகப் பலன்களைத் தரும்.

நடுத்தர வயது மற்றும் முதுமையை எய்தியவர்களுக்குப் பருப்பு வகைகள் சாப்பிடுவதால் வாயுப் பிரச்சனை உள்ளிட்ட சில தொந்தரவுகள் ஏற்படலாம்.

ஆதலால், அவர்கள் அதனைக் குறைவாக உட்கொள்வதில் ஒரு அர்த்தமிருக்கிறது.

ஆனால், குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியில் ஆரோக்கியமானவர்களாக விளங்கப் பருப்புகளைச் சரியான அளவில் தருவது மிக முக்கியம்.

இதுவரை பருப்பின் சிறப்பை அறியாதவர்கள், இனிமேலாவது அதனைச் செயல்முறைப்படுத்திப் பலன்களைப் பெற வேண்டும் என்பதே ‘சர்வதேச பருப்பு தின’த்தின் நோக்கம்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment