– எழுத்தாளர் சாவியை நோகடித்த நிகழ்வு
சொந்த வீடு கட்டும் ஆசை எல்லோருக்கும் இருப்பது வழக்கம். அதுபோல், எழுத்தாள வர்க்கத்துக்கும் சொந்த பத்திரிகை நடத்தும் எண்ணம் மனதில் ஓரத்தில் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
‘விகடன்’ மணியன் ‘இதயம் பேசுகிறது’ ஆரம்பித்தார். அதுபோல் எழுத்தாளர் சாவியும், தன் பெயரிலேயே ‘சாவி’ என்ற வார இதழை தொடங்கினார்.
சொற்ப பக்கங்களில் 35 காசு என விலை நிர்ணயித்து ஓரிரு வாரத்தில், மற்ற பிரபல வார இதழ்கள் போல் 75 காசு என விலையை அதிகரித்து, பக்கங்களையும் கூட்டினார்.
திறமையான ஆட்களைத் தன்னிடம் வைத்திருந்தார். ‘சாவி’ யின் விற்பனையும் எகிறியது.
திருநெல்வேலியில் ‘சாவி’ வாசகர் வட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, 80-களில் நெல்லைக்கு வந்தார் சாவி.
அவருடன் எழுத்தாளர் சுஜாதா, ஓவியர் ஜெயராஜ் உள்ளீட்ட குழுவினரும் வந்திருந்தனர்.
நெல்லையில் உள்ள பிரபல ஓட்டலின் கூட்ட அரங்கில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
திரளான கூட்டம்.
நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து வாசகர்கள் வந்து இறங்கி இருந்தனர்.
கூட்ட அரங்கில் வேறொரு கூட்டம் ‘இறக்கி விடப்பட்டிருப்பது’ பின்னர் தான் தெரிய வந்தது.
மேடையில் பேச்சாளர்கள் (எழுத்தாளர்கள்) உரை நிகழ்த்த ஆரம்பிக்கும்போது ‘ஹோ’ என இரைச்சல் இடுவதும், நாற்காலிகளை வீசி கலாட்டா செய்வதுமாக ஒரே ரகளை.
இரண்டு மணி நேரம் இதே ஆர்ப்பாட்டம். யாராலும் பேச முடியவில்லை. அமைதி காக்குமாறு சாவி வேண்டினார். கெஞ்சினார். கும்பிடு போட்டார். அந்தக் கூலிப்படை கேட்பதாக இல்லை. வெறுத்துப்போய் மேடையை காலி செய்தனர் சாவி குழுவினர்.
நான் அப்போது ‘கோலார்’ என்ற கையெழுத்து பத்திரிகையைக் கல்லூரி நண்பர்களுடன் நடத்திக் கொண்டிருந்தேன்.
நெல்லையில் நடந்த கூத்தையும், எனது ‘கோலார்’ இதழை சாவியிடம் காட்ட முடியாத ஆதங்கத்தையும் அவருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தேன்.
அதனை கேள்வி-பதில் பக்கத்தில் பிரசுரித்த சாவி “எல்லாம் தான் கோளாறாக முடிந்து விட்டதே?’’ என பதில் சொல்லி தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
இன்னொரு கேள்விக்குச் சாவி அளித்த பதிலை இங்கே குறிப்பிட வேண்டும்.
அப்போது ‘சாவி’ இதழின் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் செயல்பட்டது.
“லாட்ஜில் உங்கள் ஆபீஸ் செயல்படுகிறதாமே?’’ என வாசகர் ஒருவர் நக்கலாக கேட்டிருந்தார்.
“லாட்ஜில் ஆபீஸ் இயங்கலாம், ஆபீசுக்குள் ‘லாட்ஜ்’ இயங்கக்கூடாது’’ என பதில் அளித்து, அந்த வாசகருக்கு குட்டு வைத்திருந்தார் சாவி.
– பி.எம்.எம்.