‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்கின்ற முழக்கம் ஏற்கனவே தமிழக மண்ணில் முன் வைக்கப்பட்ட முழக்கம் தான்.
(வட்டி-வரி-கிஸ்தி) எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இரைத்தாயா?” என்கின்ற வீராவேசமான வசனங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கேட்டவர்கள் தான் நாம்.
இதேபோன்ற சொற்களை மாநில சுயாட்சி கோரிக்கையின்போது தமிழகத்தில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணாவிலிருந்து துவங்கி, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர் உட்பட பலர் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
மெரினா கடற்கரையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார்கள்.
அன்று தமிழ்நாட்டில் மட்டுமே எதிரொலித்த மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைக்குரல் தற்போது இந்தியா முழுக்க பரவலாக பல மாநிலங்களில் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் துவங்கி கர்நாடகம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வரி வருவாயில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரியில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சில பகுதிகளுக்கும், மத்திய அரசின் வரிப் பங்களிப்பு குறைந்திருக்கிறது என்பதே இவர்களுடைய முக்கியக் குற்றச்சாட்டு.
மத்திய அரசு மிகவும் வெளிப்படையாக மாநில அரசுக்கு திருப்பித்தரும் வரித் தொகை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதன்படியே உத்திரப்பிரதேச அரசு மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் அளித்தால், அதற்கு பதிலாக மத்திய அரசு அதே மாநிலத்திற்கு கொடுக்கும் வரித்தொகை இரண்டு ரூபாய் இரண்டு பைசா.
அதேசமயம் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அதே மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் தொகை வெறும் 26 பைசா மட்டுமே.
வரி விதிப்பில் மத்திய அரசு காட்டும் இத்தகைய பாரபட்சத்தையே பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் எதிர்க்கின்றன. ஆர்ப்பாடட்டம் நடத்துகின்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு பல மாநில முதல்வர்கள் ஒன்றுசேர்ந்து மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை வலுவாக எழுப்பியிருக்கிறார்கள்.
“நிதி உரிமை பறிப்பு என்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்குச் சமம்” என்று தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்.
பலவற்றில் ஒரே நாடு ஒரே கொள்கை என்று தேசியம் பேசும் அதே மத்திய அரசுதான் மாநிலங்களுக்கிடையில், இத்தகைய வரி பாரபட்சத்தை தேசியம் என்கின்ற அர்த்தத்திற்கு எதிராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அண்மையில் கூட, சென்ற ஆண்டு இறுதியில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கான நிவாரணமாக 37 ஆயிரம் கோடியை தமிழக அரசு கேட்டபோதும் இதுவரை மத்திய அரசு தரவில்லை.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டிற்கான எந்த நிதி ஒதுக்கீடும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை அவ்வளவு ஏன் இதே பாஜக அரசால் முன்பு மதுரையில் துவக்கப்பட இருப்பதாகச் சொன்ன எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு கூட வழங்கப்படவில்லை.
இப்படி எல்லாவற்றிலும் தமிழகத்திற்கும் பிற தென்மாநிலங்களுக்கும் வரி விதிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டு கொண்டிருக்கும்போது மாநில உரிமைக் குரல்கள் எழுவதை எப்படித் தவிர்க்க முடியும்?
வட மாநில மக்கள் தங்கள் பிழைப்புத் தேடி கோடிக்கணக்கான எண்ணிக்கையில், இதே தென் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இத்தகைய பாரபட்சம் காட்டுவது தேசியக் கொள்கைக்கு முரணாகத் தோன்றாதா?
ஒரே நாடு என்கின்ற முழக்கத்திலிருக்கிற சமத்துவத்தன்மையை ஒரே வரி என்பதிலும் வெளிக்காட்டுங்கள்.
– யூகி
#வடக்கு #தெற்கு #வீரபாண்டிய_கட்டபொம்மன் #அறிஞர்_அண்ணா #கலைஞர் #கருணாநிதி #மக்கள்_திலகம் #எம்ஜிஆர் #கெஜ்ரிவால் #கர்நாடகம் #கேரளம் #தமிழகம் #மத்திய_அரசு #மாநில_அரசு #வரி #ஜிஎஸ்டி #ஆந்திரப்பிரதேசம் #டெல்லி #வட_மாநிலம் #உத்திரப்பிரதேசம் #தமிழ்நாடு_அரசு #ஸ்டாலின் #பாஜக #north #south #anna #kalaignar #mgr #kejriwal #karnataka #tn #kerala #state_and_central_govt #tax #gst #andra #up #bjp