1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படம், சக்கைப் போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிந்தாமணி கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அவர் நன்றாக நடித்ததால், அவருக்கு அப்போது முதல் பரிசு கிடைத்தது.
இந்த நாடகத்தை நடத்திய ஆசிரியர், “நீ அழகாக இருக்கிறாய். நடிப்பும் நன்றாக வருகிறது. எனவே, சினிமா உலகிற்கு நீ சென்றால் புகழ் பெறமுடியும்” என்று எஸ்.எஸ்.ஆரிடம் கூறினார்.
“நீ இனி படிக்க வேண்டாம். நடிக்கப்போ” என்று கூறி, நாடக கம்பெனியில் சேர தன் செலவில் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு ‘மகாபாரதம்’ நாடகத்தில் சகாதேவனாக நடிக்கத் தொடங்கினார்.
இதில், திரவுபதியாக (பெண் வேடத்தில்) நடித்தவர் ஏ.பி.நாகராஜன்.
தன் மகன் நாடக நடிகனாகி விட்டானே என்ற வெறுப்பில் இருந்த எஸ்.எஸ்.ஆரின் தந்தை, எஸ்.எஸ்.ஆரின் நடிப்பைப் பார்த்து பாராட்டினார்.
இது எஸ்.எஸ்.ஆருக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.
அதற்கு முன், எப்படியாவது தனது மகனை தன்னைப்போல அரசாங்க அதிகாரியாக ஆக்கிவிட வேண்டும் என்று எஸ்.எஸ்.ஆரின் தந்தை லட்சியமாகவே வைத்திருந்தார்.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தந்தை பெரியாருடனும், அறிஞர் அண்ணாவுடனும் பழகும் வாய்ப்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கிடைத்தது.
19-11-1943-ல் ஈரோட்டில் ‘சந்திரோதயம்’ நாடகத்தை நடத்த அண்ணா வந்தார்.
அப்போது அந்த நாடகத்தில் அண்ணாவும் நடிக்க வேண்டி இருந்தது. எனவே ஏற்கனவே அங்கு நாடகம் நடத்தி வந்த குழுவில் இருந்த எஸ்.எஸ்.ஆர். அண்ணாவுக்கு ‘மேக்கப்’ போட்டார்.
தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்தாலும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது எஸ்.எஸ்.ஆருக்கு. எனவே, நாடக கம்பெனியில் இருந்து விலகி, சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.
சென்னைக்கு வந்த நாளில் ‘அபிமன்யு’ படத்தில் அபிமன்யுவாக நடிக்க எஸ்.எஸ்.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘மேக்கப் டெஸ்ட்’ கூட முடிந்துவிட்டது.
இந்த நிலையில், “எஸ்.எஸ்.ஆர். எங்கள் நாடகக் குழுவில் இன்னும் 7 மாதம் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது” என்று, டி.கே.எஸ். நாடகக் குழுவினர் தெரிவித்தனர். இதனால், அபிமன்யு படத்திலிருந்து எஸ்.எஸ்.ஆர். விலக நேரிட்டது.
இதைத் தொடர்ந்து, ‘அபிமன்யு’ படத்தில் எஸ்.எம்.குமரேசன் நடித்தார். அர்ச்சுனனாக எம்.ஜி.ஆர். நடித்தார்.
அதன் பிறகு சேலம் மூர்த்தி பிக்சர்சின் ‘ஆண்டாள்’ படத்தில் எஸ்.எஸ்.ஆர். பின்னணிப் பாடகரானார்.
“இன்ப உலகிலே மன்மதன் பூங்கனை” என்ற பாடலைப் பாடினார்.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், ஏவி.எம்.முடன் சேர்ந்து ‘பராசக்தி’ படத்தை தயாரித்தார்.
கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசனுடன், எஸ்.எஸ். ராஜேந்திரன் புதுமுகமாக அறிமுகமானார்.
சிவாஜி கணேசனின் அண்ணனாக ‘ஞானசேகரன்’ என்ற வேடத்தில் எஸ்.எஸ்.ஆர். சிறப்பாக வசனம் பேசி நடித்தார்.
குறிப்பாக, சிவாஜி கணேசனைப் போல் தெளிவாகவும், உணர்ச்சியுடனும் வசனம் பேசும் ஆற்றல் ராஜேந்திரனுக்கு இருந்தது.
1952-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த ‘பராசக்தி’, தமிழ்ப் பட உலகில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்ததுடன், அதில் இடம்பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ மகத்தான வெற்றிபெற்றது. பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் எஸ்.எஸ்.ஆர்.
எம்.ஏ.வி. பிக்சர்சார் குறைந்த செலவில் தயாரித்த ‘முதலாளி’ படம், மாபெரும் வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது.
‘பராசக்தி’யில் அறிமுகமான சிவாஜிகணேசனும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து நடித்தனர். அவற்றில் முக்கியமானது ‘மனோகரா.’
‘பராசக்தி’க்குப் பிறகு சிவாஜிகணேசன் – கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மகத்தான வெற்றிப்படம் ‘மனோகரா’.
அதில் சிவாஜியின் உயிர்த்தோழனாக ராஜேந்திரன் உணர்ச்சிகரமாக நடித்தார்.
அறிஞர் அண்ணா கதை – வசனம் எழுதிய ‘சொர்க்க வாசல்’ படத்தில் ‘நடிப்பிசைப் புலவர்’ கே.ஆர்.ராமசாமியுடன் எஸ்.எஸ்.ஆர். சேர்ந்து நடித்தார்.
இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமியின் ஜோடி பத்மினி. ராஜேந்திரனின் காதலி அஞ்சலிதேவி. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இதே நேரத்தில் பீம்சிங் டைரக்ஷனிலும், கருணாநிதி கதை – வசனத்திலும் உருவான அம்மையப்பனில் கதாநாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடி ஜி.சகுந்தலா. படம் சுமாராகத்தான் ஓடியது.
‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் நண்பனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.
முரசொலி மாறன் திரைக்கதை – வசனத்தில் ஏவி.எம். தயாரித்த ‘குல தெய்வம்’ (1956) படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. இந்த படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
‘ரங்கோன் ராதா’ (1956) படத்தில் மீண்டும் சிவாஜியுடன் எஸ்.எஸ். ஆர். இணைந்து நடித்தார். இந்தப் படமும் வெற்றிகரமாக அமைந்தது.
1957 தீபாவளி அன்று வெளியான எம்.ஏ.வி. பிக்சர்ஸ் தயாரிப்பான ‘முதலாளி’, வரலாறு படைத்தது. இதில் எஸ். எஸ்.ராஜேந்திரனும், தேவிகாவும் ஜோடியாக நடித்தனர்.
அதுவரை பல படங்களுக்கு துணை இயக்குநராக இருந்த ‘முக்தா சீனிவாசன்’ இப்படத்தின் மூலம் டைரக்டரானார்.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘முதலாளி’, தீபாவளிக்கு வெளிவந்த பெரிய பேனர் படங்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, முதல் இடத்தைப் பெற்றது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
இப்படத்தில், தேவிகா ஏரிக்கரையில் நடந்து செல்ல, “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே” என்று பாடியபடி (குரல்: டி.எம்.எஸ்) எஸ்.எஸ்.ராஜேந்திரன் பின் தொடர்வார். இந்த பாடலும் காட்சி அமைப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதற்கு 2 மாதங்கள் கழித்து, பொங்கலுக்கு வெளிவந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படம், ராஜேந்திரனுக்கு மற்றொரு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
தமிழ்ப் புலவராக இருந்த ஏ.கே.வேலன் இந்தப்படத்தின் மூலம் பட அதிபராகவும், டைரக்டராகவும் ஆனார். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், எல்லோரும் வியக்கும் வகையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
வசூல் மழையில் நனைந்த ஏ.கே.வேலன், இதன் மூலம் கிடைத்த லாபத்தில் தன் தந்தை பெயரால் ‘அருணாசலம் ஸ்டூடியோ’வை அமைத்தார்.
இந்தப் படத்தில், மலையாளப்பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ பிரேம் நசீர், எஸ்.எஸ்.ஆருக்கு அடுத்த வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், டி.வி.நாராயணசாமி முதலியோர் நடித்த இப்படத்தில், “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்”, “அமுதும் தேனும் எதற்கு”, “எளியோரை தாழ்த்தி”, “மண்ணுக்கு மரம் பாரமா” “ஆசையே அலைபோல” முதலான அனைத்து பாடல்களும் ஹிட் ஆயின.
மருதகாசி, கண்ணதாசன், சுரதா, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன்.
‘முதலாளி’, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கு ஏராளமான படங்கள் ஒப்பந்தம் ஆயின.
தொடர்ந்து, ‘பிள்ளைக் கனியமுது’, “பெற்ற மகனை விற்ற அன்னை’, ‘திருடர்கள் ஜாக்கிரதை’, ‘தேடிவந்த செல்வம்’, ‘அன்பு எங்கே’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘மாமியார் மெச்சிய மருமகள்’, ‘கல்யாணிக்கு கல்யாணம்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
ஒரு முறை கோவையில் நாடகம் நடத்த எஸ்.எஸ்.ஆர். சென்றபோது ஆட்டோகிராப் வாங்க வந்த ஒரு இளம்பெண்ணை, தனது நாடகத்தில் நடிகையாக்கினார்.
இவர்தான், பின்னாளில் கேரளத் திரையுலகின் மிகப்பெரிய நடிகையாக திகழ்ந்த ஷீலா.
நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்த ‘பிள்ளைக் கனியமுது’ படத்தில் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சியில் எஸ்.எஸ்.ஆர். ’டூப்’ போடாமல் நடித்தார்.
சிறுத்தையின் கால் நகம் வெட்டப்பட்டு, வாய் தைக்கப்பட்டு, அதன் பின்னர் சிறுத்தையுடன் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது சிறுத்தை காலால் உதைத்ததில், எஸ்.எஸ்.ஆர். முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. ஆனால் சூட்டிங் நடந்து கொண்டே இருந்தது.
படத்தின் இயக்குனரிடம் “நான் நடிக்கும்போது பயப்படுவதுபோல நடிப்பேன். அதைப் பார்த்து சூட்டிங்கை நிறுத்தி விடாதீர்கள்” என்று எஸ்.எஸ்.ஆர். கூறி இருந்ததே இதற்கு காரணம். இந்தக் காட்சி சிறப்பாக அமைந்தது.
சிவாஜி – எம்.ஜி.ஆருடன் நடித்த படங்கள்:
சிவாஜி கணேசனுடன் ‘பராசக்தி’, ‘பணம்’, ‘மனோகரா’, ‘ரங்கோன் ராதா’, ‘தெய்வப் பிறவி’, ‘ஆலய மணி’, ‘பச்சைவிளக்கு’, ‘கைகொடுத்த தெய்வம்’, ‘பழனி’, ‘சாந்தி’, ‘எதிரொலி’ ஆகிய படங்களில் எஸ்.எஸ்.ஆர். நடித்தார்.
‘தெய்வப்பிறவி’யில் சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர். மூவரும் போட்டிபோட்டு நடித்தனர். இறுதிக்கட்டங்கள் உணர்ச்சிமயமாக இருந்தன.
‘கை கொடுத்த தெய்வம்’ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உருவாக்கிய அற்புத படைப்பு. சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர். அருமையாக நடித்தார்.
சாவித்திரியின் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய படம் இது.
சாவித்திரியின் அண்ணனாக எஸ்.எஸ்.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா.
அதன் பிறகு ‘காஞ்சித் தலைவன்’, ‘ராஜா தேசிங்கு’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். இணைந்து நடித்தார். இவற்றில் எம்.ஜி.ஆரின் நண்பன் வேடம் எஸ்.எஸ்.ஆருக்கு.
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், புராணப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் ‘லட்சிய நடிகர்’ என்று பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்ட எஸ்.எஸ்.ஆர், திருமண வாழ்க்கையிலும் நிறைவாகவே வாழ்ந்திருக்கிறார்.
திருமண வாழ்க்கை மிக இனிமையாக இருந்ததற்கு ஆகச்சிறந்த தம்பதிகளாக வாழ்ந்த அவரது மனைவியான விஜயகுமாரியே இன்றும் அதற்கு சாட்சியாக உள்ளார்.
– நன்றி: முகநூல் பதிவு
#எம்_கே_தியாகராஜ_பாகவதர் #எஸ்_எஸ்_ஆர் #டி_கே_எஸ் #ஏ_பி_நாகராஜன் #பெரியார் #அறிஞர்_அண்ணா #டி_கே_எஸ்_நாடகக்_குழு #எம்ஜிஆர். #கலைஞர் #கருணாநிதி #சிவாஜி_கணேசன் #எஸ்_எஸ்_ராஜேந்திரன் #கே_ஆர்_ராமசாமி #பத்மினி #அஞ்சலி_தேவி #ஜி_சகுந்தலா #எம்_ஆர்_ராதா #தேவிகா #டி_எம்_எஸ் #லட்சிய_நடிகர் #s_s_rajendren #latchiya_nadigar #periyar #ssr #anna #karunanithi #actor ssr #a_p_nagarajan #tks drama #kalaignar #sivaji #mgr #badmini #mrradha #devika #tms