உணவே மருந்து என்பதை இந்த தலைமுறையினர் சுத்தமாக மறந்துவிட்டனர்.
மிகச் சிறந்த உணவுமுறையைப் பின்பற்றி வந்ததால்தான் அன்றைய தமிழர்கள் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தார்கள். அந்த உணவுமுறையை நாம் பின்பற்றத் தவறியதால் மருத்துவமனையை நோக்கி ஓடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தேவையான பாக்டீரியாக்கள் இல்லாததால்தான் பலவித குடல் சார்ந்த வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்த வகையான குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பழைய சோறு மூலம் கிடைக்கப் பெறும் பாக்டீரியாக்கள் வயிற்றுப் பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதோடு, நீரிழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாக இருக்கிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
காலையில் பழைய சோறு சாப்பிடுவதனால் வயிறு சம்பந்தமான அனைத்து அஜீரணப் பிரச்சனைகளும் குணமாகும்.
பழைய சோற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகின்றது.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழையசோறு உண்பதினால் அதன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க உதவுகின்றது.
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக பழைய சோற்றில் இருப்பதால் உடலில் ஏற்படும் உஷ்ணமும் இதனால் குறைகின்றது.
பழைய சோற்றில் உள்ள தண்ணீரை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை உப்புக் கலந்து காலையில் தினமும் பருகி வந்தால், குடல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு பெரிய தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
பெண்களுக்கு தலை முதல் கால் வரை உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பழைய சோற்று தண்ணீரின் முலம் தீர்வு காண இயலும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதேநேரம் ஆஸ்துமா, மூச்சிரைப்பு உள்ளவர்கள் குளிர்காலத்தில் பழைய சோற்றை உண்ண வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
இயற்கையாக 100 கிராம் சாதத்தில் மூன்று மில்லி அளவிற்கு ஊட்டச்சத்து உள்ளதாம்.
குடல் சம்பந்தப்பட்ட வயிற்றுப் பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு, ஒரு மாதத்திற்கு பழைய சோற்றை கொடுத்த பிறகு, அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே பழைய சோறு தான் வயிறு சம்பந்தப்பட்ட பல நோயாளிகளை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி வருகிறது என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள்.
உணவே மருந்து என்பதை நாமும் நம்மால் முடிந்தவரை பின்பற்றுவோம்.
– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.