மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் ஏற்கனவே முதல் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து விட்டது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நான்கு துண்டுகளாகப் பிரிந்துள்ளது.
எனினும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவரது அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இந்த நிமிடம் வரை, அதிமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் உள்ளன என்பது தெரியவில்லை. எனினும் திரைமறைவுப் பேச்சு வார்த்தைகள் தொடங்கிவிட்டன.
பாமகவின் நிபந்தனை
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அவரது தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இரு நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பாமக போட்டியிட்டது.
7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்திலும் தோல்வி அடைந்தது. ஆனாலும், ஒப்பந்தப்படி அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக அளித்தது.
இந்த முறையும் 7 தொகுதிகள் தருவதாக ராமதாசிடம் உறுதியளித்த சி.வி.சண்முகம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அளிக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முடிவை சொல்வதாக ராமதாஸ் தெரிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க பாமக தலைவர் அன்புமணி, டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களுடன் தனியாகப் பேச்சு நடத்தி வருகிறார்.
’12 மக்களவைத் தொகுதிகள் – ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் மத்திய அமைச்சரவையில் ஓர் இடம் வேண்டும்’ என்பது பாகமவின் நிபந்தனை.
அதற்கு பாஜக ஒப்புதல் அளிக்காததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது.
தேமுதிகவின் நிலைப்பாடு
விஜயகாந்த் இறந்த பின் தேமுதிக பொதுச் செயலாளராக அவரது மனைவி பிரேமலதா பொறுப்பேற்றுள்ளார்.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சு நடத்தினர்.
மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கவேண்டும் என தேமுதிக நிபந்தனை விதித்துள்ளது.
மதுரையில் மகன் விஜயபிரபாகரனையும், கள்ளக்குறிச்சியில் சகோதரர் எல்.கே.சுதீஷையும் நிறுத்த வேண்டும் என்பது பிரேமலதாவின் திட்டம்.
பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது.
இதனால் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்க இயலாது என அதிமுக கூறி விட்டதால், பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ’’மக்களவைத் தேர்தலில் வென்று தேமுதிக எம்.பி.க்கள் டெல்லி செல்வது நிச்சயம் – தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முதலிலேயே எழுதித்தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம்” என கூறி இருந்தார்.
இதனிடையே இன்று (07.02.2024) செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 14 இடங்களும், ஒரு மாநிலங்களவைப் பதவியும் கொடுக்கும் கட்சிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
– பி.எம்.எம்.