இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது.
குற்றவாளிகளின் தன்மையையும் மாற்றியமைத்திருக்கிறது. அதனால், அவற்றில் இருந்து சாதாரண மனிதர்களைக் காக்கப் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
இணைய வழியில் நிகழும் மோசடிகளும் முறைகேடுகளும் அருகில் இருப்பவரைச் சிதைத்துச் சின்னாபின்னாமாக்கும்போது பதறிப்போகாமல் எவராலும் இருக்க முடியாது.
அதற்கு நாமே இலக்காகும்போது, பாதிப்பு குறித்த பயமும் பதைபதைப்புமே நமது ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் சிதைப்பதற்குப் போதுமானதாகும்.
சூளும் பிரச்சனைகள்!
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நமது பக்கத்தைப் போலவே போலியான பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு, நட்பு வட்டத்தில் அழைப்புகளைத் தொடுப்பது ஒருவகையான பிரச்சனை.
நட்பில் இருப்பவர்கள் அதனை ஏற்றுக்கொண்டபிறகு, ‘எனக்குப் பணம் தேவைப்படுகிறது’ என்று நச்சரித்துப் பணம் பிடுங்குவதும் மிரட்டல் விடுப்பதும் நிகழும்.
தவறான பிரைவசி செட்டிங், பொருத்தமற்ற தகவல்கள், ஆன்லைன் மோசடிகள், காதல் மோசடிகள் என்று பல பிரச்சனைகள் இணையத்தில் உலவுகின்றன.
முகத்தைக் கொண்டு உள்ளிருப்பதை அறிய முடியாத காரணத்தால், அவற்றுக்கு இலக்காகாமல் இருப்பது கடினம்.
ஆனால் பொறுமையும் கட்டுப்பாடும் நிதானமும் கொண்டிருந்தால் அவற்றை எதிர்கொள்ள முடியும்.
சரி, இதிலிருந்து விடுபட வழிகள் இருக்கிறதா?
நினைவிலிருக்கும் குறிப்புகள்!
இன்றைய தேதியில் பொது இடங்களில் ‘வை-பை’ இணைப்புகளை இலவசமாகப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது. அவற்றைப் பயன்படுத்தாமல் தங்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்பவர்கள் வெகுசிலரே.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள், அந்த இணைப்பைப் பயன்படுத்தும்போது பணப்பரிமாற்றங்களையோ, தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களையோ மேற்கொள்ளாமல் இருப்பது ஓரளவுக்குப் பலன் அளிக்கும்.
‘பாஸ்வேர்டு’ எனப்படும் கடவுச்சொல்லை வலுவானதாக அமைத்துக் கொள்வது, மென்பொருள் மற்றும் செயல்பாட்டு அமைப்பைப் புதுப்பித்துக் கொள்வது, நமது சாதனத்தில் பிரைவசி செட்டிங்குகளையும் அது தொடர்பான கொள்கைகளையும் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பது,
சந்தேகத்திற்குரிய இணைப்பைச் சொடுக்குகையில் கவனம் காப்பது, சாதனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தரவுகளின் பிரதியைச் சீராகப் பராமரிப்பது, தேவையற்ற இணைய கணக்குகளை மூடுவது,
பதிவிறக்கத்தின் போது கவனமாக இருப்பது, ஆன்லைனில் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது, ஆன்லைன் தகவல்களை இருமுறை சரிபார்ப்பது, நல்லதொரு ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது போன்றவை மூலம் சில பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
எங்கிருந்து பதிவிடுகிறோம்? அதில் என்ன இருக்கிறது என்று அறிந்து வைத்திருப்பது மிக நல்லது.
கூடவே, ‘பாஸ்வேர்டு’ மட்டுமல்லாமல் ஒருமுறை கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது, தனிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது மற்றும் கைரேகை அல்லது முக அடையாளம் கொண்டு சாதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதும் கூடக் கூடுதலாகப் பலனளிக்கும்.
காரணம், இன்று பலர் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பைவிட மொபைல் போன்கள் உள்ளிட்ட கையடக்க சாதனங்களின் வழி இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இவற்றைக் கைக்கொள்வது அவசியம்.
கண்டிப்பாக, இந்தக் குறிப்புகளை நம் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்!
இது அவசியமா?
எந்தவொன்றையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருகும்போது, அவற்றைப் பயன்படுத்திக் குற்றம் இழைப்பதும் பெருகத்தான் செய்யும். உலகின் எந்தவொரு மூலையில் நிகழும் மோசடிகளுக்கும் இது பொருந்தும்.
அந்த வகையில் இணையத் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களும் பெருகத்தான் செய்கின்றனர்.
அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அதனை அரங்கேற்ற முடியும் என்பது குற்றவுணர்ச்சியை விரட்டிவிடுகிறது. அதனால், அவற்றைத் தடுப்பதற்கும் விலகி நிற்பதற்கும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது.
மின்னஞ்சல், சமூகவலைதளங்கள், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகையில் சில முறைகேடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நமது அறிவுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பச் சிடுக்குகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதும், அபாயகரமான அம்சங்களைத் தொடாமல் இருப்பது நலம் பயக்கும்.
மிக முக்கியமாக, குழந்தைகளும் பதின்பருவத்தினரும் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால், அவர்களே அவற்றை அதிகம் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர்; இணைய வழி குற்றங்களுக்கான எளிய இலக்குகளாகவும் உள்ளனர்.
வீட்டில் இருக்கும் குழந்தைகள் சமூகவலைதளங்கள், கேமிங் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகையில் புகைப்படங்கள், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை விலாவாரியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தலாம்.
கடவுச்சொற்களைக் கடினமானதாக அமைத்துக்கொள்ள வழிகாட்டலாம்.
சோம்பேறித்தனமாகக் கணினியில் தானியங்கி கடவுச்சொல் அமைப்பைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
இணையத்தில் யாரைத் தொடர்பு கொள்கிறோம் என்பது குறித்த புரிதலும் விழிப்புணர்வும் நிச்சயம் வேண்டும்.
தவறான தகவல்கள், சந்தேகத்திற்குரிய இணைப்புகள் வருகையில் அவற்றை எதிர்கொள்வதில் தொடங்கி பதிவிறக்கம், மின்னஞ்சல் பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது வரை பலவற்றில் கவனம் குவிக்கப் பயிற்சியளிக்க வேண்டும்.
மேற்சொன்னவற்றைப் பின்பற்றி முடிந்தவரை பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அந்த நோக்கோடு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை அன்று ‘இணைய பாதுகாப்பு தினம்’ கொண்டாடப்படுகிறது.
2004-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பான எல்லைகள் திட்டச் செயல்பாட்டின் கீழ் இது தொடங்கப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதியன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
‘சிறப்பானதொரு இணையத்திற்கான ஒன்றிணைவோம்’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
இது போன்ற தினங்கள் கொண்டாடப்படுவது, அது குறித்த விழிப்புணர்வை ஊட்டி ஆண்டு முழுக்க அதனை நம் நினைவிலிருத்திப் பின்பற்றச் செய்வதற்காகத்தான்.
‘நாளும் பிறந்தநாளே’ என்பவர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதாகத் தெரியாது.
அது போல, இணைய பாதுகாப்பில் தினமும் கவனம் செலுத்துவோர்க்கு இத்தினம் பெரிதாகத் தெரியாது.
எது எப்படியானாலும், இணையத்தின் பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் உறுதி செய்வோம் என்பதில் இரு தரப்புக்கும் ஒருபோதும் மாற்றுக்கருத்து இருக்காது என்பது உறுதி!
– உதய் பாடகலிங்கம்