ரெங்கையா முருகன்:
கிண்டி அண்ணா பொறியியல் பல்கலை நூலகத்தை அலங்கரிக்கும் தமிழ் இலக்கிய படைப்புகள். சென்ற மூன்று வாரங்களுக்கு முன்பாக எங்கள் நூலகப் பணி நிமித்தமாக கிண்டி அண்ணா பல்கலை நூலகத்திற்கு சென்றிருந்தேன்.
என் உடன் படித்த அன்புத் தோழியும் இணை நூலகருமான திருமதி. கீதா அவர்கள் தமிழார்வம் மிக்க நூலகப் பொறுப்பாளர் திரு.பாபுசங்கர் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
முருகன் இவர் உங்களைப் போன்று தமிழார்வம் மிக்கவர் என்று அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் எங்கள் நூலகத்தில் தற்போது தமிழ் இலக்கிய படைப்புகளுக்கென தனிப்பிரிவு தொடங்கி நூல்கள் வாங்கி வருகிறோம் என்று சொல்ல அட?! ஆச்சரியத்தில் பொறியியல் நூலகத்தில் தமிழ் படைப்புகளுக்கென தனிப்பிரிவா?! என்று ஆச்சரியத்துடன் நான் காண வேண்டுமே என்று ஆவலுடன் கேட்டேன்.
பொதுவாக அறிவியல் துறை சார்ந்தவர்கள் கூட பொழுதுபோக்குக்கு தமிழ் படைப்புகள் படிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொறியியல் படிப்பவர்களுக்கு ஏது நேரம் இருக்கிறது என்று பொதுவான எண்ணம் உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் முதல் தேசிய பௌதீக ஆய்வுக்கூடத்தின் முதல் இயக்குனர் தமிழரான கே.எஸ். கிருஷ்ணன் தமிழில் ஆழ்ந்த அறிவுடையவர்.
பன்னாட்டு கருத்தரங்குகளில் கூட தமிழில் குறிப்புகள் எடுத்துக் கொள்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
முன்னாள் துணைவேந்தர் கோவை ஜி. தாமோதரன் அவர்கள் நடத்திய கலைக்கதிர் இதழில் அழகு தமிழில் அறிவியலை எளிமையாக எழுதிய பல கட்டுரைகள் மறைமலை அடிகள் நூலகத்தில் பணிபுரியும்போது நான் விரும்பிப் படித்துள்ளேன்.
கே.எஸ். கிருஷ்ணன் போன்று அண்ணா பல்கலை நூலகத்தின் இயக்குனர் தன்னுடைய துறை கணிதவியல் பின்புலமாக இருந்தபோதும் இவருடைய முன்னெடுப்பில் அண்ணா பல்கலையில் சுமார் 1800 தமிழ் இலக்கிய படைப்புகள் வாங்கப்பட்டு தனிப்பிரிவாக அழகிய வடிவமைப்பில் படிப்பக அறையும் கண்ணுற்ற எனக்கு ஆச்சரியமும் பொறாமையும் வந்துவிட்டது. ஏனெனில் எங்கள் நூலகத்தில் கூட இவ்வளவு தமிழ் நூல்கள் கிடையாது.
தமிழ் நாவல் உலகில் ஆதியூர் அவதானி சரிதம் முதல் இன்றைய காலத்து எஸ்.ரா, ஜெயமோகன், தமிழ் மகன் போன்ற அனைத்து படைப்பாளிகள் நாவல்கள், சிறுகதைகள், குறிப்பாக பிரயாண இலக்கிய நூல்கள், பக்தி இலக்கியம், தத்துவ நூல்கள், நோபல் பரிசு பெற்ற ஆளுமைகள் நூல்கள், அரசியல் ஆளுமை நூல்கள் என பல பிரிவுகளில் புத்தம்புது நூல்கள் நம்மைக் கவர்கின்றன.
இந்த தமிழ் நூல் பிரிவை படிப்பதற்காக மாணவர்கள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று உள்ளப் பூரிப்புடன் நூலகப் பொறுப்பாளர் திரு.பாபுசங்கர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த தமிழ் நூல்களினை தேர்வு செய்ததில் திரு.பாபுசங்கர் அவர்களுக்கு பங்களிப்பு இருக்கிறது.
மாணவர்கள் விதவிதமான கோணத்தில் விசாரிப்பதையும் அதாவது சில மாணவர்கள் புதுமைப்பித்தன், ல.ச.ரா என்று தெரிந்து கொண்டு படிக்க வரும் மாணவர்கள் இருக்கிறார்கள்.
சிலர் என்ன கட்டுரை படிக்கலாம், என்ன பிரயாண நூல் படிக்கலாம் என்று கேட்டு வருபவர்கள் விருப்பத்திற்கிணங்க அடுத்தடுத்து நூல்கள் வாங்கி வைக்கிறோம் என்றார்.
குறிப்பாக தமிழ் நூல் பிரிவில் உள்ள படிப்பக அறை அவ்வளவு அழகாக இருக்கிறது. நூல்கள் வரிசை முறையும் நம்மை ஈர்க்கிறது.
ஒரே ஒரு குறை இனி வரும் காலங்களில் தமிழில் ஆகச் சிறந்த கட்டுரைத் தொகுப்புகள் வாங்கி வைக்க வேண்டுகிறேன். நிச்சயமாக கவனத்தில் கொள்வார்கள்.
பிரசித்திபெற்ற அண்ணா பொறியியல் பல்கலை நூலகத்தில் தமிழ் இலக்கிய படைப்புகளுக்கென முன்னெடுப்பு எடுத்த இயக்குனர் திரு. அறிவுடைநம்பி அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர் போன்ற இயக்குநரால் இனித் தமிழ் வாழும். இயக்குனர் அறிவுடைநம்பி அவர்களுக்கு பெரிய ஓ போடுவோம்.
நன்றி: ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பதிவு