எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த நட்சத்திரங்களின் நிலை!

‘இளையத் தளபதி’ விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் இன்று பேசுபொருளாகிவிட்டது.

அவரின் இந்த புதிய பயணத்துக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை உலகம் அறியும்.

அரை நூற்றாண்டுகால தமிழ்நாட்டு நட்சத்திரங்களின் அரசியல் பயணம் குறித்த பார்வை:

இந்திய சினிமா நட்சத்திரங்கள், அரசியலை தொட்டுப் பார்ப்பதற்கு, வழிகாட்டுதலாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அதிமுக எனும் மக்கள் இயக்கத்தை தொடங்கிய எம்ஜிஆர், ஆறே மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தி பிரமாண்ட வெற்றியை அடைந்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

தனது இறுதிக்காலம் வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள், ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் மன்னனாகவே இருந்தார்.

பின்னாட்களில் அரசியலுக்கு வந்த பல சினிமா நடிகர்களுக்கு எம்.ஜி.ஆரே. ‘ரோல் மாடல்’.

இவர்களை இரண்டு வகைப்படுத்தலாம். புதியக் கட்சி ஆரம்பித்து, தலைவர்களாக அவதாரம் எடுத்து, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் முஸ்தீபுகளில் இறங்கியவர்கள், ஒரு ரகம்.

பிரபலங்கள் தொடங்கிய மற்றும் ஏற்கனவே செயல்பட்ட அரசியல் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு பயணித்தவர்கள் இரண்டாம் ரகம்.

இந்த இரண்டு வகை நட்சத்திரங்களின் வெற்றி தோல்விகளை இங்கே விரிவாக அலசலாம்.

முதலில், கட்சி ஆரம்பித்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

தலைவர்கள்

சம காலத்தில் எம்.ஜி.ஆருடன் சினிமாவில் பயணித்தவர் நடிகர் திலகம் சிவாஜி. காங்கிரசில் இருந்தவர், காமராஜர் மறைந்து சில ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். பாணியில் புதிய கட்சி ஆரம்பித்தார்.

’தமிழக முன்னேற்ற முன்னணி’ என்பது கட்சியின் பெயர். அதுவரை தேர்தலில் போட்டியிட்டுப் பழக்கமில்லாத சிவாஜி, கட்சித் தலைவரானபின் நடந்தத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு தோற்றுப் போனார்.

அவர் கட்சி சார்பில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் தோற்றுப்போனார்கள்.
கொஞ்ச நாட்களில் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கே திரும்பி சென்றார்.

எம்.ஜி.ஆரால், ’எனது கலை உலக வாரிசு’ என அறிமுகம் செய்யப்பட்ட கே.பாக்யராஜும், தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த டி.ராஜேந்தர், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கால், தனிக்கட்சி தொடங்கினார்.

திரைக்களத்தில், தொடர்ச்சியாக வெள்ளிவிழாப் படங்கள் தந்த இருவருமே அரசியல் களத்தில் ‘டெபாசிட்’ இழந்தனர்.

சொத்துக்களை இழந்த பாக்யராஜ், அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

டி.ஆரின் கட்சி ‘லெட்டர் பேட்’ அளவில் செயல்பட்டாலும், உடல்நிலை சரி இல்லாததால் அவரும் இப்போது தீவிர அரசியலில் இல்லை.

ஹீரோவாக ஜொலித்த கார்த்திக்கும், காமெடியில் கலக்கிய கருணாசும் தனிக்கட்சி கண்டனர். இருவரும் இப்போது ஒதுங்கி கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒருமுறை எம்.எல்.ஏ. ஆனார்.

பின்னர் தொடர் தோல்விகளைச் சந்தித்தார். எனினும் இப்போதும் தீவிர அரசியலில் இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் தோல்விகளையே சந்தித்தாலும் இப்போதும், துவண்டு போகாமல் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாகவே உள்ளனர்.
இருவருக்குமே தொண்டர்கள் கூட்டம் உண்டு.

மக்களவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், சில தொகுதிகளில், ஒருவரின் வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் ஓட்டுகள், சீமானிடமும், கமலிடமும் உள்ளது என்பது உண்மை.

விஜயகாந்த்

கட்சி ஆரம்பித்து சிவாஜி தொடங்கி கமல்ஹாசன் வரை பலரும் தோற்ற நிலையில், ஓரளவு வெற்றி பெற்றவர் என விஜயகாந்தை சொல்லலாம்.

தேமுதிகவை ஆரம்பித்து திமுக – அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளை தனித்து எதிர்கொண்டு, விருத்தாசலத்தில் வென்றார், விஜயகாந்த். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது.

அடுத்த தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். திமுகவை வீழ்த்தி – கருணாநிதியை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் எனும் பெரிய அந்தஸ்துக்கு உயர்ந்தார், விஜயகாந்த்.

ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக படுதோல்வி அடைந்தது.
கூட்டணி வைத்துப் போட்டியிட்டும் விஜயகாந்த், டெபாசிட் இழக்க நேரிட்டது. விஜயகாந்தின் உடல்நலம் குன்றியதும், கட்சியின் செயல்பாடுகளும் முடங்கின.

விஜயகாந்தும் இறந்து விட்டார். மறைவுக்கு பிறகு அவரது மனைவி பிரேமலதா, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அவர் எடுக்கும் கூட்டணி நிலைப்பாட்டில் தான் தேமுதிகவின் எதிர்காலமே உள்ளது.

கட்சித் தொடங்கி தலைவர் ஆகாமல், தொண்டராக அரசியல் பயணத்தை ஆரம்பித்த நட்சத்திரங்கள் குறித்த அலசல்.

ஜெயலலிதா

அதிமுகவின் எதிர்காலம் குறித்து யோசிக்காமல், எம்.ஜி.ஆருக்காக அந்தக் கட்சியில் பெருவாரியாக திரைத்துறையினர் ஐக்கியமானார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு உயர்ந்த பதவிகளை அளித்து அழகு பார்த்தார் எம்ஜிஆர்.

தன்னுடன் சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்த திருச்சி சவுந்தரராஜன், நகைச்சுவை நடிகர் ஐசரி வேலன் ஆகியோருக்கும், சத்யா மூவீஸ் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தார்.

என்னதான் தன்னை கடுமையாக விமர்சித்தபோதும் அப்படி விமர்சித்த கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் என்ற கவுரவத்தை அளித்தவர் எம்.ஜி.ஆர்.

அதிமுகவில் எம்ஜிஆர் வழங்கிய கொள்கை பரப்புச் செயலாளர் பதவியே, பின்னாட்களில் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியது.

அதிமுகவில் சேர்த்த உடனேயே ராமராஜனை எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா.

திமுகவில் இருந்த வந்த எஸ்.எஸ்.சந்திரனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், ராதாரவிக்கு எம்.எல்.ஏ.பதவியும் அளித்தார் ஜெயலலிதா.

(அதிமுகவில் சேர்ந்த பிறகு, எஸ்.எஸ்.சந்திரன், தான் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும், ‘திமுகவில் நான் இருந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் இருந்திருப்பேன் கலைஞருக்கு தம்பி – வைகோவுடன் இருந்திருந்தால் இப்போ எண்ணி இருப்பேன் கம்பி – அம்மா கட்சியில் சேர்ந்ததால் ஆகிவிட்டேன் எம்.பி’ என குறிப்பிடுவார்.)

எஸ்.வி.சேகரை மயிலாப்பூரில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ. ஆக்கினார் ஜெயலலிதா.

நெப்போலியன்

திமுகவில் சேர்ந்த நடிகர் நெப்போலியன், மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார்.
ராம.நாராயணன், சந்திரசேகர் ஆகியோருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்து வெற்றி பெறச் செய்தது திமுக தலைமை.

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நடிகைகள் குஷ்பு, விந்தியா, சரஸ்வதி, நடிகர்கள் ஆனந்தராஜ், செந்தில், கவிஞர் சினேகன், டைரக்டர்கள் கங்கை அமரன், பேரரசு, சிவாஜி மகன் ராம்குமார் உள்ளிட்டோருக்கு பதவிகள் கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்சியில் சேராமல், நட்பின் அடிப்படையில், திமுகவுக்காக பிரச்சாரம் செய்த வடிவேலு, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டிய மனோரமா ஆகியோரையும் இங்கே நினைவு கூறுவோம்.

– பாப்பாங்குளம் பாரதி. 

Comments (0)
Add Comment