தொலைக்காட்சிகளில் வெற்றிகளைச் சுவைப்பவர்கள் திரைப்படங்களில் தோன்றும்போது, அந்த புகழ் பன்மடங்காகப் பெருகக்கூடும். சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்களின் வெற்றிகள் அதனை மெய்ப்பித்திருக்கின்றன.
அந்த வரிசையில், சமீபத்தில் ‘ஜோ’ படத்தில் நடித்திருந்தார் ரியோராஜ். அது போலவே, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மான் உடன் தோன்றிய ரக்ஷன் முதன்மை பாத்திரமேற்று நடித்திருக்கும் படமே ‘மறக்குமா நெஞ்சம்’.
இந்த படத்தின் ட்ரெய்லரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவராகவும், 28 வயது மிக்க இளைஞராகவும் இரு வேறு தோற்றங்களில் நடித்திருந்தார் ரக்ஷன். பலரும் அதே போன்ற தோற்ற வேறுபாட்டைக் காட்டியிருந்தது, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில், சச்சின் வாரியர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
எப்படியிருக்கிறது ‘மறக்குமா நெஞ்சம்’?
பத்தாண்டு காத்திருப்பு!
ஒவ்வொரு ஆண்டும் முதல் நாளன்று சீக்கிரமாகப் பள்ளிக்குச் சென்று கடைசி பெஞ்ச்சில் இடம்பிடிப்பதே இவர்களது தலையாய வேலை. இதனால் ராகவ் (முத்தழகன்) நண்பர்களுக்கும் கார்த்திக் குரூப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
அவர்களது வகுப்பில் பிரியதர்ஷினி (மலினா) என்ற பெண் புதிதாகச் சேர்கிறார். பார்த்தவுடனேயே, அவர் மீது காதல் வயப்படுகிறார் கார்த்திக். அதனை அவரிடம் சொல்லத் துடிக்கிறார்.
அந்த வயதுக்கே உரிய பயமும் பதற்றமும் கார்த்திக்கைத் தடுக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக, திடீரென்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் காரணமாக அந்த ஊரை விட்டுச் செல்கிறார் பிரியதர்ஷினி.
அதன்பிறகு, எவ்வளவோ தேடியும் அவரை கார்த்திக்கினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பிறகு கல்லூரிப் படிப்பு, வேலை, தொழில் என்று அவர்களது வாழ்க்கை மாறுகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் மீண்டும் அவர்கள் அனைவரும் நேரில் சந்திக்க நேர்கிறது.
கார்த்திக் பயின்ற பள்ளிக்கு எதிராக, இன்னொரு பள்ளி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, 2008இல் அந்த பள்ளியில் பயின்ற பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டும் என்று முடிவாகிறது.
கார்த்திக் தவிர மற்றனைவரும் அந்த முடிவுக்கு எதிராக நிற்கின்றனர். ஆனாலும், பள்ளி நிர்வாகம் அவர்களைத் தேர்வு எழுத வருமாறு அழைக்கிறது; மூன்று மாதங்கள் மீண்டும் பாடங்களை நடத்துவதாகச் சொல்கிறது.
‘திரும்பவும் எக்ஸாமா’ என்றெண்ணியவாறே அந்த மாணவர்கள் பள்ளிக்குச் சென்றாலும், ஒருவரையொருவர் பார்த்தபிறகு அவர்களது வாழ்க்கை அடியோடு மாறுகிறது.
துக்கங்கள், சோகங்கள், ஏக்கங்கள், வெறுப்புகள் அனைத்தும் மறைந்து இணக்கமான நட்பு மலர்கிற்து.
அந்தச் சூழலில், மீண்டும் பிரியதர்ஷினியைச் சந்திக்கிறார் கார்த்திக். வேறொருவருடன் அவருக்குத் திருமணமாகவிருக்கிறது என்று தெரிந்தும், அவரிடம் தனது காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
அதன்பிறகு என்னவானது? பிரியதர்ஷினி மனதில் கார்த்திக் குறித்து என்ன அபிப்ராயம் இருந்தது? இது போன்று பல மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிற்து இப்படத்தின் மீதி.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகாவது நாயகியிடம் நாயகன் காதலைத் தெரிவித்தாரா இல்லையா என்பதுதான் இக்கதையின் மையம். ஆனால், இந்த கதையை வித்தியாசப்படுத்துவது ‘மீண்டும் பள்ளி செல்லலாம்’ என்ற ஐடியா தான்.
இவ்விரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற கேள்விக்கு முதலாவதை ‘டிக்’ செய்துவிட்டு, மொத்த திரைக்கதையையும் இரண்டாவதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராகோ.யோகேந்திரன்.
இந்த முரண் தான் மொத்தப் படத்தையும் ‘பப்படம்’ ஆக்கியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், நாயகனும் நாயகியும் ஏன் பிரிந்தனர் என்ற கேள்விக்குத் தெளிவான பதில் படத்தில் சொல்லப்படவே இல்லை. அது மட்டுமல்லாமல், படத்தில் லாஜிக் மீறல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
சோதிக்கும் நாயகன், நாயகி!
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த ரக்ஷன், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மான் உடன் நடித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
அந்த படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாகச் சலிப்பு தட்டாது.
ஆனால், ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரைப் பார்ப்பது சலிப்பூட்டுகிறது.
‘வருஷம் 16’ கார்த்திக் போன்று நடிக்க வேண்டுமென்ற வேட்கையை மனதிலேற்றிக்கொண்டு, ‘பொண்ணுவீட்டுக்காரன்’னில் ’நத்திங் பட் விண்டு’ என்று விசித்ராவைப் பார்த்தவாறே கவுண்டமணி பேசுவது போல் படம் முழுக்க வசனம் பேசினால் எப்படியிருக்கும்? ரக்ஷன் அப்படித்தான் இதில் தோன்றி நம்மைச் சோதிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மலினாவும் கிட்டத்தட்ட அதையே செய்திருக்கிறார். ‘அழுத்திப் பேசுனா லிப்ஸ்டிக் அழிஞ்சிருமோ’ என்ற பதைபதைப்போடு ஒவ்வொரு வசனத்தையும் உச்சரித்திருக்கிறார்.
‘இவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்’ என்று பயந்து நடுங்கினால் கேபிஒய் தீனா, ஸ்வேதா, முத்தழகன், ஆஷிகா, முனீஸ்காந்த், அகிலா போன்றோர் ஆறுதல் தருகின்றனர்.
நாகர்கோவில் வட்டாரத்தைத் திரையில் காட்டியவிதமே ஒளிப்பதிவாளர்கள் கோபி துரைசாமி, ராஜேஷ் டி.ஜி.யைக் கொண்டாடச் செய்கிறது.
பாலமுரளிகிருஷ்ணன், சஷாங்க் மாலி இருவரும் படத்தொகுப்பாளர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களது பணியைச் செவ்வனே செய்யவில்லை என்பதில் நமக்கு வருத்தம் அதிகம்.
‘90ஸ் கிட்ஸ் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் தெரியுமா’ என்பதைக் காட்சிகளில் உணர்த்தாமல், அதனைத் தனியாக நாயகன் ‘புடம் போட்டு’ விளக்குவதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
அது போன்ற விஷயங்களுக்காக நெறையவே மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குனர் பிரேம் கருந்தமலை.
சச்சின் வாரியர் இசையில் ‘வானிலை சுகம்’, ‘பருவக்கால நினைவிது’, ‘துடிக்கும் நெஞ்சம்’, ‘நேற்றும் இன்றும் இரு தினம்’ பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் ரகம்.
இவை இன்னொரு நல்ல வாய்ப்பினை அவருக்குப் பெற்றுத் தரலாம். ஆனால், அதே தாக்கத்தைப் பின்னணி இசை உண்டாக்கத் தவறியிருக்கிறது.
சொல்ல வேண்டியதை ‘ஷார்ப்’பாக சொல்லாமல், ‘அன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா’ என்று டீக்கடைக்கு சென்றது முதல் வீடு திரும்பி படுக்கையில் விழுந்தது வரை சிலர் கதை சொல்வார்கள்; அப்படிப் படத்தின் திரைக்கதையை வடித்திருக்கிறார் இயக்குனர் ராகோ.யோகேந்திரன்.
அது மட்டுமல்ல, படத்தில் வரும் காட்சிகள் கூட எங்கோ தொடங்கி எங்கோ முடிகின்றன.
படம் சொல்லும் நீதி என்ன?
‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம் சொல்லும் நீதி என்ன? ‘உன் மனதிலுள்ள காதலை ஒளிவுமறைவில்லாமல் சொல்லிவிடு’ என்பதே; படத்திலுள்ள முக்கால்வாசி காட்சிகளில் நாயகனைப் பார்த்து இதர பாத்திரங்கள் அதையே சொல்கின்றன.
அது மட்டுமல்லாமல், ‘பிடிச்சா ஓகே, பிடிக்கலைன்னாலும் ஓகே’ என்ற எண்ணத்தோடு காதலை அணுகினால், வாழ்வில் என்றென்றும் அது ஒரு வலியாக மாறாது என்கின்றன பல பாத்திரங்கள்.
அதேபோல, ‘படிக்கிற வயசுல காதல் வேண்டாமே, பின்னாடி வந்தா பார்த்துக்கலாம்’ என்பதாகவும் கிளைமேக்ஸ் அருகே ஒரு காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர் ராகோ. நல்ல விஷயம்தான்..!
இந்த அணுகுமுறையைப் படம் முழுக்க நிறைத்து வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, பள்ளி மாணவ மாணவியர் மனதில் ‘இந்த வயதில் காதலித்தால் தப்பில்லை’ என்று சொல்வதாக அமைந்துள்ளது ‘மறக்குமா நெஞ்சம்’.
‘துள்ளுவதோ இளமை’ வெளியாகி இருபதாண்டுகள் கழித்தும் இப்படியொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது ‘பூமர்தனம்’ என்று புரிகிறது.
ஆனால், இதே காலகட்டத்தில்தான் பள்ளி, கல்லூரி படித்து முடித்ததும் அவசர அவசரமாகத் திருமணம் செய்துவைப்பது அதிகரித்துள்ளது என்பதையும் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்தவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ரீயூனியன்’ என்று ஒன்றுகூடுவது இயல்பு. அது பத்து, இருபது, முப்பதாண்டுகள் கழித்துக் கூட நிகழ வாய்ப்புண்டு.
அந்த பாணியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாகப் பொதுத்தேர்வு எழுதப் போகின்றனர் என்பதே ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் யுஎஸ்பி; நிச்சயமாக இது நம்மைச் சுண்டியிழுக்கும்.
இதனை வைத்துக்கொண்டு வயிறுவலிக்கச் சிரிக்கத்தக்க, கண்ணீரில் மூழ்கி நெகிழத்தக்க, வாழ்நாள் முழுவதும் நினைத்துச் சிலிர்க்கிற கவித்துவமான தருணங்களை வார்த்திருக்கலாம்.
அது ‘பால்ய காலத்திற்கான ரீவைண்ட்’ ஆக மாறி நம்மைத் திரைக்குள் இழுத்திருக்கும்.
இயக்குனர் அதனைச் செய்யத் தவறிய காரணத்தால், கதைக்கும் திரைக்கதைக்குமான வித்தியாசம் நமக்குத் தெளிவாகப் பிடிபடுகிறது. அந்த வகையில் இது ஒரு பாடம்.
‘மறக்குமா நெஞ்சம்’ என்று டைட்டில் வைத்த கதையோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் திரைக்கதை இருக்கிறதா என்று கவனித்திருந்தால் பல குறைகள் களையப்பட்டிருக்கும்.
அது நிகழாததால், இப்போது ‘ஒரு நல்ல கதைக்கு இந்த நிலையா’ என்று வருந்துவதைத் தவிர வேறெதுவும் நம்மால் செய்ய முடியாது!
– உதய் பாடகலிங்கம்