கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை.

அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘ப்ளூஸ்டார்’.

அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிஸி ஆண்டனி, திவ்யா துரைசாமி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

அரக்கோணம் வட்டாரத்தில் நடப்பதாக அமைந்துள்ளது இப்படத்தின் கதை. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அந்த பகுதிக்கே உரிய கலை, கலாசார அம்சங்கள் நிச்சயம் இதில் நிறைந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதேநேரத்தில், பொழுதுபோக்காகப் படம் பார்க்க வரும் ரசிகர்களைத் திருப்திபடுத்துகிறதா ‘ப்ளூஸ்டார்’? இக்கேள்விக்குப் படம் தந்திருக்கும் பதில் என்ன?

கிரிக்கெட் மோகம்!

அரக்கோணம் அருகேயுள்ள பெரும்பச்சை எனும் கிராமம். ரயில்வே தண்டவாளத்தின் ஒருபுறத்தில் ஊர் இருக்க, மறுபுறத்தில் மைதானத்தை ஒட்டியமைந்துள்ள காலனியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர்.

தினசரி வாழ்வில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்தாலும், சாதீய வன்மம் இடையே புகுந்து தலைவிரித்தாடுகிறது.

அவர்கள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டிலும் அது புகுந்துவிடுகிறது.

ஆல்ஃபா பாய்ஸ், ப்ளூஸ்டார் என்ற இரண்டு அணிகள் அவர்களது சார்பில் நடத்தப்படுகின்றன. காலனி பகுதியைச் சார்ந்தவர் இமானுவேல் (பகவதி பெருமாள்).

ஊர் திருவிழாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின்போது, இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது, ப்ளூஸ்டார் அணியின் இமானுவேல் காலை வெட்டுகிறார் மணி எனும் நபர். அந்த காயத்தில் இருந்து மீண்டாலும், பழையபடி இமானுவேலால் நடக்க முடியாமல் போகிறது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று காவல்நிலைய பேச்சுவார்த்தையில் முடிவாகிறது.

அந்த ஆட்டத்தை நேரில் கண்ட ரஞ்சித் (அசோக் செல்வன்), இமானுவேல் காயப்பட்ட அதே மைதானத்தில் மீண்டும் ஆல்ஃபா பாய்ஸ் அணியைத் தோற்கடிக்க வேண்டுமென்று வேட்கை கொள்கிறார்.

ப்ளூஸ்டார் அணிக்கு ரஞ்சித்தும், ஆல்ஃபா பாய்ஸ் அணிக்கு ராஜேஷும் (சாந்தனு பாக்யராஜ்) கேப்டனாக இருக்கின்றனர். ஒருநாள் மைதானத்தில் விளையாட வந்தபோது ஏற்பட்ட சண்டையில், ‘ஒருவரோடு ஒருவர் மோதலாமா’ என்ற வாதம் இரு தரப்புக்கும் எழுகிறது.

அதன் தொடர்ச்சியாக, சில ஆண்டு கால இடைவெளிக்குப் பின் திருவிழாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம்பெறுகிறது.

ஆல்ஃபா பாய்ஸ் அணிக்காக திருத்தணி எம்சிஎஃப் கிளப்பில் இருந்து நான்கு தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர்களை அழைத்து வருகிறார் ராஜேஷ்.

அவர்களது உதவியுடன் ஆல்ஃபா பாய்ஸ் வெற்றி பெற்றாலும், ரஞ்சித் பேட் செய்த விதம் ராஜேஷைக் கவர்கிறது.

அதற்கடுத்த நாள், எம்சிஎஃப் கிளப்புக்கு சென்று அந்த வீரர்களுக்கு பாக்கி பணத்தைக் கொடுக்கிறார் ராஜேஷ். அந்த வீரர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, அவரைத் திருப்பியனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்.

அதில் ஒரு வீரரின் பேட் செய்யும் முறையில் ராஜேஷ் திருத்தம் சொல்ல, பதிலுக்கு அவரை பேட் செய்யச் சொல்கிறார் அந்த நபர். ராஜேஷை திணறடிக்கும் விதமாகப் பந்துவீசுகிறார் இன்னொரு நபர்.

இதனைக் காணும் பயிற்சியாளர், அந்த வீரர்களிடம் கடிந்துகொள்கிறார். அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, ராஜேஷை அவமானப்படுத்துகிறார்.

அந்த கிளப்பில் பணியாற்றிவரும் இமானுவேலும், அவரைக் காண வந்த ரஞ்சித்தும் ராஜேஷுக்கு ஆதரவாகப் பேச, அங்கு மோதல் உருவாகிறது. அதன் தொடர்ச்சியாக, காவல்நிலையத்திற்கு ரஞ்சித்தும் ராஜேஷும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

‘இங்கெல்லாம் வர்றதுக்கு ஒரு தகுதி வேணுமடா’ என்று அவமானப்படுத்திய பயிற்சியாளரைத் தங்களது கிரிக்கெட் ஆட்டத்தால் தோற்கடிக்க வேண்டுமென்ற வெறி இருவருக்குள்ளும் உச்சம் பெறுகிறது.

அதன்பிறகு என்னவானது? சாதீய வன்மத்தைச் சுமப்பவர்களின் குறுக்கீடுகளை மீறி, ரஞ்சித்தும் ராஜேஷும் ஒன்றாக இணைந்தார்களா என்று சொல்கிறது ‘ப்ளூஸ்டார்’ படத்தின் இரண்டாம் பாதி.

1983 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றபிறகு, விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்று சொல்லும் அளவுக்கு அதன் மீதான மோகம் பெருக்கெடுத்துள்ளது.

தொண்ணூறுகளில் அப்படி கிரிக்கெட் மோகம் கொண்டு திரிந்த சில இளைஞர்களின் சமூகக் கண்ணோட்டத்தை, அவர்கள் மீதான மதிப்பீடுகளைப் பேசுகிறது ‘ப்ளூஸ்டார்’.

சிறப்பான ஆக்கம்!

ஜெயக்குமார், தமிழ்பிரபா கூட்டணியின் முன்பாதி திரைக்கதை ஆக்கமே இப்படத்தின் ஆகப்பெரிய பலம்.

மேம்போக்காகப் பார்த்தால், அக்காட்சிகள் அனைத்தும் ‘க்ளிஷே’வாக தெரியும். அதையும் மீறி, அரக்கோணம் வட்டார மக்களின் வாழ்க்கமுறை, கலாசாரம், பழக்கவழக்கத்தை உணர்த்தியதன் மூலமாகத் தனித்துவம் பெறுகின்றன.

யதார்த்தம் மிளிர வேண்டும் என்பதற்காக, அப்பகுதிகளிலேயே மொத்தப் படப்பிடிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அழகனின் ஒளிப்பதிவு, பூக்களைத் தேடிச் செல்லும் வண்டுபோல அப்பகுதி மக்களின் வாழ்வை நாம் நெருக்கமாகக் காணச் செய்திருக்கிறது.

அதில் சினிமாத்தனம் தெரியும் இடங்கள் எல்லாம் திரையில் நாம் சுவாரஸ்யத்தை உணர்வதாகச் சேர்க்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஒரு ‘சுதேசி படம்’ போலத் தோற்றம் பெற்றிருக்கக்கூடிய திரைப்படத்தை ஒரு படி மேலுயுயர்த்தியிருக்கிறது டிஐ பணி.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை இப்படத்திற்கு வேறொரு பரிமாணத்தை வழங்குகிறது.

முன்பாதியில் காதல், மோதல் என்றிருக்கும் திரைக்கதையோடு இணைந்து பயணிக்கும் அவ்விசை, பின்பாதியில் கிரிக்கெட்டின் மீதான வேட்கையை அதிகப்படுத்தும் வகையில் பரபரப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.

முதல் அரை மணி நேரக் கதை சொல்லல் ரசிகர்களைப் பற்றக் காரணம், செல்வா ஆர்கேவின் படத்தொகுப்பு.

அதேபோல, பின்பாதியில் கிரிக்கெட் ஆட்டங்களைக் காட்டுமிடத்திலும் நிறையவே ‘கத்திரி’ பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மீறி அப்பகுதி போரடிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பெரும்பச்சை கிராமத்தினரின் வாழ்வைக் காட்டுமிடங்களே படத்தோடு நம்மைப் பிணைக்கிறது. அதற்குக் காரணமாக விளங்குகிறது ஜெயரகுவின் கலை வடிவமைப்பு.

ஆடை வடிவமைப்பு மட்டுமல்லாமல் அதனை உடுத்தச் செய்த வகையிலும், அதோடு சம்பந்தப்பட்ட கலைஞர்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிப்பானது இயக்குனர் கற்பனையில் உதித்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவர்கள் அப்பகுதியில் வாழ்கின்றனரோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது.

அசோக் செல்வனே கதையின் மையம் என்றபோதும், தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

ஆனால், இவர்களை எல்லாம் தாண்டி படத்தில் நம்மை ஈர்க்கிறார் பிருத்வி ராஜன். திவ்யா துரைசாமியிடம் அவர் காதலைச் சொல்லத் திரியும் காட்சி தியேட்டரில் ‘வாண வேடிக்கை’யை நிகழ்த்துகிறது.

இளங்கோ குமரவேல் – லிஸி ஆண்டனி சம்பந்தப்பட்ட காட்சிகள், நமக்கு ‘அட்டகத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் வரும் நாயகனின் பெற்றோர்களை நினைவூட்டுகின்றன.

பகவதி பெருமாள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’ திரையில் தோன்றி ‘ஸ்கோர்’ செய்கிறார்.

சாந்தனுவின் மாமாவாக நடித்தவரும் மணியாக நடித்தவரும் நான்கைந்து காட்சிகளில் தோன்றி நம் மனதில் பதிகின்றனர்.

‘ஆல்ஃபா பாய்ஸ்’, ‘ப்ளூஸ்டார்’, ‘ஜியேண்ட் 11’ என்று படத்தில் பல்வேறு கிரிக்கெட் அணிகள் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு அணியிலும் பல புதுமுகங்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

அவர்கள் மிகச்சிறப்பான நடிப்பைத் தந்து, இனிவரும் படங்களில் இடம்பெறுவதற்கு ‘துண்டு’ போட்டிருக்கின்றனர்.

இவர்களில் ஒருவராக, புல்லட் பாபுவாகத் தோன்றியிருக்கும் சாஜு நவோதயாவும் ரசிகர்களால் இனி அதிகம் தேடப்படும் நபராக மாறுவார்.

நாயகன் மீது நாயகி ஈர்ப்பு கொள்வதற்கும், ஊரில் நிகழும் கலவரத்திற்கும், முடிவில் அந்த வேறுபாடு தீர்வதற்கும் மையச்சரடாக ‘கிரிக்கெட்’ விளையாட்டு காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இது கிரிக்கெட் குறித்த படமல்ல; ஒரு பகுதி மக்களின் வாழ்வியலையும், அவர்களது ஒற்றுமையையும் வலியுறுத்துவது.

இரண்டாம் பாதியில் அது கனகச்சிதமாக வெளிப்படவில்லை என்பதைத் தவிர இதில் பெருங்குறை ஏதுமில்லை. ஆனால், அதுவே படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

சாட்டையடி வசனங்கள்!

‘நீ இண்டியன் டீமுக்கு ஆடுவியா’ என்ற நாயகியின் கேள்விக்கு, ‘இல்ல, நான் எங்க ஊருக்கு ஆடுவேன்’ என்று நாயகன் பதில் சொல்வது.

‘இங்க உள்ள கிரிக்கெட்ல ஏகப்பட்ட பாலிடிக்ஸ்; அதுக்குதான் நான் வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு ஆட ஆசைப்படுறேன்’,

‘ஏதாவது ஒண்ணு உன்னை அழ வச்சதுன்னா அதுக்கு உண்மையா இருக்கோம்னு அர்த்தம்’ என்பது போன்ற சாட்டையடி வசனங்கள் படத்திற்குள் நம்மை இழுத்துக் கொள்கின்றன.

அதேநேரத்தில் ‘ரஞ்சித் அண்ணா விட்றாதண்ணா..’, ’ஹேய்.. அடிச்சி ஜெயிங்கடா’ என்பது போன்ற வசனங்கள் ‘சார்பட்டா பரம்பரை’யை ஞாபகப்படுத்துகின்றன.

இரண்டுமே விளையாட்டைச் சுற்றி வரும் கதைகள் என்பது இரண்டுக்குமான இன்னொரு ஒற்றுமை.

அசோக் செல்வன் காதலிப்பது யாரை என்று சாந்தனு உணருமிடம், பின்பாதி திரைக்கதையின் திருப்பங்களுக்குக் காரணமாக இருக்கும். அதுவரை அசோக் செல்வனை சாந்தனு பார்த்த பார்வை முற்றிலுமாக மாறும்.

அதேபோல, ‘ஒரு தடவை நான் கிரவுண்ட்ல கிரிக்கெட் ஆடணும்’ என்று கீர்த்தி சொல்லும் இடத்தில், எத்தகைய பொருளாதார, சமூக உயர்வைப் பெற்றபோதும் பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறோமா நாம் என்ற கேள்வியை எழுப்பி, அவரது காதலுக்கு இன்னொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.

அற்புதமான உளவியல் பார்வையோடு அவற்றைக் காட்சிப்படுத்திய வகையில் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் நம்பிக்கை தரும் கலைஞராகக் காட்சியளிக்கிறார்.

ஆனால், இரண்டாம் பாதியில் ‘சென்னை 600028’ உட்படச் சில திரைப்படங்களில் வந்த காட்சிகளை இடம்பெறச் செய்த வகையில் ஏமாற்றியிருக்கிறார்.

கூடவே, இரண்டு முக்கிய அணிகளில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் நம் மனதில் நிலைநிறுத்தத் தவறியிருக்கிறார்.

அது போன்ற சில குறைகளைப் பொருட்படுத்தாவிட்டால், நாம் வாழும் சமூகத்தில் மாயவலையாகப் படர்ந்திருக்கும் சாதீய வன்மத்தைக் கிரிக்கெட் எனும் விளையாட்டின் வழியாக உணர்த்தும் பாங்கு பிடித்துப்போகும். கலையம்சமிக்க கமர்ஷியல் படமாக ‘ப்ளூஸ்டார்’ பார்வையாளர்களை ஈர்க்கும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment