சில நேரங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால், பார்க்குமிடங்கள் எல்லாம் சுமாராகத் தோன்றும்.
சில வேளைகளில், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளும் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களாக மாறும்.
திரைப்பட உருவாக்கத்திலும் கூட அதுபோன்று நிகழும் என்று பல ஜாம்பவான்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைத் தந்த கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தைப் பார்த்தபோது அது உண்மை என்றே தோன்றியது.
சரி, மேலே சொன்னதில் இப்படம் எந்த வகையில் சேரும்?!
சலூன் திறக்கும் ஆசை!
தென்காசி அருகேயுள்ள கிராமமொன்றில் வாழ்கிறது கதிரவனின் குடும்பம். ‘கதிர்’ என்பது அவரது செல்லப் பெயர் கதிரின் நெருங்கிய நண்பன் பஷீர். இவர்களது தந்தைகளும் கூட நண்பர்கள் தான்.
சிறு வயதில் பஷீருக்கு முடி வெட்டிவிடும் சாச்சாவைக் (லால்) காண்கிறார் கதிர். ஸ்டைலாக அவர் முடிவெட்டுவதும், ஒருவரது தோற்றத்தையே அடியோடு மாற்றுவதும் அவரது மனம் கவர்கிறது. பள்ளி, கல்லூரி சென்றபிறகும் கூட அந்த ஈர்ப்பில் மாற்றமில்லை.
அந்த காலகட்டத்தில் சாச்சா கேரளாவிலுள்ள தனது பூர்விக கிராமத்திற்குச் சென்றுவிடுகிறார்.
ஆனாலும், அவரைப் போலவே ஒரு சலூன் திறந்து மிகப்பெரிய அளவில் மக்களைக் கவர வேண்டுமென்ற கதிரின் (ஆர்ஜே பாலாஜி) ஆசை மட்டும் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.
கல்லூரி முடித்து ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வாழ்வைத் தொடங்கும் கதிர், ஒருகட்டத்தில் பெரிதாக ஒரு சலூன் தொடங்க முடிவு செய்கிறார். அதற்குள் அவருக்குத் திருமணமாகிவிடுகிறது. குடும்பப் பொறுப்புகளும் வந்துவிடுகிறது.
அதையும் மீறி, சாச்சா வைத்திருந்த ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற பெயரில், அவரது உருவத்தைக் கொண்ட லோகோவோடு ஒரு முடி திருத்தகத்தைத் தொடங்குகிறார். பஷீர் (கிஷன் தாஸ்) அவருக்கு உதவிகரமாக இருக்கிறார்.
சிங்கப்பூர் சலூன் பின்னால், மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்புவிழாவுக்காகக் காத்திருக்கின்றன.
லாபத்தை அள்ளிக் கொழிக்கப் போகிறார் என்று கதிரின் உற்றாரும் உறவினர்களும் நினைத்திருக்கும் வேளையில், அவர்களது கனவைக் கலைக்கிறது ஒரு சம்பவம்.
ஒருநாள் தொடர்ந்து கனமழை பெய்கிறது. சதுப்புநிலப் பகுதியில் கட்டப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்து விழுகின்றன.
அது மட்டுமல்லாமல், அப்பகுதியில் குடிசைகளை இழந்த மக்கள் பலர் சலூன் இருக்குமிடத்தைச் சுற்றிக் குடியேறுகின்றனர். அதன்பிறகு கதிரின் கனவு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்த சாதியைச் சேர்ந்தவர் இந்த தொழில்தான் செய்ய வேண்டுமென்ற நியதி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிய வகையில் நம்மைக் கவர்கிறது ‘சிங்கப்பூர் சலூன்’.
ஆனால், அது மட்டுமே போதுமா என்ற கேள்விக்கான பதில் இல்லாததுதான் இப்படத்தின் பெரிய பலவீனம்.
சிறப்பான பாத்திரங்கள்!
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் வழியாக ‘பாக்யராஜின் இன்னொரு வெர்ஷன்’ என்ற தோற்றத்தைக் கஷ்டப்பட்டு உருவாக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. அதிலிருந்து ‘ரன் பேபி ரன்’ தர முயன்று தோல்வியுற்றிருந்தார். இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதுதான் சோகம்.
இத்தனைக்கும் இதன் முற்பாதியில் காமெடி நிறையவே இருக்கிறது. ஆனால், மருந்துக்குக் கூட ஆர்ஜே பாலாஜியின் பங்கு இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
மீனாட்சி சவுத்ரி இதில் பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சில பிரேம்களில் மட்டுமே அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
மற்றபடி, அவரது இருப்பைக் கொண்டாட இப்படத்தில் இடம் தரப்படவில்லை.
பாலாஜியின் நண்பராக வரும் கிஷன் தாஸுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. ஆனால், தான் தோன்றிய காட்சிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
நாயகனுக்கு அடுத்தபடியாக லால் மற்றும் சத்யராஜின் பாத்திரங்கள் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
தொடக்கக் காட்சிகளில் ஒரு ஸ்டைலான கிராமத்து சலூன்கடைக்காரர் என்ற அடையாளத்தைச் சட்டென்று நம் மனதில் பதிய வைக்கிறார் லால்.
பாலாஜியின் மாமனாராக நடித்துள்ளார் சத்யராஜ். அவரது பாத்திர வார்ப்பே இடைவேளைப் பகுதியில் நாம் விழுந்து விழுந்து சிரிக்கக் காரணமாகிறது.
அந்த காட்சிகளில் கிஷன் தாஸ், பாலாஜியை விட ரோபோ சங்கர் அடிக்கும் லூட்டிதான் ‘அட்ராசிட்டி’யாக அமைந்துள்ளது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு சத்யராஜிடம் எந்தளவுக்கு செண்டிமெண்ட் நடிப்பைப் பெற வேண்டுமென்பதில் திட்டமில்லாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.
சொல்லப்போனால், இந்த பாத்திரத்தில் பாக்யராஜ் போன்ற ஒருவரை நடிக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தலைவாசல் விஜய், சின்னிஜெயந்த், ஜான் விஜய், குமார் நடராஜன், இந்துமதி, இமான் அண்ணாச்சி என்று பலர் இதில் நடித்துள்ளனர்.
சுரேஷ் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் போன்றோர் ‘சும்மா’ தலைகாட்டியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து அரவிந்த் சுவாமி, லோகேஷ் கனகராஜ், ஜீவா போன்றோர் இதில் கௌரவமாகத் தோன்றியுள்ளனர்.
இது போதாதென்று ஆன் ஷீதல் வேறு ஆர்ஜே பாலாஜியின் காதலியாக ஐந்தாறு நிமிடங்களுக்கு வந்து போகிறார்.
பின்பாதியில் டான்ஸர்கள், குடிசைப்பகுதி மக்கள் என்று இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் வந்து போகின்றன.
அனைத்தையும் ‘ஜஸ்டிபை’ செய்யும்விதமாகக் காட்சிகளை இயக்குனர் சிந்தித்தபோதும், திரையில் அது மிகச்சரியாக வெளிப்படவில்லை என்பதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.
மிகச்சில பாத்திரங்கள் அற்புதமாக அமைந்தபோதும், அவற்றுக்கிடையே கோடு கிழித்தாற்போன்ற சம்பவங்களை நெய்து, ஒரு சிறப்பான திரைக்கதையைத் தரத் தவறியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.
பின்பாதியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘சிங்கப்பூர் சலூன்’ பெயரில் ஒரு குழு பங்கேற்பதாகக் காட்டியிருப்பது இன்னொரு கதையாக வேறு திசையில் செல்கிறது.
படப்பிடிப்புக்கு முன்னதாக, இதே காட்சிகளும் கதையும்தான் இயக்குனர் கைவசம் இருந்ததா என்பதற்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.
சிதைந்துபோன தாக்கம்!
காகிதத்தில் இருக்கும் சில விஷயங்கள் அப்படியே காட்சிகளாக மாறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அந்த இடமே சிறப்பான எழுத்தாக்கத்திற்கும் இயக்கத்திற்குமான வித்தியாசத்தைப் புரிய வைக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ, கோகுல் தந்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ அதற்கொரு உதாரணமாகி இருக்கிறது.
மதம், சாதிரீதியிலான சடங்குகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் கிராமம் என்பதை உணர்த்திவிட்டு, அவற்றைப் பல்வேறு லாஜிக் மீறல்களுடன் காட்டியிருப்பதை நிச்சயம் யதார்த்தம் என்று சொல்ல முடியாது.
அதேநேரத்தில், சினிமாத்தனம் என்ற வார்த்தைக்குள்ளும் அதனை அடக்க முடியவில்லை.
முன்பாதியில் பதின்ம வயது பஷீரும் கதிரும் ‘சைட்’ அடிப்பதற்காக டியூஷன் செல்லும் காட்சிகள் நம்மைக் கொஞ்சமாக நெளிய வைக்கின்றன என்றால், ஷங்கர் பட பாணியில் பின்பாதியில் குடிசைவாசிகளின் முன்னேற்றத்திற்காக நாயகன் ஆர்ஜே பாலாஜி களமிறங்கும் இடங்கள் ‘ப்பா..’ என்று நம்மை அலற வைக்கின்றன.
இவற்றைத் தாண்டி மௌலிவாக்கம் குடியிருப்பு தகர்வு, பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு, பறவைகள் வலசை போகுதல், ஊடகங்களின் ‘எலைட்’ பார்வை என்று பலவற்றை இதில் புகுத்தியிருக்கிறார் கோகுல்.
ஒரு கமர்ஷியல் படத்தில் சரியான கலவையில் அவை கலந்திருக்க வேண்டியது அவசியம். ‘சிங்கப்பூர் சலூன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தவில்லை.
அரவிந்த் சுவாமியை ‘தெய்வீக புருஷராக’ காட்டும் காட்சியும் இதில் உள்ளது. ஆனால், அதுவும் கூட சரியான தாக்கத்தை உருவாக்காமல் திரிந்திருக்கிறது.
என்னதான் சுவாரஸ்யமான காட்சியாக்கத்தைக் கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டிருந்தாலும், மொத்த திரைக்கதையும் க்ளிஷேக்களின் கொடூர உருவமாக மாறியிருப்பதை என்னவென்று சொல்வது?
பண்பலை வானொலியில் ‘க்ளிஷே’ காட்சிகளையும் திரைக்கதைகளையும் உரித்து உப்புக்கண்டம் போட்ட ஆர்ஜே பாலாஜி, அப்படியொரு திரைப்படத்தில் தானும் ஒரு அங்கமாக விளங்குவதை எப்படி ஏற்றுக்கொண்டார்?
’ட்ரோல்’ செய்வார்கள் என்று தெரிந்தும், அக்காட்சிகளில் எப்படி நடித்தார்?
ஒருவேளை அதுதான் பி, சி செண்டரில் வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று ரசிகர்களைப் பற்றி ‘தப்புக்கணக்கு’ கொண்டாரா? தெரியவில்லை.
இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் ‘விஎஃப்எக்ஸ்’ உதவியோடு காட்டும் நூற்றுக்கணக்கில் கிளிகளைக் காட்டும் காட்சியொன்று உண்டு. அதில் விஎஃப்எக்ஸின் தரம் படுமோசம்.
அதனைக் கொண்டு இந்த படத்தை ‘ட்ரோல்’ செய்யக்கூடும் சிலர். அதனைவிட, இப்படிப்பட்ட கதைகளைக் கொண்டு ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை தான் அதிகம் ‘ட்ரோல்’ செய்யப்பட வேண்டும்.
காரணம், அந்த எண்ணம்தான் படம் பார்க்கும் ரசிகர்களிடம் உரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் விலகலை உண்டாக்கியிருக்கிறது.
திரையில கதை சொல்லுங்க, காதுல பூ சுத்தாதீங்க..!
– உதய் பாடகலிங்கம்