நூல் அறிமுகம்:
வண்டி எப்படி ஓடுது, ஃபேன் எப்படி சுத்துதுன்னு கேட்கப்படும் கேள்விக்கும், ஏன் வெள்ளிக்கிழமை நகம் வெட்டகூடாது?, ஏன் போகும் போது எங்க போறன்னு கேக்கக் கூடாதுன்னு குழந்தைகளால் கேட்கப்படும் கேள்விக்கும் பெரியவர்களால் கொடுக்கப்படும் பதிலும், எதிர்வினையும் ஒன்றல்ல.
முதல் இரண்டு கேள்விக்கு பெருமையும், அடுத்த ரெண்டு கேள்விக்கு கோபமும் தான் குடும்பங்களின் வெளிப்பாடு.
எல்லாவற்றையும் கேள்வி கேட்பது குழந்தைகளின் இயல்பு, எதெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பதை பழக்கப்படுத்துவது குடும்பங்களின் பழக்கம்.
தங்கள் ‘நம்பிக்கை’யென்று நம்புகின்ற ‘மூடநம்பிக்கை’ பழக்கத்தை கேள்வி கேட்கக் கூடாது என்ற பயிற்சியை தொடர்ச்சியாக குடும்பங்கள் செய்வதை பார்க்கலாம்.
இப்பழக்கத்தை கேள்வி கேட்ட குழந்தைகள் பெரியவர்களின் எதிர்வினையை பார்த்து ‘அமைதி’யாகி விடுவார்கள். அந்த ‘அமைதி’ அவர்களோடு சேர்ந்தே வளர்கிறது.
சில விஷயங்களை கேள்வி கேட்கக் கூடாது என்கின்ற ‘பயமும்’ ‘அதிகாரமும்’ அந்த ‘அமைதியோடு’ வளர்கிறது. அதேதான் அவர்கள் வளர்த்தவுடன் அவர்களிடமிருந்து வெளிப்படும்.
முன் சொன்னதுபோல இங்கு ‘கேள்வி கேட்பது’ பிரச்சனையல்ல ‘எதை?’ கேள்வி கேட்கிறோம் என்பது தான் பிரச்சனை.
அதை தெளிவாகவே புத்தகத்தின் தலைப்பு பேசுகிறது ‘மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டும் சிறுநூல்-கேள்வி கேட்டுப் பழகு’
இப்புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் நமது வீட்டில் இன்னும் பழகிக்கொண்டிருக்கும் மூடப்பழக்கமே, அதற்குப்பின் எந்த அறிவியல் காரணமும்மில்லை என்று தெரிந்தாலும் ‘படித்தவர்கள்’ இது பெரியவர்களின் “நம்பிக்கை” என்று அடைப்புக்குறிக்குள் அடைந்து போகிறார்கள்.
கற்பனை உலகத்தை உருவாக்கி அதிலிருந்து கேள்விகள் கேட்காமல், நமது வீட்டில் இருக்கும் மூடப்பழக்கத்தை எளிமையான மொழியில் கேள்வி கேட்கும் புத்தகம் குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமாகிறது.
இப்புத்தகம் குழந்தைகளுக்கு மூடநம்பிக்கையை கேள்விகேட்க தூண்டுவது மட்டுமல்லாமல் கேள்வி கேட்டால் வரும் எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்வது, அதற்கான பதிலை நோக்கி எப்படி பயணம் செய்வது என்பதற்கான வழிகாட்டி.
‘மூடநம்பிக்கை’ ஒரு செயல்பாடு அது நமது கண்களை கட்டி, வாயை அடைத்து கேள்வி கேள்வி கேட்க விடாது, சிந்திக்க விடாது.
‘மூடநம்பிக்கை’ ஒரு அடித்தளம் அதன் மீது மதம், சாதி போன்ற செங்களால் கட்டப்படுவது சர்வாதிகாரிகளின் கோட்டை.
எந்த கேள்வியும் கேட்காமல் மூடநம்பிக்கையில் உருவாகின்ற சமூகம் சமத்துவமற்ற பாதையில் செல்லும். மாறாக எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் சமூகம் சமத்துவத்தை நோக்கிச் செல்லும்.
கேள்வி கேட்கும் சமூகத்தை உருவாக்குவதும், கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்குவதும் நமது கடமை.
அப்பொறுப்பை உணர்ந்து செயல் வடிவாமாக இப்புத்தகத்தை உருவாக்கிய ஆசிரியர்கள் முத்துக்குமாரி எஸ்.முத்துக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
புத்தகத்தில் நூலகத்தில் வரும் ராமசாமி தாத்தா குறியீடும், மூடநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்று தந்தை பெரியாரோடு, நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி.
*****
நூல்: கேள்வி கேட்டுப் பழகு
ஆசிரியர்கள்: சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி
பதிப்பகம் : புக்ஸ் பார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 47
விலை: ரூ.50/-
தொடர்புக்கு: 044-24332924