தமிழ் சினிமா இசையமைப்பாளர்களை தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் டி.இமான்.
மைனா, கும்கி, வேலை இல்லாத பட்டதாரி என தொடங்கி, கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட படத்தின் பாடல்களை கேட்டாலே இது இமானின் இசையாகத்தான் இருக்கும் என உறுதியாக சொல்லும் அளவுக்கு அவரது இசை தனித்துவமானது.
இதுவரை 125 படங்களுக்கு இசை அமைத்துள்ள டி.இமான் தனது பயணத்தை சின்னத்திரையில் இருந்து தொடங்கியவர்.
விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவர், முதல் படத்திலேயே அறிமுக நடிகையும் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவை பாட வைத்து மேஜிக் செய்தார்.
‘தமிழன்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்க, குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார்.
டி.இமானின் இசை என்றால் தனித்துவமாக இருக்கும் என்ற அங்கீகாரத்தை பெற்ற அவர், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தனக்கென தனி பாணியை உருவாக்கினார்.
தொலைக்காட்சி மூலம், சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலம் மக்களின் இதயங்களை கவர்ந்த சிவகார்த்திகேயனுக்கு பக்க பலமாக அமைந்த ‘மனம் கொத்திப் பறவை’ படம் மிக பெரிய வெற்றியை தந்தது.
அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், என சிவா, இமான் இணையும் அனைத்துப் படங்களும் சக்கப்போடு போட்டது. முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் டி.இமானின் 50-வது படமாக அமைந்தது.
அண்ணன் – தங்கச்சி, அப்பா – மகள், காதல் செண்டிமென்ட் பாடல்களின் வரிசையில் தமிழ் சினிமாவில் வரலாற்றில் இமானின் பங்களிப்பு முக்கியமானது.
‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே…” பாடல் டி.இமானுக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.
தந்தை மகள் பாசத்தில் உருகச்செய்யும் இப்பாடல் எப்போதும் பேவரைட் பட்டியலில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
அதேபோல தந்தை மகன் பாசத்தைக் காட்டும் விதமாக ‘டிக், டிக், டிக்’ படத்திற்காக அமைக்கப்பட்ட “குறும்பா…” பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
காதல் பாடல்கள் மட்டுமல்லாமல் துள்ளலிசையிலும் தூள் கிளப்பியவர் டி.இமான். இசையப்பாளராக மட்டுமல்ல… பாடகராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியவர் டி.இமான்.
– நன்றி: நியூஸ் 7 தமிழ்