– ரெங்கையா முருகன் நெகிழ்ச்சி
இரண்டு நாட்களுக்கு முன்பாக இதழியலாளரும் என் அருமை நண்பருமாகிய பீர்முகம்மது அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக முக்கியமான தமிழ் படைப்புகளை பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் பரிந்துரை நிகழ்வில் நானும் ஒரு முகவராக இருக்கிறேன் என்றார்.
பெரியவர் வ.உ.சி. குறித்த ஏதாவது ஒரு படைப்பினை பரிந்துரை செய்யலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக பெரியவர் வ.உ.சி. பதிப்பித்த “வள்ளியம்மை சரித்திரம்” நூலினை பரிந்துரை செய்யலாம் என்ற யோசனையை தெரிவித்தார்.
இந்த நூலினை ஏன் பரிந்துரை செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது சென்ற நூற்றாண்டில் ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் தனது உயிர்த்துணைக்காக நூலினை பதிப்பித்த செயல் மிகவும் முற்போக்கான செயல் அல்லவா என்றார்.
நன்றாக சொன்னீர்கள் பீர். முதலில் நீங்கள் இவரை யோசித்துப் பார்த்ததே அரிது. இந்த வள்ளியம்மை சரித்திரம் நூல் செய்யுள் வடிவில் அல்லவா இருக்கிறது. அதனைப் புரிந்து மொழிபெயர்ப்பு செய்வது சவாலான வேலை என்றேன்.
மேலும் மிக முக்கியமான ஆட்களிடம் நான் எவ்வளவோ சொல்லி அவர்கள் செவியில் ஏறவில்லை. ஆனால் நீங்களாகவே யோசித்து கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றேன்.
கூடவே கூடுதல் தகவல்களையும் அளித்தேன். இந்த வள்ளியம்மை சரித்திரம் நூலின் தாக்கத்தினால்தான் வெ. சாமிநாத சர்மா தனது மனைவி பிரிவின் போது “அவள் பிரிவு” என்று படைப்பு தந்தார்.
அதன் தொடர்ச்சியாக வெ.சாமிநாத சர்மாவின் சீடர் பெ.சு.மணி அவர்கள் தனது மனைவி மறைவின் போது பெரியவர் பதிப்பித்த வள்ளியம்மை சரித்திரம் மற்றும் வெ.சா. வின் அவள் பிரிவு தாக்கம் காரணமாகவே அவர் “நான் மறவேன்” என்று படைப்பினை அளித்தார் என்ற தகவலையும் பரிமாறினேன்.
ஆனால் எனது ஆலோசனையாக பெரியவர் சேலம் மாநாட்டு உரை “எனது பெருஞ்சொல்” வேற்று மொழியில் வர வேண்டிய முக்கியமான அரசியல் மறை நூல் என்றேன். நிச்சயமாக இந்த நூலினையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.
இறுதியாக வள்ளியம்மை சரித்திரம் நூல் பெங்காலி மொழியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனதாக இன்று தொலைபேசியில் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் மிக முக்கியமான பதிப்பகம் சேது பிரகாசனி (Sethu Prakashani) மூலமாக சுப்ரததாஸ் அவர்கள் வங்காளத்தில் மொழிபெயர்க்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்றைய நாளில் வங்காளத்தைச் சார்ந்த அரவிந்தர் தனது வந்தேமாதரம் இதழில் பெரியவர் வ.உ.சி.யின் சுதேசிய போராட்ட பங்களிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தியவர்.
அதே வங்காளத்தில் பெரியவர் மூத்த உயிர்த்துணை சரித்திரமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசுக்கும், இந்த முன்னெடுப்பு எடுத்த திரு.இளம்பகவத், ஐஏஎஸ் அவர்களுக்கும் குறிப்பாக நண்பரும் இதழியலாளருமான பீர்முகம்மது அவர்களுக்கும் வ.உ.சி. ஆய்வு வட்டம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி: பேஸ்புக் பதிவு