நூல் அறிமுகம்:
இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.
அவ்வாறு புதிதாக துபாய் வரும் வள்ளி, அங்கு போய்ச் சேர்ந்த பின் அவள் ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.
அங்கே அவள் சந்திக்கும் நபர்கள், அவர்களின் வாழ்வியல் முறை, பின் அவளின் நிலை என்னவானது என கதை சரளமாகவும் அதே சமயம் முடிச்சுக்கள், திருப்பங்கள் ஏதுமின்றி ஒரே நேர்கோட்டில் செல்கிறது.
துபாயின் இடங்களைப் பற்றியும், துபாய் வாழ்க்கையின் சித்தரிப்பும் நன்றாகவே எழுதப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆண்கள் படும் கடினத்தைப் பதிவு செய்திருக்கும் நூல்களிலிருந்து விலகி பெண்களின் வாழ்க்கையைத் தொட்டு, பெண் ஆசிரியர் மூலம் அவர்களின் அனுபவங்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
கதை ஈடுபாட்டுடன் இருந்தாலும், வழக்கமான குறுநாவல் டெம்ப்ளேட்டிலிருந்து விலகி, நீள் கதை போன்றிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.
மேலும், இது குறுநாவலூக்கான கருவும் அல்ல. கதையின் மையக் கதாபாத்திரமே பெண்ணைப் பற்றி என்பதால் கதையில் சொல்லப்படுவதற்கு இன்னும் நிறையவே உண்டு.
மேலும் வள்ளி துபாயில் சந்திக்கும் அனைவரும் ஈகைக் குணம் கொண்டவர்களாக மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆடு ஜீவிதம், அஜ்னபி அளவிற்கு விரித்து எழுதியிருக்கலாம். இருந்த போதும், சிறிய அளவு நூலாயினும் வள்ளி போன்று அயல் நாட்டிற்கு வரும் பெண்களின் வாழ்க்கையின் சாரத்தை தன்னளவில் பதிவாக்கி அதில் வெற்றியைப் பெற்றுள்ளது.
‘மராம்பு’ ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்.
புத்தகம் : மராம்பு
ஆசிரியர் : நசீமா ரசாக் (Naseema Razak)
பக்கங்கள் : 102
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்