ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி.
இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
4.5 அடி உயரம், 200 கிலோ எடைகொண்ட குழந்தை ராமர் வலது கையில் அம்பையும், இடது கையில் வில்லையும் ஏந்தி நிற்கிறார். தலையில் தங்கக் கிரீடம்.
50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் விவிஐபிக்களுக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவில் அவர்களுக்கு மட்டுமே வழிப்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விவிஐபிக்கள் யார்?
அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள 7 ஆயிரம் பேரில் 506 பேர் உத்தரப்பிரதேச மாநில அரசின் சிறப்பு விருந்தினர்கள். இவர்களுக்கு மாநில அரசின் ’ஸ்பெஷல்’ மரியாதை அளிக்கப்படும்.
தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, திரைப்பட நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அக்ஷய் குமார், பிரபாஸ், அல்லு அர்ஜுன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி, பி.டி.உஷா, சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர்.
இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.
அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் துறவிகள் மற்றும் ஜீயர்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கோயில் கட்டுமான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட 400 தொழிலாளர்கள், விழாவை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் மாநில அரசின் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
5 லட்சம் லட்டுகள்
பக்தர்களுக்கு விநியோகம் செய்ய மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலில் 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டன.
5 லாரிகளில் அவை அயோத்திக்கு வந்து சேர்ந்துள்ளன. அயோத்திக்கு புறப்பட்ட அந்த லாரிகளை அந்த மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.
அதோடு, நேபாளத்தில் சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து 3 ஆயிரம் பரிசு பொருட்கள் 30 வாகனங்களில் அயோத்தி வந்து சேர்ந்துள்ளன.
அதில் வெள்ளிக் காலணிகள், ஆடை – ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.
அயோத்தி குழந்தை ராமர் சிலையின் சிறப்புகள்:
* இந்த சிலையானது 51 இன்ச் உயரம் 200 கிலோ எடை கொண்டது. சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி உள்ளார்.
* இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ள கல்லின் பெயர் கிருஷ்ண ஷிலா. இது கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு பல டன் எடை கொண்ட ஒற்றை கல்லில் இருந்து 200 கிலோ எடையுடன் கலைநுட்பத்துடன் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைக்கு தொடர்ந்து தண்ணீர், பால் அபிேஷகம் செய்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
* ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி ஆகிய தசாவதாரங்கள் சிற்பங்களாக உள்ளன.
அதுமட்டுமின்றி பிரம்மனும், ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன.
ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
* மேலும் ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.
* மேலும் இந்த சிலையின் மீது ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி விழுவது போன்று வடிமைக்கப்பட்டுள்ளது.
ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியில் விழும்படி கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– பி.எம்.எம்.