18 நாட்களில் ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

– பபாசி தகவல்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

வழக்கம்போல் அனைத்து அரங்கிலும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட்டது. பார்வையற்றவர்களுக்கு சிறப்பாக அரங்கு அமைக்கப்பட்டு, இலவச கழிப்பறை, குடிநீர் மற்றும் இண்டர்நெட் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் மேடைப் பேச்சுகள் இடம்பெற்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று கடைசி நாள் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மொத்தம் 18 நாட்களில் 15 லட்சம் வாசகர்கள் வருகைதந்த இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி தெரிவித்துள்ளது.

இதனிடையே புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று டாக்டர். மாசிலாமணி எழுதிய “அறிவார்ந்த மதம்” என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கலை இலக்கிய சிந்தனையாளர் இந்திரன், கீழடி அகழ்வாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்தியாவின் முன்னணி முன்னணி விஞ்ஞானியான டாக்டர் ஜி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment