நட்சத்திரங்களுக்காகக் காத்திருக்கும் இயக்குனர்கள்!

ஒரு படத்தின் வெற்றிக்கு நாயகர்கள், நாயகிகள் முகங்களாகத் தெரிந்தாலும், அதன் ஆன்மாவாக இருப்பது இயக்குனர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்களும்.

அதனைப் புரிந்த காரணத்தாலேயே, சில காலம் வரை திரைப்படங்களுக்கான வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டன. அவற்றில் பங்காற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் மரியாதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இன்று, அந்த நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. வெற்றி என்பது மிகச்சில நாட்களில் அறிவிக்கப்படுகிறது. அதுவும் கூட, குறிப்பிட்ட நாயகர்களுக்குக் கிடைத்ததாகவே பார்க்கப்படுகிறது.

சினிமா தொடங்கிய காலம் முதலே இது உண்டு என்றபோதும், தற்போதைய தமிழ் சினிமா நாயகர்களைச் சுற்றியே சுழல்கிறது என்பது மறுக்க முடியாததாக உள்ளது.

அதனால், அந்த நட்சத்திரங்களுக்காக அல்லது நடிகர்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருப்பதும் நிகழ்கிறது.

அந்த பட்டியல் பெருகுவதும், அவ்வாறு காத்திருந்தவர்கள் சில வேளைகளில் அதிர்ச்சியை எதிர்கொள்வதும் தொடர்கிறது.

ஒரு நாயகன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இன்னொரு படத்தின் கதையைக் கேட்பதில் தொடங்கி அதன் முன் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் கண்டறிகிறார்.

சில வேளைகளில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதும் நிகழ்கிறது. அதனால், அந்த நாயகன் பின்னால் பல இயக்குனர்கள் கதை சொல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.

அவ்வாறு கதை சொல்லி சம்பந்தப்பட்ட நாயகனுக்குப் பிடித்துப்போன பின்பும், கையிருப்பு படங்கள் முடியும் வரை அவருக்காக அந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் காத்திருக்க வேண்டியுள்ளது.

அவை மாதங்களாக அமையாமல் ஆண்டுகளாக மாறும்போதுதான் சிக்கல் பெரிதாகிறது.

அது உண்மையா என்றறிய, கடந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களின் இயக்குனர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாலே அறிய முடியும்.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த ‘துணிவு’ படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத், அதற்கடுத்து தனுஷ், யோகிபாபுவைக் கொண்டு இரு வேறு படங்கள் இயக்குவதாகச் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்திற்காக அவரை நாயகனாகக் கொண்டு ஒரு படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், இப்போதுவரை அதற்கான அறிவிப்பு ஏதும் வரவில்லை. இடையே, கார்த்தியை நாயகனாகக் கொண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் அடுத்த பாகத்தை வினோத் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இப்போதுவரை, அவரது அடுத்த படம் என்னவென்று தெரியவில்லை.

துணிவுக்கு பிறகு அஜித்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால், சொல்லப்படாத சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டு, தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதனை நாயகனாகக்கொண்டு ஒரு படம் தரும் முயற்சியில் விக்னேஷ் சிவன் உள்ளார். இந்த சம்பவங்கள் முழுதாக ரசிகர்களுக்குத் தெரிய வருவதற்குள் ஓராண்டு கடந்துவிட்டது.

இதேபோல ரஜினியிடம் கதை சொன்னார் தேசிங்கு பெரியசாமி. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற இளமை ததும்பும் படத்தைத் தந்தவரோடு சூப்பர்ஸ்டார் இணைகிறாரா என்று ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

சில நூறு கோடி ரூபாய் செலவில் ‘பாகுபலி’ ஸ்டைலில் அப்படம் உருவாகும் என்று செய்திகள் வெளியாகின. அனைத்தும் வதந்திகளாக மாறிப் போயின.

அப்படத்தை விட்டு ரஜினி விலக, தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் அக்கதை தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு வெளியானபின்னும், அப்படம் இன்றுவரை என்ன நிலைமையில் இருக்கிறது என்ற தகவல் தெரிய வரவில்லை.

‘டான்’ தந்த சிபி சக்கரவர்த்தியும் கூட ரஜினிக்குக் கதை சொல்லி ஒரு படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இடையில் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, அப்படம் நிகழவில்லை என்று கூறப்பட்டது.

தற்போது இயக்குனர் சிபி மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணையவிருக்கிறார் என்றும், அப்படம் ‘டேக் ஆஃப்’ ஆகப் பல மாதங்கள் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இவையனைத்தும் சில பத்திரிகையாளர்களுக்குத் தெரிய வந்து, அவர்கள் வழியாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தான்.

முழுப்படத்தையும் முடித்துவிட்டு முறையான அறிவிப்புக்காகக் காத்திருக்கும் இயக்குனர்கள் பலர் உண்டு. சில நாட்கள் படப்பிடிப்புடன் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றவர்கள் உண்டு.

முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு படப்பிடிப்புக்குச் செல்லமுடியாமல் தவிப்பவர்கள் உண்டு.

நாயகனையும் தயாரிப்பு நிறுவனத்தையும் உறுதி செய்துவிட்டு, படத்தை எடுக்க முடியாமல் பல ஆண்டுகளாகத் திண்டாடும் இயக்குனர்களும் உண்டு.

ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல கதைகள், காரணங்கள் குவிந்திருக்கும். பலவற்றை உற்றுப்பார்த்தால், சம்பந்தப்பட்ட இயக்குனர்களால் எந்தப் பிரச்சனைகளும் இல்லை என்பது தெரிய வரும்.

சரி, அப்படியிருந்தும் ஏன் அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது? ஏனென்றால், நாயகர்களே இன்று திரையுலகின் போக்கினை முடிவு செய்பவர்களாக இருப்பதுதான்.

கொஞ்சம் மாற்றிச் சொன்னால், ஒரு படம் ஓடினால் அதன் நாயகரை அப்படியொரு பீடத்தில் ‘சினிமா பண்டிதர்களே’ ஏற்றிவிடுகின்றனர். பிறகு வேறென்ன செய்ய முடியும்?

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இயக்குனர் தனக்கென்று கதாசிரியர், திரைக்கதை விவாதக் குழு, உதவி இயக்குனர்களை வைத்திருப்பார்.

அவர்களைக் கொண்டு ஒரு படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே, அடுத்த படத்தின் நாயகனை முடிவு செய்வதில் தொடங்கிப் படத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் கண்காணித்து வருவார்.

ஒரு படம் வெளியாகி அதன் முடிவு தெரிந்ததும் அல்லது தெரிவதற்கு முன்னரே அடுத்த படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவார். அதனை நாயகர்களும் ஏற்றுக்கொண்டனர். இன்று, அந்த நிலைமை என்பதே கவலைக்கான காரணம்.

இன்று, மிகச்சில இயக்குனர்கள் முழு ஸ்கிரிப்டையும் தனியாகத் தானே தயார் செய்கின்றனர். அது குறித்த ‘டிஸ்கஷனை’ மட்டுமே உதவி இயக்குனர்களோடு மேற்கொள்கின்றனர்.

அதில் செய்யப்பட்ட திருத்தங்களோடு நாயகனுக்கும் தயாரிப்பாளருக்கும் கதையைச் சொல்லிவிட்டுப் பல மாதங்கள், ஆண்டுகளாகக் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

அந்த நேரத்தில் பல கதைகளுக்கு உருவம் கொடுத்தாலும், மேற்சொன்ன படத்தை முடிக்காமல் வேறு பக்கம் திரும்ப முடியாது என்பதே நிலைமை. இது எப்படிச் சரியாக இருக்கும்?

தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் கூட இயக்குனர்கள் இந்த நிலைமையைத்தான் எதிர்கொள்கின்றனர்.

மலையாளத் திரையுலகில் வெவ்வேறு கதாசிரியர்கள், நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று இயங்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்து தங்களது படைப்பாக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களும் கூட மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்பதே நிதர்சனம்.

ஆனால், அந்தக் காலம் அவர்களுக்கான படைப்பூக்க காலமாக உள்ளது. நம்மவர்களுக்கோ அது ‘படைப்புச் சிந்தனை’யையே சிதைப்பதாக இருக்கிறது.

ஏனென்றால், காத்திருப்பு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே வலியைத் தரக்கூடியது. அதனை எதிர்கொள்ளாதவர்களுக்கு அதுவொரு தகவல். அவ்வளவுதான்!

இந்த நிலைமையில் மாற்றம் வந்தால், கமர்ஷியலாக பிரமாண்டமான படத்தைத் தரும் இயக்குனர் ஒருவர் அடுத்ததாக சிறிய படமொன்றைச் செய்யும் நிலை வரக்கூடும்.

அதற்கடுத்து அவர் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்தை இயக்கலாம்.

எண்பதுகளில் உச்சம் தொட்ட எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், ராமநாராயணன், ரங்கராஜ், மனோபாலா என்று பல கமர்ஷியல் இயக்குனர்கள் அதைச் செய்துகாட்டி பாதை அமைத்து தந்துள்ளனர்.

அதன் வழி நடந்தால், ரசிகர்களான நாமும் ‘ஒரேமாதிரியான படமா வருதே’ என்ற கவலையின்றி வெவ்வேறுவிதமான ரசனைத் திறனுக்கு வேலை கொடுக்கலாம்!

– மாபா

Comments (0)
Add Comment