கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 31-ம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா்.
ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், ஒன்றிய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனா்.
பிரதமா் மோடியின் மூன்று நாள்கள் பயணத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, ராமேசுவரம், மதுரை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் பிரதமரின் பாதுகாப்புக்காக சுமார் 10,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனா். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர், நாளை காலை திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதையொட்டி திருச்சியிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அனுமதிக்கப்பட உள்ளனா்.
பிரதமரின் வருகையையொட்டி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புக்காக கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதன்பிறகு ராமேசுவரம் செல்லும் பிரதமா், ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நாளை இரவு தங்குகிறார்.
அதற்கு அடுத்த நாள் காலையில் தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமசுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
அதைத் தொடா்ந்து ராமா் பாலம் கட்டுமானம் தொடங்கிய இடமாகக் கருதப்படும் அரிச்சல்முனை பகுதியையும் பிரதமா் பார்வையிட்டு பூஜை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதன் பிறகு ஹெலிகாப்டா் மூலம் ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் பிரதமா், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
அயோத்தியில் ஜன.22-ம் தேதி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களுக்கு பிரதமா் மோடி சென்று வழிபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.