ராக்கி, சாணிக்காயிதம் என்ற இரண்டு படங்கள் மூலமாகக் குறிப்பிடத்தக்க இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டியவர் அருண் மாதேஸ்வரன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்ல முயன்றன அப்படங்கள்.
அதில் நிறைந்திருந்த வன்முறை சினிமா ஆர்வலர்களிடையே கொஞ்சம் அசூயையும் விதைத்தது.
அதையும் மீறி அப்படத்தில் இருந்த தனித்துவமான திரைமொழி பார்வையாளர்களைப் பெரிதும் வசீகரித்தது. அதனால், அக்கதைகளில் இருந்த லாஜிக் மீறல்கள் துருத்தலாகத் தெரியவில்லை.
தற்போது தனுஷை நாயகனாகக் கொண்டு ‘கேப்டன் மில்லர்’ தந்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் படையில் நாயகன் சேர்வதாகவும், பின்னர் அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழுவதாகவும் கதை இருப்பதாகச் சொன்னது படத்தின் ட்ரெய்லர்.
அதற்கு நடுவே, சாதீயத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் நசுக்கப்பட்டதையும் சொன்னது.
கூடவே, சமீபகாலத்தில் வெற்றிகளைக் குவித்த விக்ரம், ஜெயிலர், லியோ படங்களில் இருந்ததைப் போன்று துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கமும் நிறையவே உண்டு என்று உணர்த்தியிருந்தது.
‘கேப்டன் மில்லர்’ படத்தை முழுதாகப் பார்த்தபிறகும் அதேவிதமான எண்ணங்கள்தான் நம்மில் நிறைந்திருக்கிறதா? இப்படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தருகிறது?
அனலீசன் ‘மில்லர்’ ஆன கதை!
அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜாதிபதியின் (ஜெயபிரகாஷ்) கட்டுப்பாட்டில் உள்ள சமஸ்தானத்தில் ஒரு சிவன் கோயில் அருகே அமைந்திருக்கிறது அனலீசன் (தனுஷ்) குடிசை. அங்கு, அவரைப் போன்று பலர் வாழ்ந்து வருகின்றனர்.
அனைவரையும் ஒடுக்கி வைத்திருக்கிறது ராஜாதிபதியின் அதிகார பலம்.
நமது முன்னோடி கோரனார் தான் அந்த கோயிலைக் கட்ட உதவினார் என்று தம்மோடு வாழ்பவர்களிடம் ஓயாமல் சொல்லி வருகிறார் அனலீசனின் தாயார் (விஜி சந்திரசேகர்).
மூத்த மகன் செங்கோலன் (சிவராஜ்குமார்) புரட்சி, விடுதலைப் போராட்டம் என்றிருக்க, ஊர் சுற்றியாக இருக்கிறார் அனலீசன். அதில் அவருக்கு வருத்தம் உண்டு. ஆனாலும், தனது மகன்களின் விருப்பங்களுக்கு அவர் தடையாக இல்லை.
ஒருநாள் அனலீசன் தாய், ராஜாதிபதியின் ஆட்கள் தாக்கியதில் மரணமடைகிறார். இறப்பதற்கு முன் செங்கோலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை.
அதன்பிறகு தான்தோன்றியாக வாழ்ந்து வருகிறார் அனலீசன். ஒருநாள், ராஜாதிபதி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான வேல்மதியைக் காண்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார்.
ஆனால், வேல்மதியோ புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு இளைஞன் மீது காதல் கொள்கிறார். அவருடன் வாழ்வதற்காக, அரண்மனையின் ஆதிக்கப் பிடியில் இருந்து தப்பிக்கிறார்.
வேல்மதியிடம் தனது காதலைத் தெரிவிக்கப்போன அனலீசன், அந்த காதல் ஜோடிக்கு உதவும் நிலைக்கு ஆளாகிறார். தனது காதலை மறக்க முடியாமல் தவிக்கும் அவர், ஆங்கிலேய ராணுவத்தில் சேர்கிறார்.
அங்காவது தனக்கு மரியாதையான வாழ்க்கை அமையும் என்று நம்புகிறார். ஆனால், அது நிகழவில்லை.
ஒருமுறை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ராணுவத்தினரில் ஒருவராக அனலீசனும் பங்கேற்கிறார்.
கையில் ஆயுதம் ஏந்தாத அம்மக்களைச் சுட்டது அவர் மனதில் குற்றவுணர்ச்சியை விதைக்கிறது.
ராணுவத்தில் அனலீசனுக்கு ஆங்கிலேயர் சூட்டிய பெயரே ‘மில்லர்’. ஒரு கேப்டன் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை.
ஆனால், அந்த தாக்குதலுக்குப் பிறகு ‘நம்மையே நாம் சுட்டுத்தள்ள வேண்டுமா’ என்ற ஆவேசத்தில் படைத்தலைவரைச் சுட்டுவிட்டு ராணுவத்தில் இருந்து தப்பிக்கிறார் அனலீசன்.
ஊர் திரும்பினால், அந்த தாக்குதலில் செங்கோலனும் வேல்மதியின் கணவரும் இறந்து போனதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
அதனைக் கேள்வியுற்றதும் அனலீசன் நொறுங்கிப் போகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திரியும் அவரை ஒரு கொள்ளையர் படை தம்மில் ஒருவர் ஆக்குகிறது.
இந்தச் சூழலில், மீண்டும் தனது கிராமத்து மக்களைப் பாதிக்கும் செயலொன்றைச் செய்கிறார். அதனால், ராஜாதிபதியின் ஆட்களும் ஆங்கிலேயரும் அம்மக்களைக் கொன்று குவிக்கத் தயாராகின்றனர்.
அதனை அனலீசன் தடுத்து நிறுத்தினாரா, இல்லையா என்று சொல்கிறது ‘கேப்டன் மில்லர்’.
விழலுக்கு இறைத்த நீர்!
பெரும் உழைப்பைக் கொட்டி, அவையனைத்தும் எந்தப் பயனையும் அறுவடை செய்யாமல் போவதென்பது எப்பேர்ப்பட்ட துன்பம். ‘கேப்டன் மில்லர்’ முழுமையாகப் பார்த்தபிறகு அதுவே நம் மனதில் எழுகிறது.
முகத் தோற்றம் மட்டுமல்லாமல் தனது உடல்வாகு, உடல்மொழி என்று அனைத்திலும் பல வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார் தனுஷ். அவருக்கு ஈடாக இளங்கோ குமரவேல் படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.
பிரியங்கா அருள்மோகன், அதிதி பாலனை விட நிவேதிதா சதீஷின் முகம் நம்மில் எளிதாகப் பதிகிறது.
ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன், விஜி சந்திரசேகர், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, அஸ்வின் குமார், அருணோதயன் என்று பலர் இப்படத்தில் உண்டு.
தெலுங்கு மார்க்கெட்டுக்காக சந்தீப் கிஷன், கன்னட ரசிகர்களுக்காக சிவராஜ்குமார் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்த்து ‘திருவின் குரல்’ படத்தில் கலக்கிய அஷ்ரஃப் உட்படக் குறிப்பிடத்தக்க சில நடிகர்களும் சமூகவலைதளப் பிரபலங்களும் இதில் தலைகாட்டியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனியின் உழைப்பு இப்படத்தில் பிரமித்தக்கதாக உள்ளது. போலவே, இதில் குவிந்து கிடக்கும் ஷாட்களை எண்ணினால் நமக்கு மலைப்பாக இருக்கும் அளவுக்குப் படத்தைக் கவனமாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்.
சுமார் நூறாண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்வைச் சொல்லும் வகையில் கலை இயக்குனர் தா.ராமலிங்கம் குழுவினரின் உழைப்பு படத்தில் கொட்டிக் கிடக்கிறது.
பழங்காலக் கோயில், அதன் முன்னிருக்கும் குடிசைகள், ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள் என்று பலவற்றைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது இவர்களது உழைப்பு. இது போதாது என்று விதவிதமான துப்பாக்கிகள் வேறு படத்திலுண்டு.
படத்தில் விஎஃப்எக்ஸின் பங்கு மிக அதிகம். குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் அக்குழுவினரின் உழைப்பு அபாரம்.
இப்படித் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் பாராட்டிக்கொண்டே செல்லலாம்.
ஆனால், அப்படிச் சிலாகிக்க முடியாதவாறு திரைக்கதையும் அது உருவாக்கும் காட்சி அனுபவமும் அமைந்துள்ளன.
இந்தக் கதையைப் பார்க்கும் ஒருவரால் தனுஷின் ‘மில்லர்’ பாத்திரத்தோடு தன்னைப் பொருத்திக் கொள்ளவே முடியாது. காரணம், திரைக்கதையில் எந்த இடத்திலும் யதார்த்தத்திற்கு இடமே வழங்கப்படவில்லை.
க்வெண்டின் டொரண்டினோ, அலெசாண்ட்ரோ கோன்சாலஸ் இனாரியாட்டு, கை ரிட்சி ஸ்டைலில் பழமையும் புதுமையும் கலந்த ஆக்ஷன் படமொன்றை தர இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நினைத்திருக்கலாம்.
அதற்கென்று, தனது கற்பனையில் வேறோரு உலகத்தைப் படைத்திருக்கலாம்.
ஆனால், அக்கதை சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடையது என்று சொன்னதுதான் நம்மைத் திரையில் இருந்து வெகுவாக விலக்கி வைத்திருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தைச் சொல்லும் திரைப்படங்களில் இருந்த யதார்த்தம் இதில் இல்லை என்பது மட்டுமே அதற்குக் காரணம் கிடையாது.
கோரனாரை வழிபடும் மக்கள் என்ற களம் புதியது. அதனைப் பூதாகரப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலேயர் படை, கொள்ளையர்கள், துப்பாக்கிக் குவியல் என்று எங்கெங்கோ திரைக்கதை அலைபாய்கிறது.
‘வீடியோ கேம்’களுக்கு சவால்விடும் வகையில் அமைந்த சண்டைக்காட்சிகள், ‘யதார்த்தம் என்ன விலை’ என்று கேட்கும் ரகத்தில் உள்ளது.
‘அதனால் என்ன வந்துவிடப் போகிறது? நாம் அனைவரும் தமிழில் ‘கௌபாய்’ படங்கள் பார்த்தவர்கள் தானே’ என்று ’எதிர்க்கேள்வி’ எழுப்பலாம்.
அந்த படங்கள் உங்களது ‘எவர்க்ரீன் பேவரைட்’ ஆக உள்ளதா? அவற்றைத் தமிழ் திரையுலகின் முக்கியப் படைப்புகளாகக் கருதுகிறீர்களா? ‘ஆம்’ என்று சொல்பவர்கள் தாராளமாக ‘கேப்டன் மில்லர்’ படத்தை ரசிக்கலாம்.
புதுவிதமான வகைமையொன்றில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் காட்டும் ‘கமர்ஷியல் படம்’ என்று கொண்டாடலாம். ஆனால், மற்றவர்களுக்கு..!?
– உதய் பாடகலிங்கம்