கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரிசையில் இந்தித் திரையுலகம் சென்ற நடிகர்களின் பட்டியலில் சமீபமாக இடம்பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
மும்பைகர், ஜவான் படங்களில் ஒரு பாத்திரமாக வந்துபோனவர், இந்தி திரையுலகில் ஒரு நாயகனாகத் தடம் பதித்துள்ள படமே ‘மெரி கிறிஸ்துமஸ்’.
கேத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், ராஜேஷ், சண்முகராஜன், கவின் ஜெயபாபு, அஸ்வினி கல்சேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
அவர் தந்த ‘அந்தா துன்’, ‘ஜானி கடர்’, ‘பத்லாபூர்’ படங்கள் ரசிகர்களை ‘த்ரில்’ உணர்வின் உச்சத்தை எட்டச் செய்தன. அவை கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றவை என்பது கூடுதல் தகவல்.
அந்த வரிசையில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
இந்தியைப் போலவே தமிழிலும் இது தனியாகத் தயாராகியுள்ளது. இந்தி பதிப்பில் ராஜேஷ், ராதிகா, சண்முகராஜன், கவின் ஜெயபாபு பாத்திரங்களுக்குப் பதிலாக டினு ஆனந்த், பிரதிமா கஸ்மி, வினய் பதக், சஞ்சய் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் எப்படியிருக்கிறது?
கொலை நிகழ்ந்ததா, இல்லையா?!
மும்பையில் உள்ள பூர்வீக வீட்டுக்கு நீண்டகாலம் கழித்துச் செல்கிறார் ஆல்பர்ட் ஆரோக்கியசாமி (விஜய் சேதுபதி). அவரது தாய் மறைந்து சில காலமாகிறது. அதில் கூட ஆல்பர்ட் கலந்துகொள்ளவில்லை. இடைப்பட்ட காலத்தில், பக்கத்துவீட்டுக்காரர் (ராஜேஷ்) அவரது வீட்டைப் பராமரித்து வந்திருக்கிறார்.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் வீடு திரும்பும் ஆல்பர்ட், அன்றிரவு உணவுண்ண ஒரு ரெஸ்டாரண்ட் செல்கிறார். தற்செயலாக, அங்கு மரியாவைச் (கேத்ரினா கைஃப்) சந்திக்கிறார். அவர் தனது வாய் பேச இயலாத மகள் உடன் வந்துள்ளார்.
அடுத்தடுத்து சாலை, திரையரங்கு ஆகிய இடங்களில் அவர்களைச் சந்திக்கிறார் ஆல்பர்ட். திரையரங்கில் தூங்கிவிடும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மரியா வெளியே வருகையில், மிண்டும் அவரைப் பார்க்கிறார். அதன் தொடர்ச்சியாக, அவர்களுடைய வீடு வரை செல்கிறார் ஆல்பர்ட்.
இசை, மது, நடனம் என்றிருக்கின்றனர் இருவரும். அப்போது, தனது கணவர் ஜெரோம் ஒரு சந்தேகப் பேர்வழி என்றும், தங்களைத் துன்புறுத்துவதும் வேறு பெண்களுடன் சரசமாடுவதுமே அவரது வேலை என்று சொல்கிறார் மரியா. அப்பெண்ணின் நிலையை நினைத்து வருந்துகிறார் ஆல்பர்ட்.
பின்னர், குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு இருவரும் வெளியே செல்கின்றனர். ஆல்பர்ட் உடன் சென்று கல்லறைத் தோட்டம், அவரது வீட்டைக் காண்கிறார் மரியா. மிகச்சில மணி நேரத்தில் அவர் மீது காதல் கொள்கிறார்.
அதிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினால், சோபாவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்ட நிலையில் பிணமாகக் கிடக்கிறார் ஜெரோம். அதனைக் கண்டதும், அதிர்ச்சியில் இருவரும் உறைகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மரியாவை போலீசுக்கு போன் செய்யச் சொல்கிறார் ஆல்பர்ட். சட்டென்று ‘வேண்டாம், அவர்கள் வருவதற்கு முன்னர் நான் கிளம்பிவிடுகிறேன்’ என்கிறார்.
சந்தேகத்துடன் பார்க்கும் மரியாவிடம், ‘கொலைக்குற்றத்திற்காகச் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு இன்று காலைதான் விடுதலை ஆனேன்’ என்று கூறுகிறார் ஆல்பர்ட். அதனைக் கேட்டதும் கூடுதலாக அதிர்ச்சியாகும் மரியா, ‘இங்கிருந்து போய்விடு’ என்று கத்துகிறார்.
குற்றவுணர்ச்சியோடு வருந்தும் ஆல்பர்ட் சாலையில் வந்து நிற்கிறார். விரக்தி அவரை ஆட்டுவிக்கிற்து. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு மரியா சாலையில் நடப்பதைப் பார்க்கிறார்.
மரியாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. குழந்தையும் வெகுசாதாரணமாக இருப்பதைக் கண்டதும், அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறார் ஆல்பர்ட்.
தேவாலயத்தில் மயங்கிவிழும் மரியாவை ரோனி (கவின் ஜெயபாபு) என்பவர் தாங்கிப் பிடிக்கிறார். அதனைக் காணும் ஆல்பர்ட், மரியா நடிக்கிறார் என்பதை அறிகிறார். ரோனி உடன் இணைந்து, மீண்டும் மரியாவின் வீட்டுக்குப் போகிறார். அங்கு, சோபாவில் ஜெரோம் பிணம் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். குழப்பம் அவரது தலையைக் குடைகிறது.
அதன்பிறகு ஆல்பர்ட் என்ன செய்தார்? ஜெரோம் உண்மையிலேயே கொலை ஆனாரா என்ற கேள்விகளுக்கு நின்று நிதானமாகப் பயணிக்கும் காட்சிகள் துணையோடு பதில் சொல்கிறது ‘மெரி கிறிஸ்துமஸ்’.
கொலை நிகழ்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கு ஆல்பர்ட்டுக்குப் பதில் கிடைப்பதுடன் படம் முடிவடையும் என்று எண்ணுவோம். ஆனால், அதன்பிறகும் காவல்நிலையம், சந்தேக விசாரணை, சம்பந்தப்பட்ட நபர்களின் பயம் ஆகியவற்றைக் கொண்டு ‘த்ரில்’லின் உச்சத்திற்கு நம்மைக் கொண்டுபோகிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
சின்னச் சின்ன ‘டீடெய்ல்’கள்!
ஆல்பர்ட் ஆக விஜய் சேதுபதி, மரியா ஆக கேத்ரினா கைஃப், பக்கத்துவீட்டுக்காரராக ராஜேஷ், ரோஸி ஆக ராதிகா ஆப்தே, கான்ஸ்டபிள் லட்சுமியாக ராதிகா சரத்குமார், இன்ஸ்பெக்டராக சண்முகராஜன், ரோனியாக கவின் ஜெயபாபு, அவரது மனைவியாக அஸ்வினி கல்சேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து, திரையில் முகம் காட்டும் நடிப்புக் கலைஞர்களைத் தேட வேண்டியிருக்கும்.
விஜய் சேதுபதிக்கு இது பெயர் சொல்லும் ஒரு இந்திப் படமாக இருக்கும். அந்த அளவுக்கு அவரது பாத்திரமும் நடிப்பும் சிறப்பாகத் திரையில் வெளிப்பட்டுள்ளது.
கேத்ரினா கைஃப் குறை சொல்ல முடியாத அளவுக்கு, மரியா என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவரது பாத்திரம் தொடர்பான குறைகளை ராதிகா ஆப்தே, அஸ்வினி, ராதிகா சரத்குமாரின் இருப்பு சரி செய்துவிடுகிறது.
சண்முகராஜன் உடன் ராதிகா பேசும் காட்சியில் தியேட்டரில் வெடிச்சிரிப்பு அலையாகப் பரவுகிறது. அவர்களது அனுபவ மூப்பு அந்த இடத்தில் உதவுகிறது. காயத்ரி இதில் ஒரு மெல்லிசை பாடகியாக ‘கவுரவ வேடத்தில்’ தலை காட்டியிருக்கிறார்.
படம் முழுக்கச் சின்ன சின்ன ‘டீடெய்ல்’கள் குவிந்து கிடக்கின்றன. தொடக்கத்தில் மாத்திரையையும் மிளகாயையும் மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கும் காட்சி ஒரு உதாரணம். அவ்விரண்டு ஷாட்களுமே, வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும் கொலைகளுக்கு முன்பான தருணங்களாகத் திரையில் வெளிப்படும். அதனை மீண்டும் திரையில் காட்டாமல், அதற்கான விளக்கத்தை நாமாக உணர வைப்பது திரைக்கதையின் பலம்.
ப்ரெடரிக் டார்ட் என்பவர் எழுதிய ‘லீ மாண்டே ஜார்ஜ்’ எனும் பிரெஞ்ச் நாவலொன்றைத் தழுவி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீராம் ராகவன்.
திரைக்கதை மற்றும் வசனத்தில் அவருடன் இணைந்து அர்ஜித் பிஸ்வாஸ், அனுக்ருதி பாண்டே, பூஜா லதா ஸ்ருதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். உதட்டசைவோடு இணைந்து ஒரிஜினல் தன்மை மிக்க வசனமும் ஒன்றுசேர்ந்து, ‘இது இந்தி டப்பிங் படமல்ல’ என்பனை உணர்த்துகிறது. பிரதீப்குமார், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலநடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் தமிழில் வசனங்களை ஆக்கியுள்ளனர்.
மிகச்சில இடங்களில் ஆபாசமான, கொச்சையான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. அவற்றைத் தாண்டி, இதில் ‘யுஏ’ சான்றிதழுக்குப் பெரிதாக வேலை இல்லை.
மது நீலகண்டனின் ஒளிப்பதிவு, ஓரிரு முழுக்க விஜய் சேதுபதியோடும் கேத்ரினா உடனும் நாமே பயணித்த அனுபவத்தை உருவாக்குகிறது.
மொபைல், இண்டர்நெட், சிசிடிவி வளர்ச்சி என்ன செய்கிறது என்ற கேள்வி எழாமல் இருக்கும் வகையில், தொண்ணூறுகளில் கதை நடப்பதாகக் களத்தை வடித்திருக்கிறார் இயக்குனர். தயாரிப்பு வடிவமைப்பாளர் மயூர் சர்மா, ஆடை வடிவமைப்பாளர்கள் அனைடா ஷெராஃப், சபீனா ஹால்தர் அந்த உணர்வை ஊட்ட முயற்சித்துள்ளனர். அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.
ஒரு கிளாசிக் படத்தைப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது பூஜா லதா ஸ்ருதியின் படத்தொகுப்பு.
ப்ரீதம் இசையில் பாடல்களில் ‘பழைய’ வாசனை. அது, திரைக்கதைக்கு ஏற்ற மனநிலையை உருவாக்குகிறது. பின்னணி இசையில் கொண்டாட்டத்தையும் த்ரில்லையும் ஊட்டுவதில் முக்கியப் பங்காற்றுகிறார் இசையமைப்பாளர் டேனியல் பி ஜார்ஜ். இனி, இது போன்ற வாய்ப்புகள் அவரது அலுவலகக் கதவைத் தட்டும்.
கேத்ரினா கைஃப் வாழும் அபார்ட்மெண்ட் இதில் முக்கியமானதொரு பாத்திரமாக உள்ளது. நிச்சயமாக, அது தொடர்பாகப் பல லாஜிக் கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும். ஆனால், படம் பார்க்கையில் அது நம் நினைவுக்கு வராததே ‘மெரி கிறிஸ்துமஸ்’ஸின் வெற்றி.
’த்ரில்’ கொண்டாட்டம்!
த்ரில்லர் படங்களில் பயமும் பதைபதைப்பும் தான் காட்சியனுபவத்தின் அடிப்படையாக விளங்கும். அதையும் மீறி, அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற கவலை இப்படத்தின் பின்பாதியில் மேலெழுகிறது. முன்பாதிக் காட்சிகள் வெறுமையை உணர்ந்த இரு நெஞ்சங்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஆழ்வதாகத் தோற்றமளிக்கின்றன.
‘ஸ்பாய்லர்’ என்றபோதும் இதனைச் சொல்லியாக வேண்டியுள்ளது. வழக்கமாக, இது போன்ற எண்ணங்கள் படம் முடிவடைகையில் தவிடுபொடியாகும். இதில் அந்த மாதிரி எதுவும் நிகழ்வதில்லை. அதுவே, பெண்களும் முதியோரும் நடுத்தர வயதினரும் இப்படத்தைத் தாராளமாக ரசிக்கலாம் என்ற இடம் நோக்கி இழுத்துச் செல்கிறது. குழந்தைகள் உடன் இப்படத்தைப் பார்க்கச் சிற்சில வசனங்களே தடையாக உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நல்லதொரு ‘த்ரில்’ கொண்டாட்டத்தைத் தருகிறது ‘மெரி கிறிஸ்துமஸ்’. கூடவே, இது போன்று இன்னும் பல படங்கள் வந்தாலும் வரவேற்கத் தயாராகிற மனப்பாங்கை உண்டுபண்ணுகிறது. ’மெரி கிறிஸ்துமஸ்’ தந்த ஸ்ரீராம் ராகவன் & குழுவினருக்கு ‘பொங்கல்’ நல்வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்