குறிப்பிட்ட களங்களை, குறிப்பிட்ட வகைமையில் மட்டுமே பயணிக்கும் திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் தமிழில் குறைவு. சமீபகாலமாக அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ் திரையுலகில் நிகழ்ந்து வருகின்றன.
‘அவியல், பொறியல், கூட்டு, பச்சடி, பாயாசம்னு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டவங்கப்பா நம்மாளுங்க’ என்பவர்களின் பேச்சுகளை மறுதலித்து பீட்சா, பர்கர் என்று ஒரு சில சுவைகளை மையப்படுத்திப் படங்களைத் தந்து வருகின்றனர் சிலர்.
அந்த வகையில், ‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் பார்த்தபோது ‘இது வெளிநாட்டு சிறைச்சாலையில் தவறுதலாக மாட்டிக்கொள்ளும் ஒரு தமிழரின் கதை’ என்று தோன்றியது.
கூடவே, படத்தில் நிறையவே ஆக்ஷன் காட்சிகள் உண்டு என்பதற்கான உத்தரவாதத்தையும் தந்தது.
படம் பார்த்து முடிந்தபிறகு அந்த எண்ணங்கள் உறுதிப்படுகின்றனவா?
அருண் விஜய், நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்; ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
சிறைக்கைதிகள் ‘அட்ராசிட்டி’!
உடல்நலமில்லாத சனாவுக்கு உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்தாக வேண்டிய சூழல்.
லண்டனில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் அச்சிகிச்சையைச் சிக்கலின்றி மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
ஆதலால், தன் கைவசமுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு லண்டனில் மகளுக்குச் சிகிச்சை மேற்கொள்ளத் தயாராகிறார் குணசேகரன்.
வங்கியில் இருந்து பணத்தை லண்டனுக்குப் பரிமாற்றம் செய்யச் சில காலம் ஆகும் என்ற நிலையில், நண்பரின் வற்புறுத்தலால் ‘ஹவாலா பரிமாற்றம்’ செய்ய ஒப்புக்கொள்கிறார்.
லண்டன் சென்று சேர்ந்ததுமே, சனா மயக்கமடைகிறார். அதனால், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் குணசேகரன். மருத்துவர்கள் இரண்டு நாட்களில் அறுவைச்சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்கின்றனர்.
அந்த நேரத்தில், அவரது நண்பர் போன் செய்து ‘ஓமர் கத்ரி லண்டனில் இருப்பதாகத் தகவல்’ என்று சொல்கிறார். அதனைக் கேட்டதும், ‘அவனுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கிறார்.
அந்த மருத்துவமனையில் நான்சி (நிமிஷா சஜயன்) என்ற செவிலிப்பெண் சனாவுக்கும் குணசேகரனுக்கும் பழக்கமாகிறார். அவரது சகோதரர் தாமஸும் (விராஜ்) கூட அங்குதான் பணியாற்றுகிறார்.
ஹவாலா பரிமாற்றத்திற்காகக் குணசேகரன் கையில் இருக்கும் பத்துரூபாய் தாளை அபகரிக்கத் திட்டமிடுகிறார் தாமஸ். அடியாட்கள் உதவியோடு அதனைச் செய்ய முயற்சிக்கையில் தகராறு ஏற்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வரும் போலீசார், குணசேகரனைத் தடுக்கின்றனர். அப்போது அவர்களையும் அவர் தாக்கிவிடுகிறார். அதனால், அவர் கைது செய்யப்பட்டு உடனடியாக ஹிண்ட்ஸ்பெர்க் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால், நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லபப்டும் வரை இரண்டு நாட்கள் அங்கு இருந்தாக வேண்டிய நிலைமை.
சிறைச்சாலை அதிகாரி சாண்ட்ரா தாமஸிடம் (எமி ஜாக்சன்) குணசேகரன் தனது மகளின் நிலை குறித்து சொல்கிறார். ஆனாலும், அவர் அதனைக் காது கொடுத்து கேட்பதாக இல்லை.
இந்தச் சூழலில், அதற்கடுத்த நாள் இரவில் ஒரு பயங்கரவாதக் கும்பல் அந்த சிறைச்சாலையின் செயல்பாடுகளை ‘ஹேக்’ செய்கிறது. சிறைக்கைதிகளைத் தப்பிச் செல்லுமாறு கூறுகிறது. மகளைக் காப்பாற்ற வேண்டி, அங்கிருந்து தப்பிக்க குணசேகரனும் தயாராகிறார்.
ஆனால், அந்த பயங்கரவாதக் கும்பலின் தலைவன் குரலைக் கேட்டபிறகு தனது முடிவை மாற்றிக் கொள்கிறார். அந்தக் குரல் ஓமர் கத்ரி உடையது.
அதன்பிறகு, சிறைச்சாலையைக் கைப்பற்றும் அக்கும்பலின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் வேலைகளில் இறங்குகிறார் குணசேகரன்.
யார் அந்த ஓமர்? அவர் ஏன் லண்டனில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கலகத்தை ஏற்படுத்த வேண்டும்? அவருக்கும் குணசேகரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது உட்படப் பல கேள்விகளுக்கு நாம் பார்த்துப் பழகிய காட்சிகள், திருப்பங்களைக் கொண்டு திரைக்கதையை நெய்திருக்கிறது கதாசிரியர் மஹாதேவ் – இயக்குனர் விஜய் காம்போ.
சிறைக்கைதிகள் அட்ராசிட்டிகளில் ஈடுபடும் கதைகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்.
அது போன்றதொரு பின்னணியில் பயங்கரவாதக் கும்பலொன்றில் சதித்திட்டத்தைத் தகர்க்கும் ஆக்ஷன் ஹீரோ கதையொன்றை ‘மிஷன்: சேஃப்டர் 1’இல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தொடக்கத்தில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் ‘அச்சம் என்பது இல்லையே’. அந்த வார்த்தைக்கு ஏற்ப, இதில் நாயக பாத்திரத்தை அவர் வார்த்திருக்கிறார்.
விறுவிறுப்பூட்டும் காட்சியாக்கம்!
‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தின் மாபெரும் பலம் என்று சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவைச் சொல்லலாம். டிஐ, விஎஃப்எக்ஸ் என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு மிகநேர்த்தியான உழைப்பை அவர் இதில் கொட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி திரையில் கதை சீராகப் பரவ வழிவகை செய்திருக்கிறார். இடைவேளை திருப்பம் தான் ஹைலைட் என்பதால், அதற்கேற்ப முன்பாதி முழுவதும் மெதுவாக நகர்கிறது; பின்பாதி ‘ஜெட்’ வேகத்தில் பாய்கிறது.
பார்வையாளர்கள் திரையில் விறுவிறுப்பை உணர இப்படித்தான் காட்சியாக்கம் அமைய வேண்டுமென்ற திட்டமிடல்தான் இப்படத்தைக் காப்பாற்றுகிறது.
கலை இயக்குனர் சரவணன் வசந்தின் பங்களிப்பு, திரைக்கதை காட்டும் களங்களை அந்நியமாக உணர்வதைத் தடுக்கிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பின்னணி இசை மூலமாக இப்படத்திற்கு உயிர் தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
முழுக்க மேற்கத்திய படங்களை நினைவூட்டும் சாயலைக் கொண்டிருந்தாலும், அதுவே காட்சிகளின் பிரமாண்டத்தை மேலும் ஒரு படி உயர்த்தத் துணை நிற்கிறது.
இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார் மஹாதேவ். அதனைச் செய்வதற்கு முன்பாக, இதே வகைமையில் உள்ள பல ஹாலிவுட் மற்றும் இதர வெளிநாட்டுப் படங்களை ரசித்துப் பார்த்திருப்பார் போலும். அவற்றின் சாயல் மிக அதிகமாகத் தெரிகிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, இதில் தோன்றியுள்ள அனைவருமே சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
நாயகனாக வரும் அருண்விஜய், மகள் குறித்த கவலையில் தோய்ந்த ஒரு நபரைக் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.
அதேநேரத்தில், ஒருகாலத்தில் அவர் கட்டுக்கோப்பான உடல்வாகுடன் இருந்திருப்பார் எனும் எண்ணத்திற்கும் நியாயம் சேர்க்கும்விதமாகத் தோன்றியிருக்கிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வே அவரைத் திரையில் பார்த்தவுடன் பாராட்ட வைக்கிறது.
எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் என்று இரு நாயகிகள் இதில் உண்டு. ஆனால், இருவருமே அருண் விஜய்க்கு ஜோடி இல்லை. அவர்கள் இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வந்து போயிருக்கின்றனர்.
நிமிஷாவுக்குத் திரைக்கதையில் ஸ்கோப் குறைவு என்பது ஒரு பக்கம் வருத்தமளிக்கிறது என்றால், எமியை பார்த்ததும் ‘டெர்மினேட்டர்’ பட வில்லன்கள் நினைவுக்கு வந்து தொலைப்பது இன்னொரு விதமான இம்சை.
இந்த எமிதானா மதராசப்பட்டிணத்தில் நடித்தார் என்ற சோகம் நெஞ்சைக் கவ்வுகிறது.
குழந்தை கயல் வரும் காட்சிகள், ‘இன்னொரு ஆனந்தயாழ் பாடல்’ போலவே இருக்கின்றன.
கொஞ்சமாக ‘தெய்வத்திருமகள்’ சாராவும் நம் கண் முன்னே வந்து போகிறார்.
வில்லன் பாரத் போபண்ணா, அவருடன் வருபவர்கள் மட்டுமல்லாமல் நிமிஷாவின் தம்பியாக வரும் விராஜும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
‘ஆகஸ்ட் 15 1947’ பட வில்லன் ஜேசன் ஷாவுக்கும் இதில் பங்குண்டு. இவர்கள் தாண்டி ‘பரம்’ என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ள அபி ஹாசன் நம் மனம் கவர்கிறார்.
படத்தைப் பார்க்கலாமா?
‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தின் மிகப்பெரிய மைனஸ், நாம் ஏற்கனவே பார்த்த பல படங்களின் காட்சிகளை இது நினைவூட்டுவது.
முக்கியமாக, விஜயகாந்த் நடித்த சில படங்களின் தாக்கம் இதிலுண்டு. விஜயகாந்துக்குப் பதிலாக அருண் விஜய் நடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு, அதே பாணியில் இப்படம் உள்ளது.
இஸ்லாமியர்கள், குஜராத்தி சேட்கள் குறித்த மோசமான அபிப்ராயத்தை உருவாக்கும் இடங்களும் இத்திரைக்கதையில் இருக்கின்றன. இயக்குனர் அதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
தியேட்டருக்குள் வந்தபிறகு, இப்படம் நிச்சயம் போரடிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தாது. அதேநேரத்தில், இது ஒரு க்ளிஷேக்களின் தொகுப்பு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
ஆனால், அதனை மறக்கடிக்கும் அளவுக்கு நேர்த்தியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
அதனை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ‘மிஷன்: சேஃப்டர் 1’ படத்தைப் பார்க்கலாம். இதிலிருக்கும் ஆக்ஷனை கண்டு ரசித்து ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம்!
– உதய் பாடகலிங்கம்