அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தயாராகும் 56 வகை உணவுகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ஆம் தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது.

முழுவதுமாக கட்டி முடிந்த, கோயிலின் தரைதளத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

அப்போது கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது 11 நாள் விரதத்தை விவேகானந்தர் பிறந்த நாளான நேற்று ஆரம்பித்தார்.

ஆன்மிக குருக்கள் ஆலோசனையின் பேரில் இந்த விரதத்தை அவர் மேற்கொள்கிறார்.

விரத நாட்களில் மோடி சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து யோகா மற்றும் தியானம் செய்வார்.

குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ‘நான் மேற்கொள்ளும் உள்ளார்ந்த பயணத்தை உணர மட்டுமே முடியும் – வெளிப்படுத்த முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

கோயில் கட்டுமான பணிகள் குறித்து நாள் தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராமர் கோயிலில் மொத்தம் 44 கதவுகள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் 14 கதவுகள் தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளால் வேயப்படும் கோயில் வளாகத்தில் 5 ஆயிரம் தெய்வச்சிலைகள் நிறுவ திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு பல்வேறு வகை பிரசாதமும் அன்னதானமும் தினம் தோறும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் 1 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

மகராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் என்பவர் 7 ஆயிரம் கிலோ எடை கொண்ட அல்வாவை பிரசாதமாக விநியோகம் செய்ய உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணஜென்மபூமி கோயில் அறக்கட்டளை சார்பில் 200 கிலோ லட்டுகளை பிரசாதமாக வழங்க உள்ளனர்.

ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பிலும் சிறப்பு பிரசாதம் தயாராகி வருகிறது.

பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அயோத்தி வந்து பிரசாதம் விநியோகம் செய்ய ராமர் கோயில் அறக்கட்டளையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரை ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 56 வகை உணவுகள் பரிமாறப்படுகிறது. இந்த அன்னதானம் ராமர் கோயில் அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள ராம்கோட் பகுதியில் நடைபெற உள்ளது.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment