அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!

குழந்தைகள் ரசிக்கிற ஒரு நட்சத்திர நடிகராக, நடிகையாக ஜொலிப்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல, அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைத் தரச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் முயற்சிப்பதும் வழக்கமான ஒன்றல்ல.

இரண்டுமே அரிதாகிவிட்ட சூழலில், தன்னை ரசிக்கிற குழந்தைகள் பெற்றோரை இழுத்துக்கொண்டு தியேட்டருக்கு வரும் விதமாக ‘ஒரு வேற்றுக்கிரகவாசியின் கதை’யை ‘அயலான்’ படத்திற்காகத் தேர்ந்தெடுத்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால், அந்த படம் முழு வடிவம் பெற்று திரையரங்குக்கு வரக் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்த இடைவெளியில் அதே ரசிகக் குழந்தைகள் வளர்ந்து ‘டீன்’ பருவத்தை எட்டியிருப்பார்கள்.

புதிதாகச் சில ரசிகர்கள் வரிசையில் இணைந்திருப்பார்கள். இது போக, பொதுவான ரசிகர்கள் என்று ஒரு பெருங்கூட்டம் உண்டு. இவர்கள் அனைவரையும் ஒருசேரத் திருப்திப்படுத்துகிறதா ‘அயலான்’?!

கதையில் எளிமை!

தற்செயலாகப் பூமிக்கு வந்த ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசிக் கூட்டமொன்று, இங்கு ஏதேனும் ஒன்றைத் தொலைத்துவிடும் அல்லது இந்த கிரகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும்.

அப்போது ஏற்படும் களேபரத்தில் பூமியில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படும்.

அதிலிருந்து அந்த வேற்றுக்கிரகவாசியோ அல்லது அக்கூட்டமோ எப்படித் தப்பிக்கின்றன அல்லது மனிதர்களோடு முரண்படுகின்றன என்பதுதான் முக்கால்வாசி ‘ஏலியன்’ படங்களின் மையமாக இருக்கும்.

‘அயலான்’ படமும் அப்படியொரு கதையைக் கொண்டுள்ளது.

உண்மையிலேயே, இக்கதை மிக எளிமையானது. வில்லனில் இருந்துதான் இக்கதை தொடங்குகிறது.

பூமியையே அழிவுக்குள்ளாக்குகிற வகையில், எரிபொருள் தோண்டும் திட்டமொன்றை அரசு அனுமதியுடன் தொடங்குகிறார் வில்லன். அதற்காக, வேறு ஒரு கிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த கல் ஒன்றைப் பயன்படுத்துகிறார்.

ஆனால், அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணித்து, அதனைத் தடுக்க வேண்டுமென்று பல்லாயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகவாசிகள் விரும்புகின்றனர்.

அதற்காகத் தங்களில் ஒருவரை பூமிக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்தக் கல், அவர்களது கிரகத்தைச் சார்ந்தது.

வில்லனின் அலுவலத்தில் இருந்து தனது கிரகத்திற்குச் சொந்தமான கல்லை எடுத்துச் செல்ல முற்படுகையில், அந்த வேற்றுக்கிரகவாசி மாட்டிக்கொள்கிறார்.

அவர்களிடம் இருந்து தப்பிக்கும்போது, அவர் வந்த விண்கலம் வில்லன் கூட்டத்தினரின் பிடியில் சிக்கிவிடுகிறது.

அந்த நேரத்தில், அந்த வேற்றுக்கிரகவாசி நாயகனைச் சந்திக்கிறார். அவரது நண்பர்களைப் பார்க்கிறார். அவர்களது ‘ஆபத்தில்லா தன்மை’ அவரை ஈர்க்கிறது. மெல்ல அவர்களுக்குள் நட்பு அரும்புகிறது.

அதன் தொடர்ச்சியாக, வில்லனின் அலுவலகத்திற்குள் புகுந்து வேற்றுக்கிரகவாசியின் விண்கலத்தை ‘லவட்ட’ உதவுகிறார் நாயகன்.

அந்த சம்பவத்தின்போது, வில்லன் கூட்டத்தினரால் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகிறார். அதற்குள், தனக்கு வேண்டிய கல்லை எடுத்துக்கொண்டு தனது கிரகத்திற்குப் பயணிக்கிறார் அந்த வேற்றுக்கிரகவாசி.

ஆனால், நாயகன் தாக்கப்படுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரைக் காப்பாற்றத் துடிக்கிறார். அம்முயற்சியின்போது, அவரைப் பிடித்துவிடுகின்றனர் வில்லன் கூட்டத்தினர்.

அதன்பிறகு, வில்லன் அந்த வேற்றுக்கிரகவாசியைத் துன்புறுத்தி, தனது அலுவலகத்தைச் சிதைத்ததற்கான காரணத்தைக் கேட்கிறார்.

அப்போது, அந்த வேற்றுக்கிரகவாசி சொன்னது என்ன? நாயகன் உயிர் பிழைத்தாரா அதன்பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்தார்களா என்று நமக்கு நன்கு பதில் தெரிந்த கேள்விகளைப் பூதாகரப்படுத்தி, அவற்றுக்குப் பதிலளிக்கிறது ‘அயலான்’ படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

எளிமையான கதை என்றபோதும், வில்லன் பிடியில் வேற்றுக்கிரகவாசியும் நாயகனும் மாட்டுவதும் தப்பிப்பதுமாக உள்ள திரைக்கதை நம்மைச் சோர்வுற வைக்கிறது என்பதே உண்மை. அதையும் மீறிப் படத்தை ரசிக்க முடிகிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

‘ப்ரெஷ்’ஷான உணர்வு!

சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், சரத் கேல்கர், இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார்.

சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த படம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரத்தில், இந்த படத்திற்கு ஏற்ற நடிப்பை அவர் தந்திருக்கிறார் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.

ரகுல் ப்ரீத்சிங்குக்கு இதில் ‘ஸ்கோப்’ குறைவு. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘க்ளிஷே’வாக தெரிகின்றன என்பது இன்னொரு மைனஸ்.

கருணாகரன், கோதண்டத்தோடு சேர்ந்து யோகிபாபு அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன.

சில சீரியஸான கட்டங்களில் லேசாக அவர்களது நகைச்சுவை எட்டிப் பார்ப்பது அருமை.

சரத் கேல்கர் இதில் கார்பரேட் நிறுவன உரிமையாளராக வந்து போயிருக்கிறார். அவரது வில்லத்தனம் திரையில் நம்மைப் பயமுறுத்துகிறது.

அதற்கு மாறாக, அழகுப்பொம்மையாக வந்து போயிருக்கும் இஷா கோபிகர் பாத்திரம் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

இவர்கள் தவிர்த்து சிவகார்த்திகேயன் அம்மாவாக பானுப்ரியா, நண்பராக பாலசரவணன் நடித்துள்ளனர்.

தொடக்கத்தில் வரும் சில காட்சிகளோடு இவர்களது பங்களிப்பு முடிந்துவிடுகிறது. முனீஸ்காந்த், செம்மலர் அன்னம் உட்பட மேலும் சிலர் இதில் உண்டு.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பங்களிப்பினால், திரையில் ‘பழையது’ என்று எந்த இடத்தையும் குறிப்பிட முடிவதில்லை.

விஎஃப்எக்ஸை உணர்ந்து அவரு பணியாற்றியிருப்பது அருமை. பிற்பாதியில் வேற்றுக்கிரகவாசி இடம்பெறும் காட்சிகள் அதற்கான உதாரணங்கள்.

ரூபனின் படத்தொகுப்பு, முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு, இன்னும் ஒலிக்கலவை, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் செறிவுடனே அமைந்துள்ளது.

பின்னணி இசையில் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கேற்ற ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்கள் பாடல்காட்சிகளில் கிடைப்பதில்லை.

திரையில் ‘ப்ரெஷ்’ஷான உணர்வு தோன்றும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ரவிகுமார்.

ஆனால், பின்பாதியில் பல காட்சிகள் ‘க்ளிஷே’வாக தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

மீண்டும் மீண்டும் நாயகனும் வேற்றுக்கிரகவாசியும் வில்லன் கும்பலிடம் சிக்குவதும் தப்பிப்பதுமாக இருப்பது போரடிக்கிறது. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

குழந்தைகளோடு பார்க்கலாம்!

‘இது ஒரு பெரிய படமா’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று உடனடியாகச் சொல்லலாம். அதேநேரத்தில், திரையில் இது பிரமாண்டத்தைக் காட்டுகிறதா என்றால், ‘சில இடங்கள் அவ்வாறு இருக்கின்றன’ என்று தாராளமாகச் சொல்ல முடியும். அதுவே ‘அயலான்’ படத்தின் ப்ளஸ்.

‘தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்’ என்று டைட்டிலுக்கு முன்னால் சொன்னது போலவே, படத்திலும் சிகரெட், மது தொடர்பாக ஒரு காட்சி, வசனம் இல்லை. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

குழந்தைகளோடு பார்ப்பதுதான் இந்த படத்தின் யுஎஸ்பி என்று முடிவு செய்துவிட்டால், அதனைப் பின்பற்ற வேண்டுமென்ற உறுதி பாராட்டத்தக்கது.

ஆபாசமான, வன்முறையைத் தூண்டுகிற உள்ளடக்கம் படத்தில் இல்லை.

அதேநேரத்தில், அறிவியல் புனைவு என்று சொல்லத்தக்க ஒரு கதையை ‘அயலான்’ கொண்டுள்ளது.

இவையிரண்டும் சேர்ந்து, இதனைக் குழந்தைகளோடு சேர்ந்து தியேட்டரில் பார்க்கலாம் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றவாறே படமும் உள்ளது.

அதேநேரத்தில், ‘இது போன்ற கதையை ஹாலிவிட்டில் நிறைய பார்த்துவிட்டோமே’ என்று சொல்பவர்களை இப்படம் திருப்திப்படுத்தாது.

பிற்பாதி திரைக்கதை கொஞ்சம் சோர்வுறச் செய்யும். அவற்றைப் பொருட்படுத்தாவிட்டால் ‘அயலான்’ உங்களுக்கு அந்நியமாகத் தெரிய மாட்டான்.

அதேநேரத்தில், அப்படித் தெரியாமல் இருக்கப் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி தியேட்டருக்குச் செல்ல வேண்டும் என்பதே நாம் பரிந்துரைக்கும் ஒரேயொரு நிபந்தனை!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment