– இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
25.05.1980-ல் காரைக்குடி கம்பன் மண்டபத்தில் என் மகள் மீனாள் – நாச்சியப்பன் திருமணம் நடைபெற்றது.
மதிப்பிற்குரிய கம்பன் அடிப்பொடி சா.கணேசன் ஐயா போன்ற பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்த ப.சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
என் பெற்றோர் இராம.சுப்பையா-விசாலாட்சி, அப்பகுதியில் திராவிட இயக்கத்தை வளர்த்தவர்கள்.
அவர்கள் இல்லத் திருமணத்தில், திறந்த மனதோடு வந்து, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பாராட்டினார்.
அதன்மூலம் அவருடைய அரசியல் நாகரீகம் தெரிந்தது. அதனால் தான் 31 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துக் குறிப்பிடுகிறேன்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா தயாரித்த ‘நான் காந்தி அல்ல’ என்ற படத்தை இயக்கினேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் நாயகன். வில்லன்களின் அக்கிரமத்தை, அமைதி வழியில் தடுக்க முடியாததால், வன்முறையில் இறங்குகிறான் கதாநாயகன்.
அதனால் படத்திற்கு ‘நான் காந்தி அல்ல’ என்று பெயர் வைத்தோம். காந்தியின் பெயரை படத்திற்கு வைக்கக் கூடாது என்று வழக்குப் போட்டார்கள்.
நீதிமன்றப் படிகளையே ஏறாத நான் உயர்நீதிமன்றம் சென்றேன். ஒரே சலசலப்பு. பலரும் சத்தமிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஒரே அதிர்ச்சி. அப்போது “சிதம்பரம் வருகிறார், சிதம்பரம் வருகிறார்” என்ற குரல் கேட்டது.
அப்போது தான் கோர்ட், கோர்ட்டானது. ஒரே அமைதி. திரும்பிப் பார்த்தால் ப.சிதம்பரம் அவர்கள், வழக்கறிஞர் உடையில் கம்பீரமாக நடந்து வருகிறார்.
அந்த நடையிலேயே ‘வெற்றி’ தெரிந்தது. நீதிபதியிடம் நிமிர்ந்து நின்று நியாயத்திற்காக வாதிட்டுச் செல்கிறார். தனிமனிதரின் செல்வாக்கைக் கண்டேன்.
திறமை இருந்தால் சபை தலைவணங்கும் என்பதை உணர்ந்தேன். ‘நான் காந்தி அல்ல’ என்ற படத்தின் பெயரை ‘நான் மகான் அல்ல’ என்று மாற்ற ஒப்புக் கொண்டோம்.
இருக்கமான மனிதருக்குள், முத்தமிழும், இலக்கியமும், எழுத்தும் பேச்சும், கலை ரசனையும் உண்டு.
அவர் அண்ணன் இலக்கியவாதி, இலட்சுமணன் அவர்கள் நடத்திய ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் செயல்பாட்டில் தம்பிக்கு பங்கு உண்டு.
பாராளுமன்ற உறுப்பினராக ஏழுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நல்ல அரசியல்வாதி, சிறந்த வழக்கறிஞர், நவீன உலகப் பொருளாதார நிபுணர்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழமான கருத்துக்களை அழுத்தமாகப் பேசக் கூடியவர். எழுதக் கூடியவர்.
1955 இல் இருந்து பல துறைகளில் அமைச்சராகப் பணியாற்றி, அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர்.
நெருக்கடிகளை நேரடியாகச் சந்தித்து, தீர்க்கும் ஆட்சித் திறன் கொண்டவர்.
பாராளுமன்றத்தில், தமிழர்களின் உடையான, வேட்டி சட்டை அணிந்து, தமிழனாக தலை நிமிர்ந்து நிற்பவர்.
தமிழரின் பண்பாட்டை அவர்கள் கடைப்பிடிப்பது பெருமையாக இருக்கிறது.
செட்டிநாட்டு அரசர் மேதகு இராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் மகள் திருமதி.லட்சுமி ஆச்சி பழனியப்ப செட்டியாரின் மகன்.
அரசர் வழித்தோன்றல். ‘ஆண்டு’ பழக்கப்பட்ட பரம்பரையில் பிறந்து ‘ஆண்டு’ கொண்டிருக்கிறார்கள். மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
இந்திய ஆட்சியின் தூண்களில் ஒன்றாக விளங்குகிறார். அவரின் சிறந்த தொண்டுகள் தொடரட்டும்.
எல்லோரோடும் சேர்ந்து, கழகத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
“வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு” (குறள்)
– கவிஞா் இலக்கியா நடராஜன் தொகுத்த ‘ப.சிதம்பரம் ஒரு பாா்வை’ நூலில் இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் எழுதிய கட்டுரை.