தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.
இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர்.
சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வந்தனர்.
அப்படி நாடகத்திலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்தான் ஆர்.எஸ்.மனோகர்.
குணச்சித்திர நடிகர், வில்லன், நாடகத் தமிழின் தந்தை, நாடகக் காவலர் என்று பல அடைமொழிகளில் அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் நினைவு தினம் இன்று
(ஜனவரி-10).
நாமக்கல்லில் 1925, ஜூன் 29 ஆம் தேதி பிறந்த மனோகரின் தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் ஊழியராக பணியாற்றியவர்.
லட்சுமிநரசிம்மன் என்ற இயற்பெயருடைய இவர் பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.
சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று அஞ்சல் துறையில் சேர்ந்தார்.
பின்னாளில் ‘கானல் நீர்’ படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். ‘நாடகக் காவலர்’ என்ற பொருத்தமான பட்டம் பெற்ற இவரது நாடகங்களில் இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன், திருநாவுக்கரசர் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.மனோகரை சினிமா உலகம் சிறப்பாக வரவேற்றது.
கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர்.
‘வண்ணக்கிளி’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘இதயக்கனி’ உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கைதி கண்ணாயிரம், வண்ணக்கிளி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் பிரகாசித்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ள போதிலும் அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், பல்லாண்டு வாழ்க, நான் ஆணையிட்டால் போன்ற படங்களில் தனித்தன்மையுடன் விளங்குவார்.
மனோகரின் நாடகங்களில் தமிழுணர்வும் தமிழர் பெருமையும் நிரம்பி வழியும்.
இவரது ஒரு நாடகத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் திலகத்திற்கு வெங்கடாஜலபதி திருவுருவம் பதித்த நினைவுப்பரிசை மனோகர் வழங்கினார்.
கலையுலக ஜாம்பவான்களில் இவரும் முக்கியமானவர். பல படங்களில் நடித்திருந்தாலும் இறுதி மூச்சு வரை மேடை நாடகங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தவர்.
இறப்பதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு கூட தன் வரகுண பாண்டியன் நாடகத்தை நடத்தினார்.
இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர்.
தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.