அமைச்சரை வீழ்த்திய இடைத்தேர்தல்!
’இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும்’ என்பது அரசியல் ஆரூடக்காரர்களின் கணிப்பு.
அந்தக் கூற்றை முதன்முறையாக பொய்யாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் அதிமுகவை தொடங்கி இருந்த சில மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.
மாயத்தேவரை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார், எம்ஜிஆர்.
திண்டுக்கல் தேர்தலில் இரட்டை இலை வென்றது.
சரித்திரத்தை முறியடித்தார் புரட்சித்தலைவர்.
ஆளுங்கட்சியாக இருந்த திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
மற்றொரு இடைத்தேர்தலிலும் ஆளும் திமுகவை இரட்டை இலை வென்ற வரலாறு இப்போது.
1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்குப் பொதுத்தேர்தல் நடந்தது. திமுக 150 இடங்களில் வென்றது. கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.
மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடைபெறவில்லை.
பொதுத்தேர்தல் நடந்த 40 சொச்சம் நாட்களில் அந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த 40 நாட்களில் தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு பெரும் திருப்பம் உருவாகி இருந்தது.
பொதுத்தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்டது.
ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணி. ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணி. இரட்டை இலை முடக்கப்பட்டது. இதனால் திமுகவால் வெல்ல முடிந்தது.
தேர்தல் முடிவுக்கு பின்னர், இரு அணிகளும் இணைந்தன. அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இரட்டை இலை மீண்டும் கிடைத்தது.
மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டது.
இரு தொகுதிகளிலும் இரட்டை இலை அமோக வெற்றி பெற்றது.
கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்ற ஒன்றரை மாதங்களில் நிகழ்ந்த இந்த மாற்றம், பின்னாட்களில் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் வாகை சூடி இருப்பது, மேற்சொன்ன அதிமுகவின் இரண்டு வெற்றிகளையும் எதிரொலிப்பதாக உள்ளது.
ராஜஸ்தானில் அமைச்சர் வீழ்ந்தார்
கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது.
மொத்தம் 200 தொகுதிகள்.
கரன்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.
இந்தத் தேர்தலில் 115 இடங்களை கைப்பற்றி பாஜக வென்றது. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்களே கிடைத்தது.
தேர்தலில் போட்டியிடாத சுரேந்திர பால் சிங் அமைச்சராக்கப்பட்டார்.
இந்த நிலையில் காலியாக இருந்த கரன்பூர் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
அமைச்சர் சுரேந்திர சிங், பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் ரூபிந்தர் சிங் களம் இறக்கப்பட்டார்.
இவர், மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங்கின் மகன். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
அமைச்சர் சுரேந்திர சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங், 11,283 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.
பொதுத்தேர்தலில் வென்ற பாஜக ஒன்றரை மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.
தேர்தலில் தோற்றுப்போன அமைச்சர் சுரேந்திர சிங்குக்கு கடந்த 5-ம் தேதிதான் இலாகா ஒதுக்கப்பட்டது. நான்கு துறைகள் கொடுக்கப்பட்டன.
இலாகா ஒதுக்கப்பட்ட அன்று, அவர் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது என்பது விநோதமான உண்மை.
தேர்தலில் தோற்றுப்போன சுரேந்திர சிங், முடிவு வெளியானதும், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.
– பி.எம்.எம்.