தாய் தலையங்கம்:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும் என்பதை தமிழக அரசின் இலக்காக இருந்தது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட இம்மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பலருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே இம்மாதிரியான உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து, வெவ்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
அந்த ஒப்பந்தங்கள் முழுமையாக எந்த அளவுக்கு செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே.
அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கப்பட்ட முதல் நாளிலிலேயே 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரண்டாம் நாள் மாநாடு நிறைவு பெற்றபோது இம்மாநாட்டின் மூலம் ஒப்பந்தமான முன்னூறுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்.
இதன் மூலம் 26 லட்சத்து 90 ஆயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடுத்தக்கட்ட பாய்ச்சலை சந்தித்து இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
நிறைவுரை ஆற்றிய மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
தொழில் முதலீட்டுக்கு தமிழ்நாடு உகந்த மாநிலம் என்றும் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தனது பேச்சில் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
நல்லதுதான். தமிழநாட்டில் நடந்திருக்கிற இந்த மாநாட்டின் மூலம் 26 லட்சம் பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பாராட்டத்தக்க அம்சம்தான். இந்த சமயத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு தகவலை தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு கொடுத்திருக்கிற நிலவரப்படி அரசு வேலைவாய்ப்புகாக பதிவு செய்து தமிழ்நாட்டில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 67 லட்சத்து 58 ஆயிரம் பேர்.
இதுதவிர தமிழ்நாட்டில் உரிய வேலைவாய்ப்பு இல்லாததால் அயல் நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை பல லட்சத்துக்கும் மேல்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளில் உருவாகும் எந்த வெற்றிடத்தையும் தற்போது நிரப்பக் கூடியவர்களாக வட மாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள்.
தொழில், வங்கிப் பணி, கட்டுமானம் துவங்கி ஏராளமான வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறுபவர்களாக அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே நமக்கு முன்னால் நாம் பார்க்கும் எதார்த்தம்.
இம்மாநாடு மூலம் இனி நிறைவேறி இருக்கும் பல லட்சம் கோடி மதிப்பிலான வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே காத்திருக்கிற தமிழர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களுடைய வாழ்வாதாரம் சிறப்பதற்கு தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த நேரத்தில் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலனை விரும்புகிறவர்களின் எளிய, ஆனால் முக்கியமான எதிர்பார்ப்பு.