தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!

கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை

ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார்.

இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல, மிகவும் கரடுமுரடானது.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து, இல்லற வாழ்வில் பல சிரமங்களைச் சந்தித்து இந்த நிலையை அடைந்திருக்கிறார். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உயர் பதவியை தமிழில் எழுதி அடையமுடியும் என்றும் நிரூபித்திருக்கிறார் கலைவாணி.

அப்பா கடைநிலை ஊழியர்

நம்மிடம் பேசிய அவர், “என் அப்பா முருகேசன், பொதுப் பணித்துறையில் கடைநிலை ஊழியராக வேலை செய்தவர்.

பள்ளியில் படிக்கும் நாட்களில் அவரைப் பார்க்க அவரது அலுவலகம் செல்வேன். உயரதிகாரிகளின் பையைத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் ஏறிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

அப்போது என்னிடம் அவர், ‘நீ நன்றாகப் படித்து பெரிய ஆளாக வரவேண்டும்’ என்று சொல்வார். அந்த வார்த்தைகள் என் மனத்தில் ஆழப் பதிந்தன.

ஆசிரியப் பயிற்சிப் படிப்புக்காகக் காத்திருந்தபோது உள்ளூர் நூலகத்தில் இறையன்பு எழுதிய நூல்களை வாசித்தேன். அவரது கருத்துகள் என்னை இலட்சியத்தை நோக்கி நகரவைத்தன.

இறையன்பு தந்த நம்பிக்கை

எந்த குடும்பப் பின்னணியில் இருந்தும், நாம் உயர் பொறுப்புகளை அடையமுடியும் என்ற நம்பிக்கையை அவரது நூல்கள் அளித்தன.

தொலைதூரக் கல்வி மூலம் பி.காம்., பி.எஸ்சி படித்தேன். மெல்லப் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக என் வருமானத்தில்தான் குடும்பம் நடத்திவருகிறேன். கோயம்புத்தூரில் பணியில் இருந்துகொண்டே தேர்வு பயிற்சி மையம் வைத்து நடத்தினேன்.

திங்கள் முதல் வெள்ளி வரை அரசு வேலை. கேள்வித்தாள் தயாரிப்பதில் தொடங்கி அனைத்து வகுப்புகளையும் நானே எடுப்பேன். எனக்காக இரவில் படிப்பேன்.

குரூப் 1 தேர்வுக்குப் பயிற்சி

2019 மார்ச் வரைக்கும் கோயம்புத்தூரில்தான் இருந்தேன். எனக்கு குரூப் 1 தேர்வுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது.

ஆனால், சென்னைக்கு வந்து செல்வதில் சிக்கல் இருந்தது. அதனால் விஏஓ பணியைத் தேர்ந்தெடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தேன்.

பொன்னேரியில் விஏஓவாகப் பணியாற்றினேன். 2019 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றேன். காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணி கிடைத்தது.

ஆனால், துப்பாக்கிச்சூடு பயிற்சியின்போது காலில் ஜவ்வு கிழிந்துவிட்டதால் பணியைத் தொடரமுடியவில்லை.

16 தேர்வுகளில் வெற்றி

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 முறை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வென்றிருக்கிறேன். அப்பல்லோ பயிற்சி மையத்தில் சேர்ந்து மீண்டும் குரூப் 1 தேர்வுக்குத் தயாரானேன்.

முதன்மை, நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற்று இன்று துணை ஆட்சியராகத் தேர்வாகி இருக்கிறேன்.

என்னிடம் ஒரு கிராம் தங்கநகைகூட இல்லை. ஆனால், தன்னம்பிக்கை அதிகம் இருந்தது.

பதினேழு வயதில் டாக்டர் ஆகவேண்டும் என நினைத்தேன். படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஆனால், அன்று தற்கொலை முடிவுக்குச் சென்றிருந்தால், இன்று உங்கள் முன் துணை ஆட்சியராக நிற்கமுடியாது. ஒன்றை நாம் இழக்கும்போது, எதிர்காலத்தில் இன்னொரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

காத்திருக்கும் வெற்றிகள்

தமிழ்நாடு அரசுப் பணியில் உயர் பதவியென்பது துணை ஆட்சியர் பணிதான். பெரிதினும் பெரிது கேள் என்ற இலக்கை வைத்து தேர்வில் வென்றேன்.

இன்றைய மாணவர்கள் தற்காலிக தோல்விகளைப் பெரிதாகப் பார்க்கிறார்கள். பின்னாளில் நமக்காகக் காத்திருக்கும் பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை” என்று உற்சாகத்துடன் பேசினார்.

  • எஸ். சங்கமி
Comments (0)
Add Comment