கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கின்னஸ் சாதனை விருது!

சென்னையில் நேற்று (07.01.2024) புத்தகக் கண்காட்சியின் சிறப்பு அரங்கில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா’ என்கின்ற, வடிவமைப்பில் கனமான நூல் அவருடைய 50-வது நூல் என்ற ஒரு சிறப்புடன் வெளியிடப்பட்டது.

விழா துவங்குவதற்கு முன்பிருந்தே சென்னை முழுக்க பரவலான மழை. விழா நடந்த நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திலும் அப்படிதான். எங்கும் சேரும் சகதியுகமாக இருந்த நிலையில், அதற்கிடையில் சிறிது சிறிதாக பார்வையாளர்களும் ஊடகவியலாளர்களும் கூடி சற்று நேரத்தில் அரங்கம் நிறைந்த கூட்டம் ஆகிவிட்டது.

விழாவின் துவக்கத்தில் புத்தகம் வெளியிடப்பட்டதும், சென்ற ஆண்டில் மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட ‘மிஸ் யூ’ நூலுக்காக கின்னஸ் ரெக்கார்ட் விருது வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் சில கேள்விகளைக் கேட்க, அதற்கு தன் வழக்கமான பாணியில் கேளியும் சாதுரியமாக பதிலளித்துக் கொண்டிருந்தார் மனுஷ்யபுத்திரன்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன், பர்வீன் சுல்தானா மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்கள் பேச, சுருக்கமாக நிறைவுரை ஆற்றினார் மனுஷ்ய புத்திரன்.

புத்தகத் தலைப்பில் இருக்கும் ‘உன்னை அணைத்துக் கொள்ளவில்லையா’ என்கிற தலைப்பிற்கு ஏற்ப மனுஷ்ய புத்திரனைப் பார்த்து, “உன்னை அணைத்து கொள்ள நாங்கள் இருக்கிறோம். தமிழ்ச் சமூகம் இருக்கிறது” என்று சொன்னபடியே மேடையில் இருந்த மனுஷ்யபத்திரனை அணைத்துக்கொண்டார் பாரதி கிருஷ்ணகுமார்.

இந்த விழாவைப் பற்றி மனுஷ்யபுத்திரன் தன்னுடைய முகநூல் பதிவில் எழுதி இருப்பதைப் பார்க்கலாம்.

நேற்றைய தினம் என் இலக்கிய வாழ்க்கையில் பெரும் நம்பிக்கை தந்த தினம். ஆயிரம் கரங்களால் நான் தாங்கப்படும் பெரும் மனக்கிளர்ச்சியை அடைந்தேன்.

காலையிலிருந்து மழை விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்தது. மதியத்திலிருந்து தொடர் மழை. கூட்டத்தை ரத்து செய்துவிடலாமா என்று யோசித்தேன். நடப்பது நடக்கட்டும் என்று புத்தகக் கண்காட்சி நூல் வெளியீட்டு அரங்கிற்கு சென்றேன். மழை பெய்து அரங்கின் தரை சேறும் சகதியுமாக இருந்து. அரங்கில் இருக்கைகள் நிரம்பி நிறைப்பேர் நின்றுகொண்டிருந்தனர்.

‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ என் ஐம்பதாவது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா கொட்டுகிற மழை நடுவே ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க சுமார் 20 ஊடகங்கள் பதிவுசெய்ய பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்தது.

ஊடகவியலாளர் அபிநயா என் படைப்பு, வாழ்வு குறித்து சிறு உரையாடலை மேடையில் என்னிடம் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் பிற்பகுதியில் தொகுப்பாளர் பணியை காயத்ரி மேற்கொண்டார்.

இந்தத் தொகுப்பு குறித்தும் பொதுவாக என் கவிதைகள் குறித்தும் பேசிய வசந்தபாலன், இசை, வெய்யில், பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் ஐவருமே அவரவரர் வழியில் சொற்களின் நடனங்களை நிகழ்த்தினர்.

ஒரே மேடையில் இத்தனை சிறந்த, அர்த்தமுள்ள பேச்சுகள் நிகழ்வது அபூர்வம். இதயத்தின் ஆழத்திலிருந்து பேசினார்கள். அந்தப் பேச்சுகள் கூடியிருந்த ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டது. கரகோஷங்கள் இடையறாது கேட்டன.

நீர் தளும்பிய கண்களைக் கண்டேன். அரங்கச்சுற்றிலும் பெய்துகொண்டேயிருந்தே மழைத் தாரைகளைக் கண்டேன். எல்லாவற்றையும் மழை கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மழை சாட்சியமாக இருந்தது.

பாரதி கிருஷ்ணகுமார் பேசிமுடித்துவிட்டுவந்து என்னை அணைத்துக்கொண்டார். நான் என் சொற்களின் கரங்களால் அங்கிருந்த அனைவரையும் அணைத்துக்கொண்டேன். மழை எங்கள் எல்லோரையும் அணைத்துக்கொண்டது.

இந்த வாழ்வு எப்போதாவது இப்படி அழகாக இருந்துவிடுகிறது.

Comments (0)
Add Comment