ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும்.
அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில் அமைந்த ‘நெரு’ எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு, படம் வெளியாவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. அதேநேரத்தில், இது பார்வையாளர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்ற எண்ணமும் கூடவே தொக்கி நின்றது.
அக்கேள்விகளுக்குப் படம் பார்த்து முடிந்தபின்னர் நாம் பெறும் பதில்கள் என்ன?
நீதிமன்ற விசாரணையில்..!
சாராவின் வற்புறுத்தலின் பேரில், அது தொடர்பாக அவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்கின்றனர். இன்ஸ்பெக்டர் பால் வர்கீஸ் (கணேஷ்குமார்) அது தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறார். அப்போது, அக்குற்றத்தைச் செய்தது தொடர்பாக ஒரு விவரம் கூடக் கிடைக்கவில்லை. வல்லுறவில் ஈடுபட்டதற்கான தடயங்கள் ஏதும் சம்பவ இடத்தில் இல்லை.
அதற்கடுத்த நாள், தன்னைப் பாதிப்புக்குள்ளாக்கிய நபரின் முகத்தைச் சிலையாக வடிக்கிறார் சாரா. அந்த உருவத்தைக் கண்டதும், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், பக்கத்துவீட்டுக்கு விருந்தாளியாக வந்த மைக்கேல் (சங்கர் இந்துசூடன்) தான் அந்த நபர் என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட மைக்கேல், மும்பையில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபரின் மகன். ஆனாலும், இன்ஸ்பெக்டர் பால் வர்கீஸ் அவரைக் கைது செய்கிறார்.
நீதிமன்ற விசாரணையின்போது, கேரளாவின் மிகப்பெரிய குற்றவியல் வழக்கறிஞரான ராஜசேகரன் (சித்திக்) மைக்கேல் சார்பில் ஆஜராகிறார். அவருக்கு ‘ஃபெயில்’ தர வேண்டும் என்கிறார். அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கெதிரான சாட்சியங்களைச் சமர்ப்பிக்காமல் தவிர்க்கிறார்.
அதுவே, ராஜசேகரனும் மைக்கேல் குடும்பத்தினரும் செலுத்தும் அதிகார துஷ்பிரயோகம் எத்தகையது என்று சொல்லிவிடுகிறது. அதன்பிறகு, தன்னுடைய ‘லாஃபி’ மூலமாக சாராவின் வழக்கை எந்த வழக்கறிஞரும் விசாரிக்காதவாறு சதியில் ஈடுபடுகிறார் ராஜசேகரன்.
அந்தச் சூழலில், ராஜசேகரனை எதிர்த்து ஒரு நபர் தான் வாதிட முடியும் என்று நம்புகிறார் இன்ஸ்பெக்டர் பால் வர்கீஸ். தோழி அஹானா (சாந்தி மாயாதேவி) மூலமாக, அவரது சீனியர் விஜயமோகனைச் (மோகன்லால்) சந்திக்கச் செல்கிறார்.
ராஜசேகரனின் சூழ்ச்சி காரணமாக, நீதிமன்றக் கண்டனத்திற்கு ஆளாகிப் பல ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத நிலைக்கு ஆளானவர் விஜயமோகன். ஆனால், இப்போதும் சில வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற விசாரணைக்கான குறிப்புகள் தந்து உதவிக் கொண்டிருப்பவர்.
தொடக்கத்தில், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலை தனக்கில்லை என்று மறுக்கிறார் விஜயமோகன். சாராவை நேரில் சந்தித்தபிறகும் கூட, அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், சாராவுக்காக எவரும் வாதிட முன்வரமாட்டார்கள் எனும் தொனியில் ராஜசேகரன் அளிக்கும் தொலைக்காட்சிப் பேட்டி அவரது மனதை மாற்றுகிறது.
மிகச்சாமர்த்தியமாகப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மைக்கேலின் முகமூடியைக் கிழிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விஜயமோகன். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? நீதிமன்ற விசாரணையின்போது, ராஜசேகரன் தரப்பில் கேட்கப்படும் கொடூரமான கேள்விகளை சாராவின் குடும்பம் எவ்வாறு எதிர்கொண்டது? வெற்றிக்கு வாய்ப்பே இல்லை எனும் சூழலில் சாராவுக்கு கிடைத்த நீதி எத்தகையது என்று சொல்கிறது ‘நெரு’வின் மீதிப்பாதி.
யார் இந்தப் பெண்?
தமிழில் ‘ராங்கி’ படத்தில் அறிமுகமான அனஸ்வரா ராஜன், தற்போது மலையாளத் திரையுலகில் தேடலுக்குரிய இளம் நாயகி. சாரா எனும் பாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். நீதிமன்ற விசாரணைக் காட்சியில், அவரும் சித்திக்கும் பேசும்போது ‘யார் இந்தப் பெண்’ என்று நம்மைப் பிரமிக்க வைக்கிறார்.
அனஸ்வராவின் பெற்றோராக நடித்துள்ள ஜகதீஷும் ஸ்ரீதான்யாவும் மிகச்சில காட்சிகளில் வந்தாலும் நம்மை ஈர்க்கின்றனர். ராஜசேகரனாக நடித்துள்ள சித்திக்கும் சரி, அவரது மகளாக வரும் பிரியா மணியும் சரி, நியாய தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் வாதிட முன்வரும் வழக்கறிஞர்களை அப்படியே கண் முன்னே நிறுத்துகின்றனர்.
இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் சாந்தி மாயாதேவி, இதில் அஹானா பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வில்லனாக வரும் சங்கர் இந்துசூடனின் பங்களிப்பு, பின்பாதியில் அருமையாக வெளிப்பட்டுள்ளது. இவர்கள் தவிர்த்து இன்னும் ஒரு டஜன் பேர் இதில் முதன்மை பாத்திரங்களாக வந்து போயிருக்கின்றனர்.
அனைவரையும் தாண்டி, இப்படத்தைப் பார்க்கக் காரணமாக இருக்கிறது மோகன்லாலின் இருப்பு. அதை உணர்ந்து, அவர் அந்த பாத்திரத்தோடு பொருந்திப் போயிருப்பது சிறப்பு. ஹீரோயிசத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் இருந்தும், அது திரைக்கதை ட்ரீட்மெண்டை சிதைத்துவிடும் என்பதை உணர்ந்திருப்பதுதான் அவரது இருப்பை இன்னும் கொண்டாடச் செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சதீஷ் குரூப், படத்தொகுப்பாளர் வி.எஸ்.விநாயக், போபனின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் விஷ்ணு ஷ்யாமின் பின்னணி இசை ஒன்று சேர்ந்து, ஒரு நேர்த்தியான ‘த்ரில்லர் ட்ராமா’ பார்த்த அனுபவத்தை நமக்குத் தருகிறது.
ஜீத்து ஜோசப்பின் பொறுப்புணர்வு!
சாந்தி மாயாதேவி உடன் இணைந்து இப்படத்துக்கு எழுத்தாக்கம் செய்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். ஒரு கதையைத் திரைக்கதையாக மாற்றும்போது, அதற்கு எத்தகைய ‘ட்ரீட்மெண்ட்’ தர வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியாக பல ‘த்ரில்லர்கள்’ தந்தாலும், ஒவ்வொன்றையும் வேறுபட்டதாகத் தருவதில் அவரது திறமை பளிச்சிடுகிறது. அதிலொன்றாக ‘நெரு’வும் சேர்கிறது.
‘நீ என்ன பண்ணன்னு சொல்லு’ என்று சித்திக் சங்கரிடம் கேட்கும் இடமும், ‘இவனை மாதிரி ஆட்களை எல்லாம் கொடூரமாகக் கொல்லனும்’ என்று பிரியாமணி சித்திக்கிடம் சொல்வதும், உண்மை என்னவென்பதை நமக்கு சூசகமாக உணர்த்திவிடுகிறது. அதன்பிறகு, அந்த குற்றத்தை வில்லன் எப்படி திறமையாக மறைத்தார் என்பதுதான் மீதிப்பாதியில் நம்மைச் சுண்டியிழுக்கும் அம்சம். அப்படியிருந்தும், வில்லன் குற்றத்தை நிகழ்த்திய இடங்களை திரைக்கதையில் இயக்குனர் அடிக்கோடிட்டுக் காட்டவே இல்லை.
அந்த அணுகுமுறையானது, பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைத்துவிடக் கூடாது எனும் ரீதியிலானது. அதுவே, ஒரு வழக்கு விசாரணையை நேரில் பார்க்கும் நபராகப் பார்வையாளர்களை உணர வைக்கிறது. சொல்லப்போனால், நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றுகிறது.
’த்ருஷ்யம்’ மற்றும் ‘த்ருஷ்யம் 2’ படத்திலும் இதையே நிகழ்த்தியிருப்பார் ஜீத்து ஜோசப். அந்தப் படங்களில், குற்றத்தை நிகழ்த்தியதாக நாயகனின் குடும்பம் காட்டப்படும். ‘பொய்யாக ஒரு நாளையே சிருஷ்டிப்பது’ எனும் ஐடியாவும் அதில் இடம்பெற்றிருக்கும்.
இந்த படத்தில், அது மேற்கோள் காட்டப்படுகிறது. அது, நேரடியாக மோகன்லாலிடம் இன்னொரு பாத்திரம் சொல்வது போல அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் கூக்குரலிட அது போன்ற சில சந்தர்ப்பங்களையே தந்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.
‘த்ருஷ்யம்’ போல ஒரு குற்றவாளி தனது குற்றங்களுக்கான சாட்சியங்களை மறைக்க முயன்றால் என்னாவது என்ற அறம் சார்ந்த கேள்விகளுக்குத் தன்னால் இயன்ற வழியில் பதிலளித்திருக்கிறார். ஒரு இயக்குனராக, ஜீத்து ஜோசப் இது போன்ற படங்களை உருவாக்குவது மிக அவசியம். ஒரு படைப்பாளியாக அவரது சமூகப் பொறுப்புணர்வு எத்தகையது என்பதை அறிந்துகொள்ள, இதைவிட்டால் வேறு வழி ஏது?
– உதய் பாடகலிங்கம்