நூல் அறிமுகம்:
இங்கு ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை புத்தகத்தை தொட்டால் கையை வெட்டுவ, படித்தால் நாக்கை அருப்ப,கேட்டாள் ஈயத்தை காய்ச்சி காதில ஊத்துவ.. என்று கூறும் கூட்டத்தினரிடையே மற்றொரு சமூகத்திற்கு அவர்களது கையில் புத்தகம் கிடைக்கவே சில நூற்றாண்டுகள் ஆயின என்பது வரலாறு. அதனை நாம் நினைவு கொள்வோம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாசிப்பை நேசிக்கவும், பழக்கப்படுத்திக் கொள்ளவும் நம்முடைய தேவையும் வாசிப்பும் அதிகமாகவே இருக்கிறது.
இங்கு யார், யார் என்ன செய்யவேண்டும் என்று இந்த சமூகம் தான் தீர்மானிக்கிறது. அதனை உடைத்து நாம் வெளியேற வாசிப்பை நம் வசப்படுத்த வேண்டும்.
பொதுவாக அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை பார்த்து சில ஆசிரியர்கள், நீ எல்லாம் படிச்சிட்டு என்ன(டி)டா ஆகப் போற.? என்ற கேள்வி கேட்காத அரசுப் பள்ளிகளே தமிழகத்தில் இல்லை எனலாம்.
ஆகவே, அறிவும், அனுபவமும் பாடப்புத்தகத்தில் மட்டும் இல்லை அதையும் தாண்டி நாம் வாசிக்கும், சந்திக்கும் பல புத்தகங்களிடமும், மனிதர்களிடமும் தான் அறிவும், அனுபவமும் இருக்கிறது என்பதை மிக எளிமையாக எழுத்தாளர் ச.சுப்பாராவால் எழுதப்பட்ட புத்தகம்தான் ‘வாசிப்பை நேசிப்போம்’.
நம் தொடக்கநிலை வாசகர்களுக்கு உண்டாகும் மனத்தடைகள் ஆயிரம். அதைப் போக்கி மெல்ல வாசிப்பின் சுவாரசியத்தை அவர்களுக்கு இயல்பாகப் புரிய வைத்து தேர்ந்த வாசகர்களாக அவர்களை உருமாற்ற வைக்க ச.சுப்பாராவ் எடுத்த முயற்சி இச்சிறு நூல்.
வாசிப்பு ஒரு கலை. எனதளவில் தியானம் என்று கூட சொல்லுவேன். “நம் மனதில் எழும் ஏராளமான கேள்விகளுக்கு நடைமுறை சார்ந்து விடைகாண முயற்சி தான் இந்த சிறுநூல்.
அச்சு இயந்திரம் ஜெர்மனியில் 1457 கூட்டன் பர்க்கால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தமிழில் ஆண்டிரிக் அடிகளாரின் முயற்சியால் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற முதல் அச்சு நூல் 1553 வந்துவிட்டாலும் அச்சு நூல்களின் பரவலாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் வந்தது.”
என்றும், “இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியர் ஒரு நாளைக்கு 97 நிமிடம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டிவி பார்ப்பது தெரிந்தது.
அமெரிக்காவைக் காட்டிலும் நிலைமை பரவாயில்லை என்று நினைத்தால், புத்தகம் செய்தித்தாள் அனைத்திற்கும் சேர்த்து படிப்பதற்காக 24 நிமிடம் தான் ஒரு இந்தியர் ஒதுக்குவது தெரிந்தது.
இந்தியர்கள் சராசரியாக 8 மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள் அதில் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் மணி நேரம் ஃபேஸ்புக்கில் செலவாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.”
இப்படி புள்ளிவிவரங்களுடன் நாம் விரயம் செய்யும் நேரத்தையும், நாம் செய்ய வேண்டியதும் மிக அழகாக விவரிக்கிறார்.
மேலும், உடலும் மனமும் உற்சாகமாக உள்ள நேரத்தில்தான் படிக்க வேண்டும்.ஒரு நாளில் எந்த நேரத்தில் நாம் சுறுசுறுப்பாக இருப்போம் என்பது நமக்கு நன்றாக தெரியும் அந்த நேரத்தில் படிக்க உட்கார்ந்தால் இந்த தூக்கப் பிரச்சினை வராது என்று புத்தகம் எடுத்தாலே எனக்கு தூக்கம் வருகிறது நான் எப்படி படிப்பது என்று சாக்கு சொல்பவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்.
ஆரம்பகால வாசகர்கள் கதைகளைத்தான் படிக்கவேண்டும். வாசிப்பில் சிறிது தேர்ச்சி பெற்ற பின் கடுமையான விஷயங்கள் உள்ள நூல்களைப் படிக்கலாம். புத்தகங்களின் எளிமை கடுமை பற்றியும் கூறுவது அவசியம்.
வாசிப்பு என்பது முழுக்க முழுக்க நமது மனம் சார்ந்தது. என்றும் எந்த ஒரு தனி நபராலும் வாங்கி முடித்துவிட முடியாத அளவிற்கு இன்று புத்தகங்கள் ஏராளமாக வருகின்றன.
எனவே வீட்டுக்கு அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக சேர்வது அவசியம். அதேபோல, வாசிப்பு பழக்கம் உள்ளவர்களோடு ஒரு நல்ல நட்பு வைத்திருப்பது அவசியம் புதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகமும் புத்தகங்களை பரஸ்பரம் மாற்றிக் கொள்ளவும் இந்த நட்பு உதவும். நமது சிந்தனை விரிவடையும்.
எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் வாசிக்க ஆர்வமூட்டும் சிறு புத்தகங்கள்.
1. வாசிப்பு வசப்படும்
2.வாசிப்பை நேசிப்போம்.
புத்தகங்கள் வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த இரண்டு புத்தகங்களை மட்டும் படித்தால் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வானம் வசப்பட்டது போல நமக்கு வாசிப்பு வசப்படும்.
தோழர். ச.சுப்பாராவ் சிறுகதை எழுத்தாளர் என்பதாலேயே அவர் மொழிபெயர்க்கும் கதைகள் ஆனாலும் சரி புத்தகங்கள் ஆனாலும் சரி படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஒரு நண்பனின் ஆலோசனையைப் போல அவருடைய எழுத்துக்களும் இருக்கின்றன.
நூல்: வாசிப்பை நேசிப்போம்.
ஆசிரியர்: ச. சுப்பாராவ்.
பாரதி புத்தகாலயம்.