‘ஒரு மனிதன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீடு, அவன் மரணத்தின் போதுதான் தெரியும்’ என்பார்கள்.
‘கேப்டன்’ விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருந்த பேரன்பையும், பெருமதிப்பையும் அவரது இறுதிச் சடங்கில் பார்க்க முடிந்தது.
உடல்நலக்குறைவால் வியாழனன்று மரணம் அடைந்த விஜயகாந்த் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
அவரது முகத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நேற்று காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், திரை உலகத்தினர் ஆகியவர்களோடு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
வழிநெடுக, சாலையின் இரு புறங்களிலும், மாடிகளிலும் திரண்டிருந்த மக்கள், மலர் தூவி கேப்டனுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
மக்கள் திரளால், தீவுத்திடலில் இருந்து 13 கி.மீ. தூரமுள்ள கட்சி அலுவலகத்துக்கு வாகனம் வந்து சேர 3 மணி நேரத்துக்கும் மேலானது.
விஜயகாந்த் உடல், சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையமகன் சண்முகப்பாண்டியன் இறுதிச் சடங்குகள் செய்தார். அப்போது வானில் கருடன் வட்டமடித்தது.
முன்னதாக போலீசார் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தினர்.
ஸ்டாலின் சிரத்தை
விஜயகாந்த் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், சிரத்தை எடுத்து துரித ஏற்பாடுகளை செய்துள்ளார்.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, கூட்டம் அளவுக்கு அதிகமாகக் கூடியதால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
தொண்டர்கள், பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கும்படி ஸ்டாலினிடம், பிரேமலதா கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து தீவுத்திடலில் விஜயகாந்த் உடலை வைக்க ஸ்டாலின் அனுமதி அளித்தார்.
தீவுத்திடலில் அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டன.
அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டு, 100 மீட்டருக்குப் பந்தல் போடப்பட்டு, தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
விஐபிக்கள் அமருவதற்கு தனிப்பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டன. ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகள், நடமாடும் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வாகனத்துக்கான மலர் அலங்காரச் செலவையும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு இறுதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டபோதும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோதும் முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவினால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மரணம் அடைந்த அன்று, விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், கோயம்பேட்டில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோதும் சக அமைச்சர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரேமலதா உருக்கம்
விஜயகாந்த் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் தனி அக்கறை எடுத்துக் கொண்டதற்காக அவருக்கு பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், ’’விஜயகாந்தின் இறுதிச் சடங்குக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றி’’ எனக் குறிப்பிட்டார்.
’’தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை விஜயகாந்துக்குக் கிடைத்திருக்கிறது.
2 நாட்களில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு விஜயகாந்த் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், குணமும்தான் காரணம்’’ என பிரேமலதா உருக்கத்துடன் தெரிவித்தார்.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ’எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’ என பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் பதிவை, தமிழகமே ஆமோதிக்கிறது.
– பாப்பாங்குளம் பாரதி.