சிவாஜி, ரஜினி, கமலுக்கு கிடைக்காதது கேப்டனுக்கு கிடைத்தது!

உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு, அவர்களின் நூறாவது படங்கள், தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன.
ஒரே விதி விலக்கு, கேப்டன் விஜயகாந்த்.

பல நூறு நாள் சினிமாக்கள், வெள்ளிவிழா படங்களை வழங்கிய சிவாஜியின் 100- வது படம் ‘நவராத்திரி’. நடிகர் திலகத்தின் ‘மாஸ்டர் பீஸ்’என கொண்டாடப்படும் படம் இது.

ஏ.பி.நாகராஜன் இயக்கிய நவராத்திரி படத்தில் சிவாஜி, ஒன்பது விதமான ‘கெட்அப்’களில் கலக்கி இருப்பார்.

சிவாஜியின் நடிப்பு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததாலும், அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் திகழ்பவர் ரஜினிகாந்த்.

இவரின் 100-வது திரைப்படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது.

ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஸ்ரீராகவேந்திரா ரசிகர்களைக் கவரவில்லை.

ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக 100-வது படம் அமைந்தது.

உலக நாயகன் கமல்ஹாசனின் 100-வது படம் ‘ராஜபார்வை’.  கண் பார்வையற்றவராக அவர் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் முதன் முதலாக இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்திருந்தார்.

சிங்கீதம்சீனிவாசராவ் இயக்கி இருந்தார். விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும், ‘ராஜபார்வை’ படம், வியாபார ரீதியாக படுதோல்வியை அடைந்தது.

சத்யராஜின் 100-வது படமான ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’யை பி.வாசு இயக்கி இருந்தார்.

ஒரு கன்னடப் படத்தின் கதையைத் தழுவி இதனை உருவாக்கினார் வாசு. இந்தப் படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இளைய திலகம் பிரவுவின் 100-வது படம் ‘ராஜகுமரன்’. அந்த நேரத்தில் வெற்றிப் படங்களாக கொடுத்துக்கொண்டிருந்த ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

தனது நூறாவது படம் என்பதால் சிவாஜி பிலிம்ஸ் சார்பில் பிரபுவே இந்தப் படத்தை தயாரித்தார். படம் படு தோல்வி.

ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் 100-வது படம் சறுக்கிய நிலையில் விஜயகாந்தின் 100-வது படமான  ‘கேப்டன் பிரபாகரன்’ பெரும் வெற்றி பெற்றது.

அதற்கு முன்பு விஜயகாந்துக்கு ‘புலன் விசாரணை’ எனும் மெகாஹிட் படம் கொடுத்த, திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.கே.செல்வமணி இதனை இயக்கினார்.

(புலன் விசாரணை ரிலீஸ் சமயத்தில்தான் விஜயகாந்துக்கு திருமணம் நடைபெற்றது)

1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு பாடல்களே கிடையாது.

ஓப்பனிங் சண்டை காட்சியும் இல்லை. படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கழித்தே விஜயகாந்தின் அறிமுகம் இருக்கும்.

275 நாட்களையும் கடந்து ஓடிய இந்தப்படம், விஜயகாந்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

தமிழ் சினிமா வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.

அதன்பிறகு, இந்தப் படத்தின் தலைப்பில் இடம்பெற்ற கேப்டன் என்பது விஜயகாந்தின் பட்டப்பெயராக மாறிபோனது.

கொசுறு தகவல்:

மேற்சொன்ன படங்களில் சிவாஜி படம் தவிர, அத்தனைப் படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment