தெய்வத் திருமகள், கனா, தங்கமீன்கள் உட்படப் பல தமிழ் படங்கள் அப்பா – மகள் பாசத்தைச் சிலாகித்துக் கொண்டாடியிருக்கின்றன. அந்த வரிசையில், ‘அபியும் நானும்’ படத்திற்கும் முக்கிய இடமுண்டு.
இதில் பிரகாஷ்ராஜ் தந்தையாகவும், த்ரிஷா அவரது மகளாகவும் நடித்தனர். ‘கில்லி’யில் இதே த்ரிஷாவைப் பார்த்துதான், ‘செல்லம்’ என்று ‘உச்சக் குரலில்’ கத்தியிருப்பார் பிரகாஷ்ராஜ்.
அப்போது தியேட்டர்களில் ‘ஓ..’ என்று பெருங்குரலெடுத்து அலறிய அதே ரசிகர்கள்தான் இப்படத்தையும் கைத்தட்டி ரசித்தனர்.
இரண்டும் வெவ்வேறு உலகங்கள் என்று வித்தியாசப்படும் அளவுக்கு, ‘அபியும் நானும்’ படத்தைத் தந்திருந்தார் இயக்குனர் ராதாமோகன்.
பெண் குழந்தையின் வாழ்வு!
அறுபதைத் தொட்ட ஒரு மனிதர், ஐந்தாறு வயதுள்ள மகளுடன் வரும் நடுத்தர வயது ஆணைத் தற்செயலாகச் சந்திக்கிறார். உடனே, அவருக்குத் தனக்கும் தனது மகளுக்குமான பாசம் கண் முன்னே வந்து போகிறது.
தானும் தனது மனைவியும் மகளை எப்படியெல்லாம் வளர்த்தோம் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்பெண்ணிடம் ஏற்பட்ட மாற்றங்கள் எத்தகையவை என்றும் அவர் விவரிக்கிறார்.
முழுமையாகத் தனது மகளுடனான வாழ்வை அவர் சொல்லி முடிக்கையில், படமும் முடிவடைகிறது.
இத்திரைக்கதையில் முதியவராகப் பிரகாஷ் ராஜும், அவரிடம் கதை கேட்கும் மனிதராகப் பிருத்விராஜும் நடித்தனர். வெளித்தோற்றத்தில் இக்கதை வழமையான ‘அப்பா – மகள் பாசம்’ சம்பந்தப்பட்டதாகத் தெரிந்தாலும், வழக்கமான செண்டிமெண்டை கொட்டும் திரைப்படமாக இது இருக்காது.
சமூக, பொருளாதார வித்தியாசங்களைத் தாண்டி, சாதாரணமான ஒரு மனிதன் தனது பெண் குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு நோக்குகிறான் என்று சொன்னது இப்படம்.
அதேநேரத்தில், எந்த இடத்திலும் வறட்சியை உணராத அளவுக்கு இக்கதையில் நகைச்சுவையைப் புகுத்தித் திரைக்கதையைச் செதுக்கியிருந்தார் இயக்குனர். அதற்கேற்றவாறு, இதில் நிறைய சுவாரஸ்யமான பாத்திரங்களை இடம்பெறச் செய்திருந்தார்.
தனித்துவமான பாத்திரங்கள்!
‘தசாவதாரம்’ படத்தில் கமல் ஏற்ற சீக்கிய வேடம், சிவாஜி நடித்த பாரதவிலாஸ் போன்றவை தவிர்த்து தமிழில் வெளியான படங்களில் சீக்கியர்களை மையப்பாத்திரமாகக் காட்டியதே இல்லை என்று சொல்லலாம்.
இந்தக் கதையில் நாயகி த்ரிஷாவின் காதலராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் சீக்கிய இளைஞராகத் தோன்றியிருப்பார்.
மனோபாலா இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு தெரிந்த நபராக வந்து போயிருப்பார். நடைபயிற்சி மேற்கொள்பவரிடம் ‘என்ன வாக்கிங் போறீங்களா’ என்ற ரகத்தில் கேள்வி கேட்பது மட்டுமே அவருக்கான வசனங்களாக அமைந்திருந்தன.
படம் முழுக்க அவருக்கு எதிரில் வரும் நபராகவே மனோபாலா இடம்பிடித்திருந்தார். ஒவ்வொரு முறையும் அவருக்குப் பிரகாஷ் ராஜ் அளிக்கும் பதில் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்தும்.
பிரகாஷ்ராஜின் வீட்டுக்குப் பிச்சை கேட்டு வந்த குமரவேல் பாத்திரம், அந்த வீட்டில் ஒருவராக மாறும். சிறிது காலம் கழித்து, அவருக்குச் சீக்கியப் பெண்ணோடு திருமணமாவதாகக் கதை நகரும்.
மகளின் எல்கேஜி அட்மிஷனுக்காக பிரகாஷ்ராஜ் வரிசையில் காத்திருக்கும்போது, சாம்ஸ் அதே வரிசையில் வந்து நிற்பார்.
இருவருக்குமான உரையாடல், பள்ளிக் குழந்தைகளைப் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகங்களும் கையாளும் முறையைக் கிண்டலடிப்பதாக இருக்கும்.
இது போன்ற பாத்திர வார்ப்பும், பொதுப்பிரச்சனைகளைத் தனித்துவமாகத் திரையில் பிரதிபலித்த பாங்குமே ‘அபியும் நானும்’ படத்தை அன்றும் இன்றும் கொண்டாட வைக்கிறது.
இன்ஸ்பிரேஷனும் ரீமேக்கும்..!
1950ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘ஃபாதர் ஆஃப் தி பிரைடு’ என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து ஊக்கம் பெற்று, ‘அபியும் நானும்’ படத்தை ராதாமோகன் இயக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இது போன்ற சில தகவல்கள் வதந்திகளாக முதலில் உலாவி, பின்னர் அவை சம்பந்தப்பட்டவர்களால் நேரடியாகப் பகிரப்படும். ஆனால், இப்படம் குறித்து இயக்குனர் ராதாமோகன் எதுவும் சொன்னாரா என்று தெரியவில்லை.
அதேநேரத்தில், இந்த ஆங்கிலப் படத்தின் கதை தனது மகளை எப்படியெல்லாம் வளர்த்தேன் என்று ஒரு தந்தை சொல்வதையொட்டியே அமைந்துள்ளது.
பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷாவின் மார்கெட்டை கணக்கில் கொண்டு, இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது. 2008ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம், தெலுங்கில் ஆறு மாதங்கள் கழித்தே வெளியானது.
‘டப்பிங்’ படமாகத் தெரியாமல் இருக்க, பிருத்விராஜுக்குப் பதிலாக ஜகபதி பாபுவை நடிக்க வைத்து ‘ஆகாசமந்தா’ எனும் பெயரில் ரிலீஸ் ஆனது.
கன்னடத்தில் இதே கதையை ‘நானு நன்ன கனசு’ என்ற பெயரில் பிரகாஷ்ராஜே நடித்து இயக்கியிருந்தார்.
இந்தப் படம் வெளியாகும்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்ற போதிலும், நிச்சயமாகத் திரைக்கதை சுவையாக இருக்குமென்ற எண்ணம் ரசிகர்களிடம் மிகுந்திருந்தது.
காரணம், இயக்குநர் ராதாமோகன் அதற்கு முன்னதாக இயக்கிய ‘மொழி’ அனைத்து மொழி ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது.
எவ்வளவு கனமான விஷயத்தையும் எளிமையாக உணர்த்தும் வித்தை ராதாமோகனுக்குக் கைவரும் என்ற நம்பிக்கை அதன் பின்னே இருந்தது. அதனை அவரும் உணர்ந்து செயல்பட்டிருந்தார்.
ஒரு நல்ல கவிதையைத் திரும்பத் திரும்ப வாசித்து முடிப்பது போல, இப்போதும் தொலைக்காட்சியிலோ, ஓடிடியிலோ இதனைப் பார்த்து ரசிக்க முடியும் என்பதே இப்படத்தின் வெற்றி.
மீண்டும் த்ரிஷா!
ஒரு நடிகையாகத் த்ரிஷாவுக்குத் திருப்தி தரும் படங்களில் ’அபியும் நானும்’ படமும் ஒன்றாக இருக்கும் என்பது நிச்சயம். அதேநேரத்தில், அவரது ரசிகர்களின் ‘எவர்க்ரீன் ஹிட் லிஸ்டிலும்’ அது இடம்பிடிக்கும்.
இந்த ஆண்டில் மட்டும் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘தி ரோடு’, ‘லியோ’ என்று த்ரிஷா நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன.
அவற்றில் த்ரிஷாவின் நடிப்பையும் அழகையும் ரசிப்போருக்கு, கடந்த காலத்தில் அவர் சிறப்பாகத் தோன்றிய படங்கள் நினைவுக்கு வரும்.
அந்த வகையில், நமது முதல் சாய்ஸாக நிச்சயம் ‘அபியும் நானும்’ இருக்கும்.
பார்த்து முடித்தபிறகு, இப்போதும் அவரால் பள்ளி, கல்லூரி மாணவியாக நடிக்க முடியுமோ என்ற ஐயம் தோன்றும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அதனைத் திறம்படச் சாத்தியப்படுத்தும் என்ற போதிலும், அவற்றை நாடத் தேவையில்லாத அளவுக்கு ‘என்றும் மார்க்கண்டேயனி’யாக வலம் வருகிறார் த்ரிஷா.
அதுவே, இப்படம் வெளியாகிப் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன எனும் தகவலின் மீது ஆச்சர்யத்தை நிறைக்கிறது.
– உதய் பாடகலிங்கம்