டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினரும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான முனைவர். குமார் ராஜேந்திரன் வெளியிட்டிருக்கிற அறிக்கை.
சென்னையில் நேற்று (26.12.2023) கூடிய அதிமுக இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டிருப்பதற்கு புரட்சித் தலைவர் அவர்களின் கோடிக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் மக்கள் திலகத்தின் குடும்பத்தார் சார்பிலும் ஜானகி அம்மையார் குடும்பத்தார் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் பொன்மனச் செம்மலின் நிழலைப்போலவே அவருடன் இருந்து இறுதிவரை அவரைப் பாதுகாத்தவர்.
எப்போதும் தொண்டர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாரத ரத்னா விருது (1988) கிடைத்தபோது அதைப் பெற்றுக் கொண்ட பெருமைக்குரியவர் ஜானகி அம்மையார்.
மக்கள் திலகம் மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றவரும் அவர்தான்.
பிளவுபட்டிருந்த அதிமுக அணிகளை 1989-ல் ஒன்று சேர்த்த ஜானகி அம்மையார், புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுக் கொண்டுவந்தவர்.
அவருக்குச் சொந்தமான அலுவலகம் தான் தற்போதும் சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவின் தலைமைக் கழக அலுவலகமாக இயங்கி வருகிறது.
தன்னுடைய வாழ்நாளில் இறுதிவரை அதிமுக என்ற இயக்கத்தை பாதுகாத்த திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவருடைய நூற்றாண்டு தருணத்தில் விழா எடுக்க அதிமுக முன்வந்திருப்பது கூடுதல் சிறப்பு.
அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும்.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க அன்னை ஜானகி அம்மையார் அவர்களுக்கு விழா எடுக்கும் நேரத்தில் அவருடைய முழு திருவுருவச் சிலையை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நிறுவுவது அவருக்கும் பெருமை சேர்க்கும், மக்கள் திலகமும் ஜானகி அம்மையாரும் பாதுகாத்து வளர்த்த அதிமுக இயக்கத்திற்கும் பெருமை சேர்க்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.