கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு ஜேஎன் 1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும் ஜெஎன் 1 கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜே.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜே.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுவார்கள்.
புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.