நடைப் பயிற்சியால் கைவிட்ட புகைப்பழக்கம்!

– பேராசிரியர் அ. ராமசாமி

தினசரி காலையில் ஒருமணிநேரம் நடந்துவிடுவது என்று உறுதியுடன் நடந்து வருகிறேன்.

மெதுவாக ஆரம்பித்து, வேகம் பிடித்து நடந்து, கைகால்களை ஆட்டி, உட்கார்ந்து எழுந்து, குனிந்து, நிமிர்ந்து பயிற்சிகள் செய்துவிட்டால் அன்றைய பொழுது நன்றாகத்தான் இருக்கும்.

காலையில் நடக்கவில்லையென்றால், மாலையில் நடந்து விடுவது நல்லது.

எனது ’வாக்கிங்’ பழக்கத்தின் வரலாறை எழுதினால் அது ஒரு வேளை எனது ‘சுமோக்கிங்’ பழக்கத்தின் மறுதலையாக இருக்கக்கூடும்.

இவ்விரு பழக்கங்களில் காலத்தால் முந்தியது புகைப்பிடி பழக்கம்தான். கல்லூரி மாணவனாக இருந்ததற்கும் முன்பு, பள்ளியில் படித்தபோதே ஏற்பட்டுவிட்டது.

கண்டிப்பதற்கு யாரும் இல்லாத விடுதி வாழ்க்கையில் தொடங்கிய பழக்கம். கையில் காசு இருந்தால் பிடிப்பதும், இல்லையென்றால் விடுவதுமாகத் தொடர்ந்தது. ஆனால், ஆய்வு மாணவனாக ஆனபிறகு விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது.

‘இரவு கண்விழித்துப் படிப்பதற்கு உதவுவதாகவும், சிந்தனையைத் தூண்டுகிறேன் பேர்வழி’ என்று நம்பச் செய்தும் என்னுடன் நட்பாகிவிட்ட அந்த வெண்குழல் நண்பன் மிகநீண்டகாலம் வேண்டப்பட்ட விருந்தாளியாகவே இருந்தான்.

இந்த வேண்டப்பட்ட விருந்தாளியை வேண்டாத விருந்தாளியாக ஆக்க வந்தன சளியும் இருமலும்.

என்னைச் சிந்தனை உள்ள ஜந்துவாக ஆக்கியவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியே ஆகவேண்டும் என்றால் முதன்மையாகச் செலுத்தப்பட வேண்டிய கடன் இந்தச் சளிக்கும் இருமலுக்கும் தான்.

இவைதான் எனக்கு ‘உடல் வேறு; மனம் வேறு‘ என்ற அடிப்படைப் புரிதலை முதன்முதலில் உணர்த்தின. எனது மனதின் விருப்பமோ வகை வகையான சிகரெட்டுகள். ஆனால் உடலோ சளியோடும் இருமலோடும் கூடிப்புணர்ந்தது.

மனம் சிகரெட்டிடமிருந்து விடுதலை பெற்றால், உடலை விவாகரத்து செய்துவிட சளியும் இருமலும் தயாராக இருந்தன.

இரண்டும் விட்டுக் கொடுக்காமல் சண்டித்தனம் செய்தன. ஒரு வழியாக மனம் வெண் குழல் வேந்தனை விலக்கிவிட்டு நடையில் கவனம் செலுத்தியது.

என்றாலும் ஒரேயடியாக விலகிப் போய்விட்டது என்று சொல்ல முடியாதபடி வருவதும் போவதுமாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், அதற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது வார்சா வாழ்க்கை.

போன முதல்வாரத்திலேயே அங்கு கிடைத்த சிகரெட்டின் காரமும் எரிச்சலும் சேர்ந்து பெரும் அவதியாகிவிட்டது.

அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தில் எல்லா இடத்திலேயும் புகை பிடிக்க முடியாது. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் போய்தான் பிடிக்கவேண்டும்.

அங்கே போனால் என் வகுப்பில் படிக்கும் மாணவிகளும் மாணவர்களும் நின்று புகையை ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்போது விட்ட புகைப்பழக்கம் அங்கேயே போய்விட்டது.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment