தக்கோலம்: இன்னொரு ‘ஜெய்பீம்’ கிராமம்!

காலையில் எழுந்தால் வாகனங்களின் இரைச்சலும், மெட்ரோ, இரயில், பேருந்து ஆகியவற்றில் செல்லும் மக்கள் கூட்டங்களையும் அங்கு காண முடியாது.

வானளவான கட்டிடங்கள் அங்கு இல்லை. மண் தரையுடன் படர்ந்திருக்கும் சிறு குடிசைகளை தான் காண முடியும்.

நகரங்கள் போல் ஆரவாரத்துடன் வேலைக்கு செல்லும் மக்கள் அங்கில்லை என்று சொல்ல முடியாது. அங்குள்ள மக்களும் ஆரவாரமானவர்கள் தான்.

வெளியில் அலட்டிக் கொள்வதில்லை. சென்னையில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் காலையில் 7 மணியளவில் தூக்கத்திலிருந்து எழ வேண்டுமென்றால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வேலைக்குச் செல்ல காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழ வேண்டும்.

அம்மக்கள் நாள் முழுவதும் உழைப்பார்கள். போதுமான வருமானம் தான் கிடைப்பதில்லை.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ளது தக்கோல கிராமம்.

இங்கு இருளர் பழங்குடியினர் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலிகளாகவும், செங்கற்சூளையில் கல் அறுப்பவர்களாகவும் உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்றால் மட்டுமே இவர்கள் வீட்டில் குழம்பு சோறு, இல்லையென்றால் வெறும் கஞ்சி தான்.

தரையை ஒட்டிய குடிசைகள், சில அரசாங்க வீடுகளும் உள்ளன. பழங்குடியின மக்கள் சுத்தமாக இருக்கமாட்டார்கள் என்ற போலியான கருத்துகள் சமூகத்தில் வளம் வருகின்றன. இவை அனைத்தையும் உடைத்தெறியும் வகையில் அவர்கள் வாழ்க்கை உள்ளது.

ஒழுங்குமுறையான வீடுகள், சுத்தமான கழிவறைகள், நன்கு சுத்தப்படுத்தப்பட்ட பாத்திரங்கள் என்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.

யாருக்காவது திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் 2 கிலோமீட்டர் செல்ல வேண்டும். கல்விக்காக நெடுந்தூரம் நடக்க வேண்டும். ஆனால் அங்குள்ள மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் வாகனங்கள் இருப்பதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை.

இவர்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக அவர்களின் குல தெய்வம் கன்னியம்மாவை வணங்குகின்றனர்.

பாவம் பழங்குடியினர் மக்களின் தெய்வம் கூட ஏழையாக இருக்கிறது. மேல் தளமற்ற சிமெண்ட் கோவிலில் மஞ்சள் பூசப்பட்ட செங்கற்களே அப்பகுதி மக்களின் கன்னியம்மன். வருடந்தவறாமல் பொங்கல் வைத்து விமர்சையாக திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கன்னியம்மாவிடம் இருப்பதாக எண்ணுவதால் என்னவோ அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கை நிலமைக்கு பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளதை அவர்களால் உணரமுடியவில்லை.

அவர்களின் நிலைக்கு காரணம் விதி என்றே நம்பவைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மக்களுக்கு அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் இருப்பது தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கலைஞர் கட்சி மட்டும் தான்.

அந்தப்பகுதியில் வாழும் சந்திரன் என்பவருக்கு சமீபத்தில் பாம்பு கடித்துள்ளது. அவரை அந்த ஊர்த் தலைவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அடிப்படை தேவைகள் கூட செய்து தர கட்சித் தலைவரிடம் கோரிக்கை வைக்காமல், என்னைத் தொட்டுத் தூக்கிட்டுப் போனாரு என்று பெருமையாக எண்ணுகிறார் சந்திரன்.

தன்னை ஒருவர் தொடுவதே அவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதென்றால் சமூகத்தால் பழங்குடி மக்கள் எந்தளவு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர முடியும்.

மக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு பெண்ணின் கழுத்தில் தங்கத்துடன் கருப்பு மணி ஒன்றை காண முடிந்தது.

அவரிடம் அந்த மணி குறித்து வினவியபோது பெண், “இதற்கு பெயர் தான் கின்னம்பொட்டு. நிச்சயம் செய்த அனைத்துப் பெண்கள் கழுத்திலும் கின்னம்பொட்டை பார்க்க முடியும்.

இதனை, நிச்சயம் செய்தவர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அந்தப் பெண் கழுத்தில் கட்டிய பிறகு, அவர் அந்த வீட்டிற்கு சொந்தமான மருமகளாகிவிடுவார். வேறொரு பையன் வீட்டிலிருந்து பெண் கேட்க முடியாது” என்றார்.

அவர் கழுத்தைத் தவிர வேறு யார் கழுத்திலும் இந்த மணி இல்லையே என்ற சந்தேகம் எழுந்தது.

விசாரித்த போது மற்றவர்கள் ஏழ்மை காரணமாக அடகு வைத்துள்ளது தெரியவந்தது. அவர்களின் சிறிதளவு சேமிப்பான அந்த தங்கத்தை கூட வறுமை சாப்பிட்டுவிட்டது.

நிராகரிப்பு தந்த வலி:

’15 வருசத்துக்கு முன்னால, நாங்க எலி சாப்பிடுறோம், எங்க மேல நாத்தம் அடிக்குதுனு சொல்லி எங்கள மனுசங்களா கூட மதிக்கல. சுனாமி வந்து எங்க கூரையெல்லாம் பிச்சுக்கிட்டு போயிருச்சுனு’ பேச ஆரம்பித்தார் சந்திரா.

சுனாமினால எங்களுக்கு வேலை இல்ல, சாப்பிடுறதுக்கும் சாப்பாடு இல்ல. குழந்தைகள மழையில இருந்து பாதுகாக்க முடியல. எங்களுக்கு தங்குறதுக்கு இடம் இல்ல.

இங்க இருந்து ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளிக் கூடம் இருந்துச்சு. கொஞ்ச நாள் இங்க தங்கிக்கிறோம்னு அப்ப இருந்த தலைமை ஆசிரியரிடம் கெஞ்சிப் பார்த்தோம்.

ஆனா, அவரு எங்க மேல நாத்தம் அடிக்கும், நாங்க சுத்தமா இருக்க மாட்டோம், பிள்ளைங்க படிக்கிற இடம்னு  ஏதேதோ காரணம் சொல்லி இடம் கொடுக்கல.

நாங்க என்ன பன்றதுனு தெரியாம காஞ்சு போன எல தழையெல்லாம் சேர்த்து அது மேல பிள்ளைகல கையில வச்சுக்கிட்டு மழையில நனைஞ்சிட்டே இருந்தோம்.

சமூக செயற்பாட்டாளர் பாத்திமா உதவியுடன் எங்களுக்கு அரிசி பருப்பெல்லாம் கிடைச்சுது. வீடு வேண்டி தொடர்ந்து மனு கொடுத்து வர, ஒரு வழியா அரசாங்கம் வீடு கட்டித் தரத் தொடங்கியது” என்றார்.

அதான் வீடு கட்டிக்கொடுத்தாச்சு வேற என்ன பிரச்சனை அவர்களுக்கு இருக்க போகுதுனு நினைக்க முடியாது.

அந்தக் குடியிருப்பில் இருந்து பள்ளிக்கு போக வேண்டுமென்றால் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். மருத்துவமனையும் வெகு தொலைவில் உள்ளது.

இங்குள்ள மக்கள் விவசாயக் கூலியாக உள்ளனர். காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை உழைத்தால் 150 ரூபாய் தான் கூலி கிடைக்கும். இந்த கூலி சாப்பாட்டுக்கே போதுமானதில்லை. இதுல அந்தப் பகுதிக்கு பொதுப் போக்குவரத்து வசதி இல்லை.

இந்த தக்கோலம் கிராமத்தில் அடிப்படை வாழ்வாதாரமே பிரச்சனையாக இருப்பதை நாகம்மா நம்மிடம் எடுத்துரைத்தார்.

”எங்க வீட்டுல உள்ள ஆம்புளைங்களும் பொம்புளைங்களும் வேலைக்கு போறோம். ஆனா வாங்குற கூலிக்கு சேமிப்பும் இல்ல. ஏன் நல்லதா சாப்பிட கூட முடியலை.

வீட்டுல உள்ளவங்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை கறியும் மீனும் வாங்குவோம் அது கால் கிலோ தான் வாங்குறோம்.

எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு பத்தலனாலும் அதிகமா வாங்குறதுக்கு எங்களிடம் காசு இல்லை“.

பருவக் காலங்களில் மட்டும் தான் விவசாய வேலை இருக்கும். மற்ற நாட்களில் இவர்கள் செங்கற்சூளையை நம்பி தான் வாழ்கிறார்கள்.

அவ்வப்போது அவசரத் தேவைகளுக்காக முன்பணம் வாங்குவதால் சம்பளம் குறைவாகத் தான் கிடைக்குறதாகவும் வருத்தப்பட்டனர் அம்மக்கள்.

விவசாய நிலங்களில் வேலை பார்த்தாலும், செங்கற்சூளையில் வேலை பார்த்தாலும் இவர்களுக்கு வருகைப் பதிவேடு இல்லை. குறைந்தபட்சக் கூலி. இப்பகுதி மக்கள் வலுவான இயக்கக் கட்டமைப்புக்குள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

இக்குடியிருப்பு மக்கள் சாதியின் அடிப்படையிலும், வர்க்கத்தின் அடிப்படையிலும் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள். நம் நிலத்தின் பூர்வகுடிகள் உரிமைகளற்று தவித்துக் கொண்டிருக்கும் நாட்டை ஜனநாயக அரசு என்று கூறுவது முறையாகுமா?

– கு.சௌமியா

Comments (0)
Add Comment