மாந்தர் மனதில் சேலைக்கு எப்போதும் இடமுண்டு!

பெண்கள் அணிவதற்கென்று எத்தனையோ ஆடைகள் வந்தாலும், இருபதைத் தொட்டபிறகு அவர்கள் சேலை அணிகிறார்களா என்று கவனிக்கும் வழக்கம் இன்றும் உயிர்ப்போடு இருந்து வருகிறது.

வெறுமனே அழகியல் சார்ந்த பார்வையாக மட்டுமல்லாமல், அதில் கலாசாரத்தையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தும் அம்சங்களும் கலப்பதுண்டு.

பெண்மையைப் பாந்தமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அது நோக்கப்படுவதுண்டு. இன்னும் பல நேர்மறையான அம்சங்களைத் தாண்டி, ஆபாச நோக்கிலும் பார்க்கப்படுவது உண்டு.

அத்தனையும் தாண்டி, மாந்தர் மனதில் சேலைக்கு எப்போதும் இடமுண்டு என்பதை மறுக்க முடியாது.

வெளியுலகில் வசதியைத் தரும் உடை, விழாக்களின் தன்மைக்கேற்ற உடை, பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கான உடை என இன்றைய பெண்கள் வகை பிரித்து அணியத் தொடங்கிவிட்டதால், சேலையை இன்னென்ன நாட்களில் கட்டினால் போதுமென்று அட்டவணையும் இட்டு வைத்திருக்கின்றனர். அதில் வயது பேதம் ஏதுமில்லை.

சரி, சேலை கட்டுவதென்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அதைத் தனியே விவாதிப்பது அவசியமா? ஆனால், இந்த விஷயத்தில் மூன்றாம் நபர்கள் கருத்து சொல்வதென்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.

சேலைப் புழக்கம்!

எப்போது முதல் சேலை கட்டும் வழக்கம் இருந்து வருகிறது? இந்த கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். தோராயமாக, கி.மு. 50 அல்லது 100ஆம் ஆண்டில் இருந்தே சேலை புழக்கத்தில் இருந்ததாகச் சொல்கின்றன சில இணையதளங்கள்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வழக்கம் இருந்ததாகச் சொல்கின்றனர் சிலர். கிரேக்க நாகரிகத்தின் தாக்கத்தில் சேலை எனும் ஆடை நம்முடன் கலந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

வட இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் சிற்பத்தில் சேலை அணிந்த பெண்ணின் தோற்றம் உள்ளது.

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா குகை ஓவியங்களில் சேலை எனும் ஆடையைப் பார்க்க முடிகிறது.

அப்படிப் பார்த்தால், வெவ்வேறு வடிவங்களில் அந்த வழக்கம் நம்மிடையே கலந்து நிற்பதாகக் கருத வேண்டியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே, இன்றும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகச் சேலை அணியும் வழக்கம் நோக்கப்படுகிறது.

இனப்பெருக்க உறுப்புகளை மறைக்கும் நோக்கில், ஒரு முழு நீளச் செவ்வகத் துணியைப் போர்த்திக் கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

அதனால், துணியைப் பயன்படுத்தும் அளவுக்கான நாகரிகம் முகிழ்த்த காலத்தில் இவ்வழக்கமும் வேரூன்றியிருக்க முடியும் என்பதே சரியானதாக இருக்கும்.

இன்றைய நிலை!

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் நைட்டியோ, சுடிதாரோ அணிந்த பெண்களை வித்தியாசமாக நோக்கும் வழக்கமிருந்தது. அதிலும், வயதில் மூத்த பெண்கள் அவற்றை அணிந்தால் ஊரே வேடிக்கை பார்க்கும்.

இன்று, அது சுத்தமாக இல்லை. கிராமங்களில் சிறுவர்கள் எந்நேரமும் பேண்ட் அணிந்து திரிவது போல, சுரிதார் அல்லது சல்வார் கமீஸ் அல்லது நைட்டி அணிந்துகொண்டு பேண்ட் போட்டுக்கொள்வது பெண்களுக்கு வசதியை வழங்குகிறது.

ஆதலால், சேலை அணிவதென்பதே திருவிழா சமயங்களில்தான் என்றாகிவிட்டது.

வீட்டில் இருக்கும் நேரத்தில் சேலை அணியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

புதியதொரு ஆடையை அணியும் விருப்பமே, தினசரி வாழ்வில் இருந்து சேலையை விலக்குவதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது.

வேகமான வாழ்க்கைச் சூழலில், அந்த உடை வசதிகரமானதாக இல்லை என்பதே அதற்கான பதிலாக இருக்கிறது. அதனை ஏற்க வேண்டியிருக்கிறது.

அதேநேரத்தில், ஏதேனும் ஒரு சிறப்பான தருணம் என்றால் சேலை அணிவது என்ற எண்ணத்தில் எந்தப் பழுதும் ஏற்படவில்லை. அதை நம்பியே சேலை விற்பனை இன்றும் தொடர்ந்து வருகிறது.

யாருக்குத் தேவை!

எங்கும் எதிலும் மேற்கத்திய மோகம் என்பது நிச்சயம் பலனளிக்காது. ஆண், பெண் சமத்துவம் உட்படப் பல அம்சங்களில் ஆடை குறித்த வரையறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே சேலை அணிவது புறந்தள்ளப்பட்டது.

கடந்த தலைமுறையில் அந்த வரையறைகள் பெண்களின் பொதுவாழ்வை ஆட்டம் காண வைத்தது போலவே, இன்று அதனை உடைக்கும் கருத்துகள் அவர்களது தனிப்பட்ட வாழ்வைக் குறிப்பிட்ட வகையில் சேதப்படுத்தி வருகின்றன.

நமது முன்னோர்கள் சேலை அணிந்திருந்தனர் என்பதற்காகவே, தொன்றுதொட்டு அந்த வழக்கத்தின் மீது புனிதத் தன்மையை ஏற்றி வைக்க முடியாது.

அதேநேரத்தில், அது கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட ஆடை என்பதையும் மறுக்க முடியாது.

இன்றைய சூழலில், அந்த கவர்ச்சி இழப்பு என்பதே தம்பதிகளுக்குள் புரிதலின்மையும் சச்சரவுகளும் பெருக வழி வகுக்கிறது. அதுவே, தெருவுக்குத் தெரு கருத்தரித்தல் ஆலோசனை மையங்கள் அதிகரிக்கவும் வகை செய்திருக்கிறது.

நிச்சயமாக, அப்பிரச்சனைக்குத் தீர்வு காண சேலை ஒரு அருமருந்தாக அமையும். ஏன், ஆண்கள் வேட்டி கட்டுவது தீர்வாகாதா என்பவர்கள், அதையும் முயற்சித்துப் பார்க்கலாம்.

குறைந்தபட்சமாக, குழந்தைப்பேறினை விரும்பும் தம்பதிகள் தங்களது படுக்கையறையில் இந்த பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளலாம். கேட்கக் கிண்டலாகத் தெரிந்தாலும் இதனால் பலன் கிடைத்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

இந்த யோசனையும் கூட, என் மூளையில் உதித்தது கிடையாது. பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வார இதழில் வெளியான சிறுகதையின் தாக்கத்தில் விளைந்தது தான் இது.

அப்படிப் பார்த்தால், சேலையைக் காதலை விதைக்கும் ஆடையாகக் கருத முடியும்.

சேலை கட்டிய சோலை!

சிறு வயதில் சேலை என்று சொல்வதற்குப் பதிலாக, ஒருமுறை வாய் தவறி சோலை என்று சொல்லிவிட்டேன்.

அது அறிவியல்ரீதியாக எப்படிப்பட்ட பிரச்சனை என்று யோசிப்பதற்கு முன்னரே, இது போலத் தமிழ் திரையுலகில் பல பாடலாசிரியர்கள் சிந்தித்தது தெரிய வந்தது.

கிட்டத்தட்ட சேலையை வைத்தே எண்ணற்ற பாடல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.

‘சேலையில வீடு கட்டவா..’, ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’, ‘சிங்கப்பூர் சேலை என் செவத்த பொண்ணு மேல..’, ‘சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ மேல’, ‘நீலச்சேலை பறக்கையிலே..’, ‘தாழம்பூ சேலை மாமா என் மேல’, ‘காஞ்சிப்பட்டு சேலை கட்டி’, ‘கண்ணா என் சேலைக்குள்ள..’,

‘நீ கட்டும் சேலை மடிப்புல’, ‘பஞ்சு மிட்டாய் சீலை கட்டி’, ‘ஜலக்கு ஜலக்கு சரிகை சேலை..’, ’ஜலக்கு ஜலக்கு சேலை அதை கட்டிக்கிட்டாலே’, ‘செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே’, ‘கல்யாண சேலை உனதாகும் நாளை’, ‘முந்தானை சேலை முட்டுதா ஆளை’, ‘மஞ்ச சேலை மந்தாகினி’ என்று அந்த பட்டியலை எடுத்தால் நீண்டுகொண்டே செல்லும்.

அறுபதுகளில் பார்த்தால், ‘பட்டு சேலை காத்தாட’ என்று எம்ஜிஆர் சரோஜா தேவியைப் பார்த்து பாடியிருக்கிறார்.

மகிழ்ச்சித் தருணங்கள் மட்டுமல்ல, ஊடல் அல்லது ஏக்கத்தின் அடையாளமாகவும் சேலையைக் கருதியிருக்கின்றனர் நமது கவிஞர்கள். ’எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை’ பாடல் அதற்கான உதாரணம்.

இந்த பாடல்களை எல்லாம் கேட்டால், சேலை எத்தகைய செல்வாக்கைக் கவிஞர்கள் மனதில் செலுத்தியது என்பதை அறியலாம்.

உலக சேலை தினம்:

இப்போது எதற்கு சேலை குறித்து இவ்வளவு பெரிய புராணம் என்கிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம்..!

டிசம்பர் 22-ம் தேதியன்று ‘உலக சேலை தினம்’ கொண்டாடப்படுகிறது. அது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறதா என்று கேட்கக்கூடாது.

இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகளில் சேலை கட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

’47 நாட்கள்’ படத்தில் பிரான்ஸில் சேலை அணியும் வழக்கம் இருப்பதாக, கே.பாலச்சந்தர் காட்டியிருப்பார்.

ஆதலால், ஜவுளிக் கடைகளின் வணிக நோக்கம் தவிர்த்து அத்தினத்தைக் கொண்டாடுவதற்கான அத்தனை காரண காரியங்களும் நம் முன்னே இருக்கின்றன.

சேலையை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாக நோக்குபவர்கள் இன்று அதிகரித்து விட்டனர். அதுதான் நமது பெண்களின் கண்ணியம் காக்கும் என்று பழமைவாதத்தைத் தாங்குபவர்களும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனர்.

இவ்விரண்டு தரப்புக்குமிடையே, ‘எனக்குப் பிடித்த ஆடையை அணிவேன் அல்லது அணிய வைத்து மகிழ்வேன்’ என்று சொல்வோருமுண்டு.

அவர்கள் சேலையின் பெருமையைத் தங்களுக்குத் தாங்களே நினைவூட்டிக்கொள்ள சில நாட்கள் வாய்க்கும்.

அப்படியொரு தருணமாகவே, இந்த ‘உலக சேலை தின’த்தை நோக்க வேண்டியிருக்கிறது?

எவர் கண்டார்? உலக அரங்கில் அதிகரித்துவரும் இந்தியாவின் செல்வாக்கினால், இன்னும் சில ஆண்டுகளில் உண்மையிலேயே உலகம் முழுக்க ‘உலக சேலை தினம்’ கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அது நிகழும்போது, நமது பாரம்பரியத்தைப் பரப்புதல் எனும் நோக்கத்தைத் தாண்டி வர்த்தக விரிவாக்கமே மூலக்காரணமாக அமையக் கூடும்.

அவ்வாறு நிகழ்ந்தால், சேலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அந்த மகிழ்ச்சிக்கு வித்திடும் வகையில் நாமும் இத்தினத்தை இனிதே கொண்டாடலாம்..!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment