மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆர் ஜெ, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியைக் கொண்டவர் மணிகண்டன்.
அவர் வசனம் எழுதியது, திரைக்கதையில் பங்குபெற்றது எல்லாம் அவராக வெளியில் சொல்லித்தான் தெரிந்தது.
துணை நடிகராக ஒரு காட்சியில் வந்து போகும் இடத்தில் இருந்து, ஒரு முழுப் படத்தில் நாயகனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.
ஆனாலும் திரைத்துறையில் விடாப்பிடியாக முயற்சித்து தனக்கென்று ஒரு இடத்தை அடைய பெரும் உழைப்பை கொடுக்கிறார் என்பது தெரிகிறது.
முதலில் ஒரு நடிகராக மக்களால் அறியப்பட்டு, பிறகு “அந்த கேரக்டர்ல நல்லா நடிச்சுருக்காம்பா” என்று சர்டிபிகேட் வாங்குவது ஒரு வகை.
ஆனால் அவர் நடித்த கேரக்டர் வழியாகவே “யார்ரா இவன்” என்று தேட வைப்பது இன்னொரு வகை.
வெகுஜன மக்களுக்கு மணிகண்டன் இரண்டாவது வழியில் தான் அறிமுகமானார். ஜெய்பீம் படத்தில் ராஜாகண்ணு கேரக்டராக அவர் வாழ்ந்திருந்தார்.
யூட்யூப் புண்ணியத்தில் அவர் அளித்த பேட்டியின் மூலமாக அவரது திறமை இன்னும் பளிச்சிட்டது. டெல்லி கணேஷ் குரலில் அவர் பேசிய காணொளி வைரல் மெட்டீரியல்.
அதே போல வெவ்வேறு காலகட்டங்களில் ரகுவரனின் குரல் எப்படி இருந்தது என வேறுபாடுகளை காட்டுவது, பொல்லாதவன் கிஷோர் வாய்ஸ், என மனிதர் மிரட்டி இருப்பார்.
“ப்ப்பா என்னா டேலண்ட்ரா” இவனுக்கு என்று வியந்து பார்க்க ஆரம்பித்தனர். இவன் நம்மாளுப்பா என்று அவரை பிடித்துவிட்டது.
இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘குட்நைட்’ படத்தின் வெற்றிக்கு டிஜிட்டல் மீடியாவில் மணிகண்டனுக்கு கிடைத்த புகழ் வெளிச்சமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
மிக இயல்பான மனிதராகவும் இருக்கிறார். மத்தகம் சீரியலைப் பொறுத்தவரை அவருடைய பார்ட்டை அவர் சரியாக செய்திருந்தார்.
அவரது அடுத்த ப்ராஜக்ட்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.
‘நரை எழுதும் சுயசரிதம்’ என ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
அதில் டெல்லி கணேஷுடன் நடித்தபோது தான், அவருடைய குரலை நுணுக்கமாக மிமிக்ரி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது போலும்.
திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வரும் எந்த ஒரு பாதைக்கும் அவர் தயாராக இருந்தால் உயரம் நிச்சயம்.
திரைத்துறையில் பல்துறை வித்தகராக நம்பிக்கை அளிக்கும் மணிகண்டனுக்கு வாழ்த்துகள். 2024-ம் வருடம் நம்மை இன்னும் ஆச்சரியப்படுத்தட்டும்.
– நன்றி: முகநூல்பதிவு