தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!

– சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது.

அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல் முதலாமாண்டு பயின்று கொண்டிருந்தேன். அடுத்த நாள் பருவத் தேர்வு.

வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது, தாமிரபரணியின் கொடிய வெள்ளச் செய்தி குறித்து கேள்விப்பட்டு கொட்டும் மழையில் சைக்கிள் மிதித்து கொக்கிரகுளம் போனேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் அப்போது திருநெல்வேலி ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்தது.

வண்ணார்ப் பேட்டை தீப்பாச்சியம்மன் கோவில் முன்பிருந்தே தாமிரபரணியின் தண்ணீர்த் தாண்டவத்தின் கொடூரத்தைக் கண்டோம்.

இரு அணைகள் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டதன் விளைவு நெல்லை அறிவியல் மையம் தண்ணீருக்குள் இருந்தது.

அதற்கு எதிரே இருந்த SBI வங்கியின் கீழ் இருந்த அப்பல்லோ சலேன் தொழிற்சாலையைத் தாமிரபரணி அடித்து துவம்சம் செய்திருந்தது.

வண்ணார்ப்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில் தண்ணீருக்குள் போய் பேராச்சியம்மன் கோவில் மேற்படியைத் தாமிரபரணி தொட்டிருந்தாள். சுலோசன முதலியார் பாலம் தாண்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

பாலத்தின் மீது நின்று தாமிரபரணியைப் பார்க்க காவல்துறை அனுமதிக்கவில்லை. பல்கலைக்கழக வினாத் தாள்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் தண்ணீரில் மிதந்தது. பேரின்ப விலாஸ் திரையரங்கில் தண்ணீர் புகுந்து இருக்கைகள் சேறும் சகதியுமாய் மாறின.

பாபநாசம் பகுதியின் மக்கள் வசிப்பிடத்தில் வீடுகளுக்குள் இரவு நேரம் தாமிரபரணி வெள்ளம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த எட்டு பேர் ஜலசமாதி ஆனதில் துடித்துப் போனோம்.

அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, மேலப்பாளையம், சிந்துபூந்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் என்று தாமிரபரணி செல்லும் பாதை முழுக்க கோரத் தாண்டவத்தின் ஓலங்கள்.

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக டிப்போவின் சுவரை உடைத்து நூற்றுக்கணக்கான டயர்களை வெள்ளம் அடித்துச் சென்றது.

வயிறு உப்பிய மாடுகள், ஆடுகள், நாய்கள் நூற்றுக்கணக்கில் ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டில் தேங்கிக் கிடந்த காட்சி நெஞ்சை உலுக்கியது.

 நன்றி: தாமிரபரணி களஞ்சியம் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment