சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடபகுதியில் பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் கொடுத்து முடிப்பதற்குள் தமிழகத்தின் தென் பகுதியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பெரும் சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.
வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து பலரைப் பதற வைத்திருக்கிறது. பாதுகாப்பு குறித்த பயம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்தே துண்டிக்கப்பட்டு இதுவரை காணாத சேதத்தைத் தென் தமிழக மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.
தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் தான் இந்த இயற்கைப் பேரிடருக்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
நீர்நிலைகளை எல்லாம் ரியல் எஸ்டேட்களாக மாற்றிவிட்டதின் விளைவைப் பலரும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நீர் மேலாண்மை குறித்துச் சீரியஸாக யோசிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது அண்மைக்காலத்திய இயற்கைப் பேரிடர்.
எதெல்லாம் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ, அவை எல்லாம் சந்தேகத்தை உண்டாக்கியிருக்கின்றன.
இயற்கைச் சூழலை நம் தேவைக்காக நாம் சீர்குலைக்கும்போது அது பதிலுக்குக் காட்டும் எதிர்வினை எதிர்பாராத விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த மழைச் சூழலில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
எதிர்பாராத இந்தப் பெருமழையின் பின்விளைவுகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் நாம் இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் விதவிதமான காய்ச்சல்கள் ஏற்கனவே பரவிக் கொண்டிருக்கின்றன. டெங்குவின் பாதிப்பும் இருக்கிற நிலையில், அண்மையில் உள்ள கேரளாவில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கேரள அரசு வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மழைக்காலத் தருணத்தில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது நினைவில் இருக்கலாம்.
அதைத் தொடர்ந்து தான் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவ ஆரம்பித்துப் பலர் பாதிக்கப்பட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும் கொரோனா பரவிய பிறகு தற்போது மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்திருக்கிறது.
சபரிமலைக்குத் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்கள் அதிகப்பட்டிருக்கும் நேரத்தில் இப்படியொரு கொரோனாப் பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டியிருக்கிறது.
பக்தர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த கவனத்துடனும் இருந்தாக வேண்டியிருக்கிறது.
குறிப்பாக சமீபத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் கவனத்துடன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
முகக்கவசம், போதுமான இடைவெளி போன்றவற்றில் நமக்குக் கவனம் தேவை.
அரசும், நாமும் எச்சரிக்கையாக இருப்போம்.
– அகில் அரவிந்தன்