உண்மை உங்களிடமே இருக்கிறது!

கவிதை:

“அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று
பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக்
கூவிக் கொண்டிருந்தான்.
“யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன்.
‘உண்மை’ என்றான்.
“கடைத்தெருவில் அது அனாதையாக
அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம் கண்டு கொள்ளவில்லை’’ என்று கூறினான்.
‘ஏன்?’ என்று கேட்டேன்.
“நெற்றியில் திருநீறு இல்லை, நாமமும் இல்லை.
மார்பில் சிலுவை இல்லை, தலையில் தொப்பியும்
இல்லை. அதனால் யாருமே அதை அடையாளம்
கண்டு கொள்ளவில்லை’’ என்றான்.
“நீ மட்டும் எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்?’’
என்று கேட்டேன்.
“யாருமே அடையாளம் கண்டு கொள்ளாததிலிருந்து அதை நான் அடையாளம் கண்டு கொண்டேன்.
மேலும் அதன் கண்டம் விஷத்தால் கறுத்திருந்தது.
தூக்குக் கயிற்றை மாலையாகச் சூடியிருந்தது.
சிலுவைக் காயத்தையும், குண்டுக் காயத்தையும் பதக்கங்களாக அணிந்திருந்தது.
அதனால் அடையாளம் கண்டு கொண்டேன்’’ என்றான்.
அவன் மேலும் சொன்னான்.
உண்மைக்கு ஒரே முகம் என்று நினைப்பதால் தான்
சர்ச்சைகள் பிறக்கின்றன.
ஒரு முகத்தைக் காண்பவன் மதவாதியாகிறான்.
பல முகங்களைக் காண்பவன் ஞானியாகிறான்.
பொய்யும் உண்மையின் ஒரு முகமே.
மாறு வேஷ முகம்.
அதிகமான முத்தங்கள் அதற்கே கிடைக்கின்றன.
ஏனெனில் அதன் உதடுகளில் பால் கவர்ச்சி இருக்கிறது.
உண்மையை விளக்குகளால் தேடாதீர்கள். ஏனெனில்
உண்மை விளக்காக இருக்கிறது.
உண்மையைப் பூக்களில் மட்டும் தேடாதீர்கள்,
ஏனெனில் உண்மை முள்ளாகவும் இருக்கிறது.
உண்மையைத் தேடாதீர்கள், ஏனெனில் அது
உங்களிடமே இருக்கிறது.
உண்மையைக் கடவுள் என்றேன், பல பேர்
நாத்திகர்கள் ஆகிவிட்டார்கள்.
உண்மைக்குத் தாலிகட்டுவது தான் திருமணம்
என்றேன். பல பேர் சன்னியாசிகள் ஆகிவிட்டார்கள்.
உண்மைகளைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள்.
அது உண்மைக்கு நீங்கள் கட்டும் கப்பமாகும்.
உண்மையையும் விளக்கைப் போலவே பயன்படுத்துங்கள்.
அதில் ஏற்றும் நேரமும்,
அணைக்கும் நேரமும் உண்டு.’’
*
‘பித்தன்’ என்கிற தலைப்பில் கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய கவித் தொடரில் ஒருபகுதி.

Comments (0)
Add Comment