அறிமுக இயக்குநர் யஸ்வந்த் கிஷோர் இயக்கிய ‘கண்ணகி’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 15 தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது.
அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார், அதுவும் கண்ணகி என்ற பெயரில் இயக்கியுள்ளார், வழக்கமாக பெண்ணை சுரண்டக் கூடிய கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பாணியில், பெண்கள் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் பாருங்களேன் போன்ற பாணியில் இருக்கும் என்று எதிர்பார்த்து படம் பார்க்கச் சென்ற எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
ஒரு ஆணால் எப்படி இவ்வளவு அழகாக பெண்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்த முடிந்தது என்ற கேள்வியுடன் படம் முடிந்த பிறகு திரையரங்கிலிருந்து வெளியே வந்தேன்.
நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்தப் படம் ஏராளமான பெண்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறது.
திருமணத்திற்காக காத்திருக்கும் பெண், விவாகரத்திலிருந்து தப்பிக்க துடிக்கும் பெண், திருமணத்தை நிராகரிக்கும் பெண், திருமணத்திற்கு முன் கருவுற்ற பெண் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை முன்னிருத்தி படம் தொடங்குகிறது.
குடும்பமும் சமூகமும் பெண்களை உடலளவிலும், மனதளவிலும் எவ்வாறெல்லாம் தினந்தினம் சுரண்டுகிறது என்பதை பார்வையாளர் கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர்.
ஒரு திரைப்படமானது பிரபலமான நடிகர் நடித்திருக்க வேண்டும், கண்ணைக் கவரும் வகையில் நடனம், காமெடி போன்றவை இருந்தால் மட்டுமே அதனை நல்ல திரைப்படமாக அங்கீகரிக்கும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இது மிகவும் தவறான சிந்தனை.
இப்படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்காமல் இருக்கலாம். காமெடி, ஆக்சன் போன்றவை பெரியளவில் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், மனிதர்களின் உணர்வுகளை வார்த்தைகள் கூட இல்லாமல் உடல்மொழியால் கடத்தும் காட்சி அமைத்து தலைசிறந்த படமாக கண்ணகி உருவாகியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்கயிருக்க, மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண் மூளையில் அழுதுகொண்டிருக்கிறாள்.
அவளைக் காணவில்லையென்று தேடும் தாய், அவளைக் கண்டதும் எதுவும் கேட்காமலேயே புரிந்துகொண்டார்.
’மாதவிடாய் வந்துவிட்டது அம்மா. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்று மகள் தன் இயலாமையை வார்த்தைகளின்றி தாயிடம் முகபாவனைகளால் மட்டும் உணர்த்தும் காட்சி பாராட்டுக்குரியது.
பெண் என்பவள் திருமணத்திற்கான பண்டமாகவே குடும்பத்தால் வளர்த்தெடுக்கப்படுகிறாள்.
பெண்களை மையப்பத்தும் கற்பு என்னும் கட்டுப்பாடு சாதி, மதத்தையும் ஆணாதிக்கம் மற்றும் வர்க்கச் சுரண்டலையும் பாதுகாக்க பிண்ணப்பட்ட வலை என்பதை கண்ணகி சுட்டிக் காட்டுவதுடன், மானம், கௌரவம் போன்றவை பெண்ணை பலவகையில் காயப்படுத்துகிறது என்பதையும் படம் காட்சிப்படுத்தியுள்ளது.
படத்தின் வசனங்கள் ஆழமானதாகவும், அழுத்தமானதாகவும் உள்ளன. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று காலங்காலமாக சொல்லப்படும் பண்பாடு, காதல் மற்றும் இல்லற வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள பெண் மட்டுமே போராட வேண்டும் என்கிறது.
ஆனால் ’ஒருத்தருக்கு ஒருத்தராக புரிதலுடன் காதல் வாழ்க்கையில் இணைந்திருப்போம்’ என்னும் வசனம் பாலின சமத்துவம் கொண்ட காதல் உறவை உயர்த்திப் பிடிக்கிறது.
ஆணாதிக்கமும் சாதி, மதமும் பெண்களுக்கு எதிரான கருத்தியலாக இருந்தாலும் அறியாமையால் அவற்றை பெண்களே தூக்கிச் சுமக்கிறார்கள் என்பதையும் படம் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்ணுக்கு திருமணமும், குழந்தை பெறுதலும் மட்டுமே வாழ்நாள் லட்சியமாக இருக்க வேண்டும். அவையே பெண்ணுக்கு அங்கீகாராம் அளிக்கிறது போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக கண்ணகி விளங்கியுள்ளது.
இத்தனை ஆழமான கருத்துடைய படத்தை இயக்கியவருக்கு இது தான் முதல் படம் என்பது தான் ஆச்சரியம். படத்தின் இயக்குனர் கொள்கை மீதான தீவிர பற்றும் ஆழமான வாசிப்பு பழக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.
பெண்களின் நுணுக்கமான உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் படத்திற்கு மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்பது தான் வருத்தம்.
பெண்களின் பிரச்சனைகளை பொதுப் பிரச்சனையாகக் கருதாததால் என்னவோ வரவேற்பு குறைந்திருக்கலாம்.
முதல் படத்தைப் பெண்களுக்காக இயக்கிய இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் அனைத்துப் பெண்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.
– கு.சௌமியா