புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி, புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளைப் பார்த்து பிரமித்து, பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல் கலைஞர் உயிருடன் இருக்கும் போதே தனிக்கடை விரித்த டி.ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக், சரத்குமார் போன்றோர் ஆழம் தெரியாமல் அரசியல் ஆற்றில் குதித்து மூழ்கிப்போனார்கள்.
இந்த வரிசையில் விஜயகாந்தை சேர்க்க முடியாது.
விஜயகாந்த் சினிமாக்களுக்கு ஒரு ‘ஓபனிங்’ இருப்பதுபோல், அவரது கட்சிக்கும் நல்ல ’ஓபனிங்’ இருந்தது.
2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மதுரையில் விஜயகாந்த், தேமுதிகவை தொடங்கினார்.
அடுத்த ஆண்டே, சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது.
முதல் தேர்தலிலேயே 8.34 சதவீத வாக்குகள் பெற்று, தேமுதிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
பல அரசியல் தலைவர்களை, தேமுதிகவின் வாக்கு சதவீதம் அச்சுறுத்தியது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது.
10 சதவீத வாக்குகள் பெற்ற தேமுதிக, முந்தைய சட்டசபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை காட்டிலும் சுமார் 2 சதவீதம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 41 தொகுதிகளில் போட்டியிட்டது.
29 இடங்களில் வெற்றி பெற்று, தேமுதிக எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
மலைகளில் ஏறும் வீரர்களுக்கு சறுக்கல் ஏற்படுவதுபோல், அரசியல் கட்சிகளுக்கும் தாழ்வுகள் உருவாவது சகஜம்.
அதிமுக, திமுக என எந்தக் கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.
2011-ம் ஆண்டுக்கு பிறகு தேமுதிகவுக்கு இறங்கு முகம் ஆரம்பம் ஆனது.
ஆனால் அதில் இருந்து மீள இயலவில்லை.
கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகளை விஜயகாந்த் ஒரே நேரத்தில் எதிர்த்தது மட்டுமில்லாமல், இருவரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது ஆரம்பித்தது தேமுகதிவின் வீழ்ச்சி.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 14 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற பெயரில் மூன்றாவது அணியை அமைத்தன.
முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டிட்ட தேமுதிக அனைத்திலும் தோல்வியடைந்தது.
இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட்டை இழந்தார்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.5 சதவீத வாக்குகளைப் பெற்ற தேமுதிக, இந்தத் தேர்தலில் வெறும் 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இத்தனைக்கும் 5 கட்சிகளுடன் கூட்டணி வேறு வைத்திருந்தது.
விஜயகாந்துக்கு, அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தவறான ஆலோசனைகளால், அவர் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்க மறுத்தார்.
இதனால் 2016-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பலர், திமுக, அதிமுக கட்சிகளில் ஐக்கியமானார்கள்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரன் கட்சியுடன் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தது.
எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
விஜயகாந்த் வென்ற விருத்தாலத்தில் போட்டியிட்ட அவரது மனைவி பிரேமலதா, டெபாசிட்டை பறி கொடுத்தார்.
நிர்வாகிகள் விலகல், விஜயகாந்த் உடல்நிலை, குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்களால் தேமுதிக மீள முடியாத நிலையில் இருப்பதே யதார்த்தம் எனும் சூழலில் பிரேமலதா, கட்சியின் பொதுச்செயலாளராக, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பலன் தருமா?.
தேமுதிக தொடங்கப்பட்டது முதல், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா, 2018ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையில், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார்.
அதை அதிகாரபூர்வமாக்கும் வகையில், அவர் பொதுச்செயலாளர் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதனால், கட்சியின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரப்போவதில்லை என்பதோடு, பிரேமலதா அளித்த பேட்டி, கட்சியில் உள்ள கொஞ்சநஞ்ச தொண்டர்களையும் வெறுப்படையச் செய்துவிட்டது.
“தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி தேமுதிக தான் – பிரதான கட்சிகளே நம்முடன் கூட்டு சேர மோதுகின்றன – யாரோடு கூட்டணி என்றாலும் நாம் போடும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
கூட்டணி அமையும்போது முதலில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஒப்பந்தம் போடப்படும் – அதன் பிறகே மக்களவைக்கு நாம் கேட்கும் எண்ணிக்கையில் சீட்டு கேட்டுப் பெறப்படும்” என திருவாய் மலர்ந்துள்ளார் பிரேமலதா.
தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பது உண்மைதான்.
ஆனால், சினிமா டயலாக்குகளைப் பேசி எத்தனை நாளைக்கு அவர்களை ஏமாற்ற முடியும்?
– பி.எம்.எம்.