ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும்.
ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் பெற்றவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தப் புத்தகத்தில் நூறு கட்டுரைகள், நூலாசிரியர் எதிர்கொண்ட அனுபவங்கள், கண்ணில் தென்பட்ட சில காட்சிகள், கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள்,
மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள்; கனவுகள் என அனைத்தையும் சீராக வரிசைப்படுத்தி, முறையாகக் கோர்வைப்படுத்தி, பொருத்தமான தலைப்பின் கீழ், சமச்சீராக நகைச்சுவையும் பொறுப்புணர்ச்சியும் கலந்து மிகச் சிறப்பாக இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார்.
கட்டுரையின் தமிழ் நடைக்கும், சொற்களின் சிலம்பாட்டத்துக்கும், விஷயங்களின் வீரியத்துக்கும் நூலாசிரியரை எத்துனை பாராட்டினாலும் தகும்.
இவரால் மட்டும் எப்படி இத்துனை வேடிக்கை மனிதர்களை சந்திக்க முடிந்தது என்ற வியப்பு எழுகிறது?
அத்துனையையும் எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடிந்திருக்கிறது? விரிகின்ற நூலின் பக்கங்களை மூடும்போது, நமது விழிகளும் புருவங்களும் வியப்பால் விரிகின்றன.
நூல்: வேடிக்கை மனிதர்கள்
ஆசிரியர்: வெ.இறையன்பு
பதிப்பகம்: விஜயா பதிப்பகம்
பக்கங்கள்: 214
விலை: ரூ. 234/-