ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலம்!

ஆலமர நிழலில் அணில் ஒதுங்கிய காலங்கள் அவை. ஆலமர நிழலாக அவரும், அணிலாக நானும் இருந்ததெல்லாம் இறைவன் தந்த இனிய நாட்கள். நடிகர் ரோஜாக் கூட்டம் ஸ்ரீகாந்தின் அப்பா டி.கே.சாரி நான் வணங்கும் முக்கியமானவர்களில் முதன்மையானவர்.

காலச்சக்கரம் கரடு முரடாக சுற்றுமல்லவா? எனக்கும் சுற்றியது. நிழல் தனியே, நான் தனியே என்று வெவ்வேறாக போனாலும், அன்றாடம் ஒருமுறையாவது அவரை நினைத்துக் கொள்வேன்.

என்னை முதன் முதலாக வெளிநாட்டுக்கு அனுப்பியவர், எனக்கு முதன் முதலாக செல்போன் வாங்கித் தந்தவர், எல்லா சபையிலும் என்னை முன்னிருத்திய பெரும் மனக்காரர் என்று அவரை என் உயிர் நாளங்களில் நிரப்பி வைத்திருக்கிறேன்.

நடுவே எப்போதாவது ஒரு ஹலோ சொல்லிக் கொண்டாலும், நேரில் சந்தித்து அவர் நிழல் ஒதுங்கவும் ஆசை இருந்தது. அந்த இனிய நாள் எனக்கு வாய்த்தது.

திருப்பதியில் இருக்கும் அவரைத் தேடி நான், பிஸ்மி, ராஜேஷ், செல்வா, சத்யா என்று கூட்டாக கிளம்பினோம். (வழியில் கார் டயர் பஞ்சர் ஆன போது, சட்டையை கழட்டிவிட்டு வீலும் ஸ்பானருமாக இறங்கிய ராஜேஷுக்கு நன்றி)

82 வயதை கடந்துவிட்டாலும் நினைவாற்றலில் பெரும் பழுது இல்லை. அம்மாவையும் அவரையும் சீரியல்களும், நியூஸ் சேனல்களும் சேர்ந்து வாழ வைத்துக் கொண்டிக்கின்றன. “என் சைல்ட் வுட் நினைவுகளோடு இங்கேயே இருந்திடலாம்னு முடிவெடுத்துட்டேன்” என்றார்.

ஸ்டேன்ட் பேங்க்கின் முன்னாள் மேனேஜர், பணத்திற்கு பஞ்சமில்லாத வாழ்வு என்று இருந்தவர் தன்னைவிட எளிமையானவர்களை எள் அளவும் குறைத்து நடத்தியவரில்லை.

அந்த பெரும் பண்பு நிறைந்த பெரிய மனிதருக்கு இறைவன் இன்னும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும்.

கீழ் திருப்பதியில் இருந்தே, மேல் திருப்பதியிலிருக்கும் அந்த உலக மகா இயக்கத்திற்கும் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு திருப்பதியிலிருந்து கிளம்பினேன்.

சார்… போகும்போது உங்களுக்கு பிடிச்ச நான்வெஜ் சாப்பிட்டு போங்க.

திருப்பதி டவுன்ல ரோபோன்னு ஒரு ஓட்டல் இருக்கு என்றபடி கையில் பணத்தை திணிக்க வந்த அந்த பேரன்பை என்னவென்பது?

கடல் இப்படித்தான்… அவ்வப்போது கையிலிருக்கிற கோப்பைக்கும் வரும்.

நன்றி: ஆர்.எஸ்.அந்தணன் பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment